இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் “மூக்குத்தி அவரை” பொரியல்!!
மூக்குத்தி அவரை ஒரு கொடி காய்கறி ஆகும்.இது காம்பு கத்தரி என்றும் அழைக்கப்படுகிறது.இதில் இரண்டு வகைகள் இருக்கிறது.பச்சை மூக்குத்தி அவரை,சிவப்பு மூக்குத்தி அவரை.கிராமங்களில் தானாக முளைத்து காய்த்து கிடைக்கும்.இது நம் பாரம்பரிய காய்கறிகளில் ஒன்று தான்.காலப்போக்கில் இதனை பயன்படுத்துவதை மக்கள் குறைத்து விட்டதால் இந்த மூக்குத்தி அவரை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்புகள் குறைவு.ஆனால் தற்பொழுது மீண்டும் இதன் மகத்துவம் தெரிந்து மக்கள் இதை வளர்த்து உணவில் சேர்த்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது.இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
தேவையான பொருட்கள்:-
*மூக்குத்தி அவரை – 1 கப்
*பச்சை மிளகாய் – 2
*சின்ன வெங்காயம் – 10 (நறுக்கியது)
*தேங்காய் – தேவையான அளவு (துருவியது)
*சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
*எண்ணெய் – தேவையான அளவு
*கடுகு – 1/2 தேக்கரண்டி
*உளுந்து – 1/4தேக்கரண்டி
*கருவேப்பிலை – 1 கொத்து
*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
செய்முறை:-
1)ஒரு பாத்திரம் எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் மூக்குத்தி அவரைக்காயை கொட்டி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் அதை ஒரு தட்டிற்கு மாற்றி அதை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
2)அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் அதில் கடுகு 1/2 தேக்கரண்டி மற்றும் உளுந்து 1/4 தேக்கரண்டி மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
3)பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.பின்னர் அவை நன்கு வதங்கியதும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள மூக்குத்தி அவரைக்காய்,பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.
4)பின்னர் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்,சீரகத்தூள் 1/2 தேக்கரண்டி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
5)மூக்குத்தி அவரை காய் வெந்து வந்ததும் அதில் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து மெதுவாக கிளறவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.