கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்!
அமைச்சர்கள் Vs எடப்பாடி பழனிச்சாமி Vs மு.க.ஸ்டாலின்!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில் இன்று சட்டசபையில் இது குறித்த கேள்விகளும் விவாதங்களும் எழும்பியுள்ளன.
2024 சட்டப்பேரவை இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற நிலையில் பேரவையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்த பிறகு மக்கள் அவதிப்படுகிறார்களே”இன்று கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ” கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியது அதிமுக ஆட்சி தான். கோயம்பேடு பேருந்து நிலையத்தின் தொடக்கத்தின் போது இதே போன்ற பிரச்சினைகள் தான் இருந்தது. தற்போது இயல்பு நிலைக்கு வந்தது. அதேபோல கிளாம்பாக்கம் பேருந்து நிலையமும் இயல்பு நிலைக்கு திரும்பும்” எனக் கூறினார்.
அமைச்சர் சேகர்பாபு “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்று பெயர் வைத்ததால்தான் அவதூறுகளை மனமில்லாதவர்கள் பரப்பி வருகிறார்கள்” என்று கூறினார்.
இதற்கு இடையே குறுக்கிட்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி ” தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறு சிறு பிரச்சனைகளை சரி செய்யவும், பிரச்சனைகளை சரி செய்த பின் பேருந்து நிலையத்தை திறந்து இருக்கலாம் என்று தான் குறிப்பிட்டு இருந்தேன்” என்று கூறினார்.
இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ” சிறுசிறு பிரச்சனைகள் அல்ல பெரிய பிரச்சினைகளை கூட தீர்த்து வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் கூறுங்கள் அதையும் தீர்த்து வைக்கிறோம்” எனக் கூறினார்.