விஜயகாந்த் மற்றும் ஸ்டாலின் பாணியில் காமெடி லிஸ்டில் சேர்ந்த அண்ணாமலை!!

0
212
#image_title

விஜயகாந்த் மற்றும் ஸ்டாலின் பாணியில் காமெடி லிஸ்டில் சேர்ந்த அண்ணாமலை!!

தமிழக அரசியலில் எதிர்கட்சியாக உள்ள அதிமுகவை விட பாஜக ஆளும் திமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறது. இது நாடகம் என ஒரு தரப்பினர் விமர்சனம் செய்தாலும் தற்போதைய நிலையில் பாஜகவின் விமர்சனம் ஆளும் திமுக தரப்புக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

அந்த வகையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றது முதல் திமுக மீதான எதிர்ப்பு அதிகரித்து கொண்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் ஆளுநர் மூலமான ஆட்டத்தையும் பாஜக ஆரம்பித்து விட்டது. இதற்கு முன்னர் இருந்தவர்கள் போல அல்லாமல் தற்போதைய ஆளுநர்.ஆர்.என் ரவி திமுகவினர் செய்யும் அரசியலுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் உரையை படிக்காமல் வெளியேறியதும், அந்த உரையை சபாநாயகர் அப்பாவு படித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜக தரப்பினர் திமுகவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சபாநாயகர் அப்பாவு குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த பேட்டியின்போது சபாநாயகர் அப்பாவு அவர்களை விமர்சிக்கும் போது தவறுதலாக ஆளுநர் பெயரை குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, அதாவது “சபாநாயகர் அப்பாவு நடவடிக்கைகளை பார்த்தால் அவர் குடும்பத்தில் யாருக்கேனும் தேர்தலில் சீட்டை எதிர்பார்ப்பார் என்பதை போலத்தான் இருக்கிறது” என்று கூறுவதற்கு பதில்,

“ஆளுநரின் நடவடிக்கைகளை பார்த்தால் அவர் குடும்பத்தில் யாருக்கேனும் தேர்தலில் சீட்டை எதிர்பார்ப்பார் என்பதை போலத்தான் இருக்கிறது” என்று வாய் தவறி அண்ணாமலை கூறிவிட்டார்.

இந்நிலையில் இதனை கவனித்த பாஜக நிர்வாகி கரு நாகராஜன், “அது ஆளுநர் இல்லை, அப்பாவு” என அண்ணாமலைக்கு தவறை சுட்டி காட்டியுள்ளார். இதனையடுத்து, அண்ணாமலை பெயரை மாற்றி சொல்லிவிட்டதாக கூறி, அப்பாவு மீதான தனது விமர்சனத்தை முன்வைத்தார்.

கடந்த காலங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக தலைவரும் தற்போதைய முதல்வருமான மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பொது கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் வார்த்தைகளை மாறி குறிப்பிட்டு சர்ச்சையாவது அதை எதிர்க்கட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்குவது வழக்கமானது. அந்த லிஸ்டில் தற்போது அண்ணாமலையும் சேர்ந்து விட்டாரோ என சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Savitha