தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் மீண்டும் தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவியதைப் போலவே நடப்பு ஆண்டிலும் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் கட்டாய மாஸ்க் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் என மீண்டும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் தொற்றின் தீவிரம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பொதுக்கூட்டம், பிரசாரம், வாக்கு சேகரிப்பு என ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவதும் பெருந்தொற்றை உருவாக்கும் காரணிகளாக மாறியுள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 234 ஆக உள்ளது. இதனால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 8 லட்சத்து 65 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. இன்று குணமடைந்த 634 பேருடன் சேர்த்து இதுவரை 8 லட்சத்து 45 ஆயிரத்து 812 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை, கோவை ஆகிய இரு மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் ஒரே நாளில் 458 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த பாதிப்பு 54 ஆயிரத்து 206 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கோவையில் 103 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்த பாதிப்பு 57 ஆயிரத்து 023 ஆக உள்ளது. எனவே சென்னை மற்றும் கோவையில் தீவிரமடையும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.