இந்த கட்சியில் மட்டும் அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்பு… குஷியில் தொண்டர்கள்!

0
107
Nomination
Nomination

தமிழகத்தில் நேற்றுடன் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் 234 தொகுதிகளிலும் 6,222 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இன்று நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் என முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்குவோரின் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பாஜக தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை, குஷ்பு, வானதி சீனிவாசன் உள்ளிட்டோரது வேட்புமனுக்கள் ஏற்கொள்ளப்பட்டாலும் துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் வினோஜ் பி செல்வத்தின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ம.நீ.ம வேட்பாளர் பத்மபிரியா உள்ளிட்டோரது வேட்புமனுக்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தங்களுடைய கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்த அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் எவ்வித பிரச்சனையும் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ தெரிவித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி தமிழகத்தில் ஆலந்தூர், ஆம்பூர், பாளையங்கோட்டை, திருவாரூர், மதுரை மத்தி, திருச்சி மேற்கு ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதேபோல் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலிலும் அமமுக கூட்டணியில் இணைந்து நெல்லிதோப்பு, அரியாங்குப்பம், காரைக்கால் வடக்கு, மாஹே ஆகிய 4 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில் பாளையங்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், ஆம்பூரில் மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக், தென் சென்னையில் எஸ்.டி.பி.ஐ. பொதுச்செயலாளர் முகம்மது தமீம் அன்சாரி உட்பட அனைத்து தொகுதி வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

author avatar
CineDesk