சென்னை டூ கோயம்புத்தூருக்கு கோதுமை மூட்டைகளை ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!!
சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு 57 வேகன்களில் ( பெட்டி) கோதுமை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. சோளிங்கர் ரயில் நிலையம் அருகே உள்ள மகேந்திரவாடி ரயில் நிலையத்துக்கு காலை வந்த போது, சரக்கு ரயிலின் கார்டு பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
கார்டு பெட்டியிலிருந்து உடனடியாக என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்தை தொடர்ந்து சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. இது குறித்து அரக்கோணம் ,காட்பாடி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் ஜோலார்பேட்டையிலிருந்து ஹைட்ராலிக் இயந்திரம் மற்றும் அதிநவீன கருவிகள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் 50க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
லூப் லைனில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பயணிகள் ரயில் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.