பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்த வெற்றிமாறன், ‘அது ஒரு கனாக் காலம்’ படத்தில் பணியாற்றிய போது தனுசுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக ‘பொல்லாதவன்’ பட வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திலேயே தனது முத்திரையைப் பதித்தவர், அதனைத் தொடர்ந்து மீண்டும் தனுசுடன் இணைந்த அவர் ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் மூலமாக அந்த வருடத்தின் சிறந்த இயக்குநராகத் தேசிய விருது பெற்றார். அத்துடன் தனுஷுன் சிறந்த நடிப்பை வெளிக் கொணர்ந்து அவரையும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறச் செய்தார்.
இதனால் தனுஷ் – வெற்றிமாறன் இடையே இருந்த நட்பு மேலும் இணக்கமானது. அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை அவர் இயக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகும், சில நாட்களுக்குப் பின்னர் அவர் தனுசுடன் இனைந்து பணிபுரிவதாகத் தகவல் வரும். இப்படிச் சென்று கொண்டிருந்த நிலையில் தான் சமுத்திரக்கனி, தினேஷ் ஆகியோர் நடிப்பில் ‘விசாரணை’ படத்தினை இயக்கினார்.
அந்த படம் பல நாட்டுத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட, அதுவரை இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநராக இருந்த வெற்றிமாறன், உலக அளவில் கவனம் பெற்றார். ‘விசாரணை’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. அதன் பின்னர் தனுசுடன் ‘வட சென்னை’ படத்திற்காக இனைந்தார். அந்த படத்திற்கு வட சென்னையில் வசிக்கும் மக்கள் சிலரிடம் கண்டனங்கள் எழுந்த போதும், ரசிகர்களை அந்தப் படம் வெகுவாக கவர்ந்தது.
அடுத்து ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் திட்டத்திலிருந்தவர், அதனைத் தான் அடுத்து படம் செய்ய ஒப்புக் கொண்ட தயாரிப்பாளர் தாணுவிற்கு இயக்கி தரத் திட்டமிட, தாணுவோ வெற்றிமாறனிடம் ‘வடசென்னை’ முதல் பாகத்தை இயக்கிய வுண்டர்பார் நிறுவனத்துக்கே அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்குவது தான் சரியாக இருக்கும் எனக் கூறியவர், தன்னுடைய நிறுவனத்திற்குக் குறுகிய காலத்தில் ஓர் படத்தினை இயக்கி தருமாறும் இயக்குனர் வெற்றிமாறனிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
தாணு கேட்டுக் கொண்டதன் பேரில் ‘வெக்கை’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு ‘அசுரன்’ படத்தினை இயக்கினார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, அவரின் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. தமிழ் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் விஜய் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று இருவரின் படங்களையும் அடுத்தடுத்து இயக்குவார் எனத் தகவல் வெளியானது. ‘வாடிவாசல்’ எனும் நாவலை அதே தலைப்பில் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கிறார்.
இந்நிலையில் அவர் விஜய்யுடன் இணைந்து பணிபுரியவிருந்த படம் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விசாரித்த போது, விஜய்யை சந்தித்து கதையை விவாதித்துள்ளார் வெற்றிமாறன். விஜய்க்கும் கதை பிடித்துப் போக, தான் அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்குப் படம் நடித்துத் தர ஒப்பந்த செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களைச் சந்தித்து அடுத்த கட்ட வேலைகளைக் கவனிக்குமாறும் விஜய் வெற்றிமாறனிடம் கூறியுள்ளார்.
ஆனால் வெற்றிமாறனோ தான் தயாரிப்பாளர் தாணுவிற்கு இந்த படத்தினை இயக்கி தருவதாக உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். விஜய் தான் அளித்த உறுதியை மீறி மற்றொரு தயாரிப்பாளருக்கு அடுத்த படம் நடித்துத் தர வாய்ப்பில்லை எனக் கூற, வெற்றிமாறன் தாணு தான் தயாரிப்பாளர் என்று விடாப்பிடியாக நிற்க, விஜய் வேறு வழியின்றி வெற்றிமாறன் வேண்டாம் என முடிவெடுத்ததாகக் கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 32 லட்சத்து 19 ஆயிரத்து 424 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 10 லட்சத்து 293 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.
இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 32,034 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 1,012 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 7,800 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):
மகாராஷ்டிரா – 9,918/400 குஜராத் – 3,744/181 டெல்லி – 3,314/54 ராஜஸ்தான் – 2,393/52 மத்திய பிரதேசம் – 2,561/119 உத்தரபிரதேசம் – 2,115/36 தமிழ்நாடு – 2,162/27 தெலுங்கானா – 1012/26 கேரளா – 495/04 ஆந்திர பிரதேசம் – 1,332/31 கர்நாடகா – 534/21 ஜம்மு & காஷ்மீர் – 581/08 மேற்கு வங்கம் – 725/22 பஞ்சாப் – 375/19 ஹரியானா – 310/03 பீகார் – 392/02 அசாம் – 38/01 சண்டிகர் -56/0 உத்தர்கண்ட் – 54/0 லடாக் – 22/0 அந்தமான் & நிக்கோபார் -27/0 சத்தீஸ்கர் – 38/01 கோவா – 07/0 இமாச்சல பிரதேசம் – 40/01 ஒடிசா – 119/01 பாண்டிச்சேரி – 08/0 மணிப்பூர் – 02/0 ஜார்க்கண்ட் – 105/03 மிசோரம் – 01/0 அருணாச்சலப் பிரதேசம் – 1/0 திரிபுரா – 02/0 நாகாலாந்து – 01/0/01 மேகாலயா – 12/01
தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 27 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 1,210 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);
இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில், விநோத் இயக்கத்தில், அஜீத், ஹூமா குரேஷி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இப்படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு ஐதராபாதிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்ற நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது. செப்டம்பர் வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் முக்கிய சண்டை காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவிருந்தது. ஆனால் தற்போது கொரொனா காரணமாக எந்த ஓர் நாட்டிற்க்கும் செல்ல முடியாத நிலை நீடிப்பதால், செப்டம்பரில் படம் வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
மற்றொரு புறம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. ஆகஸ்ட் வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ரஜினி 50 நாட்கள் நடித்தால் மட்டுமே படப்பிடிப்பு நிறைவடையும் என்ற நிலை இருப்பதால், இதன் வெளியீட்டு தேதியை தள்ள வைக்க தீர்மானித்துள்ளது இதன் தயாரிப்பு தரப்பு.
நிபுணர்களின் கனிப்பு படி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தான் கொரோனா பிடியிலிருந்து இந்தியா மீளும் என கூறப்படுகிறது. இதனால் அக்டோபர் மாதத்திற்க்கு பின்னர் படப்பிட்ப்பை நடத்த திட்டமிட்டு வரும் இரண்டு படக்குழுவும் பட வெளியீட்டை பொங்கலுக்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி படத்துடன் அஜீத் படம் மொதுமா என கேள்வி எழுப்புபவர்களுக்கு 2019 பொங்கலை நினைவு படுத்துகிறோம். அந்த பொங்கலுக்கு தான் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படமும், அஜீத்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படமும் வெளியானது. இரண்டு படங்களுமே வெற்றி பெற்றாலும் விஸ்வாசம் வசூலில் பேட்டயை முந்தி சாதனை படைத்தது.
மேலும் அஜீத் நடித்த படங்கள் பொங்கலுக்கு வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளதால் தயாரிப்பு தரப்பு பொங்கல் வெளியீடு சரியாக இருக்கும் என கருதுகிறதாம். ‘பேட்டை’ படத்தினை தயாரித்த சன் பிக்சர்ஸ் தான் ‘அண்ணாத்த’ படத்தினை தயாரித்து வருவதால், விஸ்வாசம் இயக்குநரான சிவாவை வைத்தே அஜீத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என களத்திலிறங்க தயாராகி விட்டதாம்.
பணிகளுக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு அறிவித்த புதிய உத்தரவு
கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர பஸ், ரயில் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக சொந்த ஊரைவிட்டு சென்று பல்வேறு மாநிலங்களிலும் வேலை செய்து வரும் பெரும்பாலான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் இந்த நேரத்தில் தவித்து வருகின்றனர். அவர்களை போலவே பிற மாநிலங்களில் தங்கி படிக்க சென்ற மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அங்கேயே போதுமான வசதிகளின்றி தவித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கட்டிட பணி உள்ளிட்ட வேலைகளை செய்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் ஆந்திரா, கர்நாடகம் மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இது போல ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆங்காங்கே சிறப்பு முகாம்களில் தங்கி இருக்கிறார்கள். இங்கிருந்து அரசின் கட்டுப்பாடுகளை மீறி தங்களது சொந்த மாநிலத்துக்கு செல்ல முயற்சிக்கும் தொழிலாளர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
இவ்வாறு வெளிமாநில தொழிலாளர்களை நீண்ட நாட்கள் இது போன்ற முகாம்களில் தங்க வைக்காமல் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. ஏற்கனவே இந்த பிரச்சினை தொடர்பாகஉச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது .
இதுபோன்ற தற்காலிக முகாம்களில் வெளிமாநில தொழிலாளர்களை ஒரு மாதத்துக்கும் மேலாக வைத்து பராமரிப்பது என்பது ஒவ்வொரு மாநில அரசுக்கும் பெரும் பிரச்சினையாக உருவாகி வருவது மட்டுமில்லாமல், அவர்களுக்கு கூடுதல் நிதிச்சுமையும் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், அவர்களை தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தியது.
இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருக்கும் தங்கள் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை திரும்ப அவர்களது மாநிலத்திற்க்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தி வைத்து பராமரிப்பதில் மீண்டும் ஒவ்வொரு மாநில அரசுக்கு பிரச்சினை உள்ளது. இதனால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த விவகாரத்தை எப்படி கையாளுவது என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-
நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கிதவித்து வருகின்றனர். தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அவர்களை அனுமதிக்க வேண்டும். இதற்காக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தனி அதிகாரிகளை நியமித்து, அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தங்கள் மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்து, அவர்களில் யார்-யாரெல்லாம் சொந்த ஊர் செல்ல விரும்புகிறார்கள் என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டு அறியவேண்டும்.
அவர்களில் கொரோனா வைரஸ் தொற்று இல்லாதவர்களை மட்டும் பேருந்துகளில் ஏற்றி அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பேருந்துகளில் தொழிலாளர்கள் முக கவசம் அணிந்து, குறிப்பிட்ட இடைவெளியில் அமர்ந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இவர்கள் பயணம் செய்யும் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அந்தபேருந்துகள் பல்வேறு மாநிலங்கள் வழியாகவும் தடையின்றி செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களை அனுப்பி வைக்கும் முன்னால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடமும் இதுபற்றி கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு அனுப்பப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்தை சென்று அடைந்ததும், அங்குள்ள அந்த மாநில சுகாதார அதிகாரிகள் அவர்களை முறையாக பரிசோதித்து அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அதற்கான வாய்ப்பு இல்லையென்றால் அவர்களை மொத்தமாகவும் தனிமைப்படுத்தி வைக்கலாம். அவ்வப்போது அவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனையும் நடத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
இவ்வாறே கொரோனா வைரஸ் பாதிப்பினால் பெரும்பாலான உலக நாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ள ஏராளமான இந்தியர்கள் அங்கிருந்து தங்களுடைய தாய்நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். இது தொடர்பாகவும், கொரோனா பாதிப்புகள் குறித்தும் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நயான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தலைவர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, மே 3 ஆம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு வளைகுடா நாடுகளுக்கு இந்திய கடற்படை கப்பல்கள், விமானங்கள் மற்றும் ராணுவ சரக்கு விமானங்களை அனுப்பி, அங்கு தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான ஏற்பாடுகளை செய்யுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன
வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களை அழைத்து வர தங்கள் தளங்களை தயாராக வைத்திருக்குமாறு விமானப்படை, கடற்படைகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டு இருப்பதாகவும், இவ்வாறு வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வந்த பின்னர் ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிந்து விட்டால், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களையெல்லாம் உடனடியாக மீட்டு இந்தியா அழைத்து வருவதில் தாமதம் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விளக்கமளித்த அரசு
மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை வாரியம் கொண்டு வரப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில் “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி நீரிலிருந்து, அதிமுக அரசு உரிய வகையில் புள்ளிவிவரங்களை எடுத்து வைத்து வாதிடாமல், உச்ச நீதிமன்றத்தில் 14.75 டிஎம்சி நீரை கோட்டை விட்டது. காவிரி நடுவர் மன்றம் தந்த “காவிரி மேலாண்மை வாரியத்தையும்” கை நழுவவிட்டது. 2018, பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பு அடிப்படையிலான காவிரி நதிநீர் பங்கீட்டை செயல்படுத்துவதற்கு ஒரு “வரைவுத் திட்டத்தை” 6 வாரத்திற்குள் உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் 3 மாதத்திற்கும் மேலாக மத்திய அரசு தாமதம் செய்தது.
திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நடத்திய “காவிரி உரிமை மீட்புப் பயணத்தின்” எழுச்சி காரணமாகவும், உச்ச நீதிமன்றத்தில் எழுந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சமாளிக்கவும், 2018, மே 18ம் ேததி “காவிரி வரைவு திட்டத்தை” அறிவித்தது மத்திய பாஜ அரசு. இதை தட்டி கேட்க வக்கில்லாமல் கண்ணாமூச்சி விளையாட்டு நடத்தி கொண்டிருந்தது தமிழக அரசு.
இந்த ஆணையத்திற்கும் முழு நேர தலைவரை நியமிக்காமல், மத்திய நீர்ப்பாசன வளர்ச்சி துறை செயலாளரையே “பொறுப்பு தலைவராக” நியமித்து இன்றுவரை மத்திய பாஜ அரசு இந்த அமைப்பையே முற்றிலும் முடக்கி விட்டது. மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுக்கவோ, தமிழக விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கவோ, தமிழகத்தின் நீர் உரிமையை நிலைநாட்டவோ இந்த ஆணையமும், காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவும் எதுவுமே செய்யவில்லை. இந்த இரு அமைப்புகளும் “கூடி கலையும் அமைப்புகளாகவே” இன்றுவரை இருந்து வருகின்றன.
தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை காவு கொடுத்து விட்டு, இந்த “உரிமை பறிப்பு வைபவங்களை” எல்லாம் ஒய்யாரமாக அனுமதித்து – மத்திய பாஜ அரசுக்கு பவ்வியமாக – பக்கபலமாக அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது அதிமுக அரசு. வெறும் “எலும்புக்கூடு” அமைப்பான காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் உள்ள காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு இதுவரை 20க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தி விட்டது.
ஆனால், இந்த குழுவின் எந்த முடிவையும் கர்நாடக அரசும் மதிக்கவில்லை; உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியின்படி மத்திய பாஜ அரசும் உரிய அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்ற முன்வரவில்லை. கலைஞர் தலைமையிலான திமுக அரசு நடுவர் மன்றத்தை அமைத்து கொடுத்து – வலுவான வாதங்கள் மூலம் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை தமிழகம் பெற்றும் – “மழை பெய்தால் மட்டுமே காவிரி தண்ணீர்” என்ற மன்னிக்க முடியாத துரோகத்தை தமிழகத்திற்கு மத்திய பாஜ அரசு முன்மொழிய – அதை வழிமொழிந்து – விவசாயிகளையும், வேளாண் தொழிலையும் வஞ்சித்து கை கட்டி நிற்கிறார் முதல்வர் எடப்பாடி.
இப்போது காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தையே மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து – அது தன்னாட்சி அமைப்பு அல்ல – மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட “கைகட்டி” நிற்கும் அமைப்பு என்ற நிலையை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. இந்த அடாவடியான செயல், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தட்டி பறிக்கும் செயல். காவிரி நீரை நம்பியிருக்கும் வேளாண்மையை அடியோடு வேரறுக்கும் மனிதாபிமானமற்ற செயல். தமிழகத்தின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற, கண்டனத்திற்குரிய செயல்.
ஆகவே, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர பிறப்பிக்கப்பட்டுள்ள அரசிதழை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாய பேரமைப்புகளையும் சேர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும். முதல்வர் பழனிசாமி உடனடியாக தமிழக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்” என கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக தமிழக அரசுக்கு மேலும் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதற்கு விளகம்மளிக்கும் வகையில் தமிழக பொதுப்பணித் துறை விளக்கமளித்துள்ளது.
அதில் “தமிழ்நாடு அரசு எடுத்த இடைவிடாத சட்டபோராட்டத்தின் விளைவாக காவேரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அதை அப்போதைய நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் 1.6.2018 அன்று மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டது.
அதில் ஆணையத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அனைத்தும் காவேரி நடுவர் மன்றம் 5.2.2007-ல் பிறப்பித்த இறுதி ஆணையை கருத்தில் கொண்டு தான் செயல்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காவேரி நீர் மேலாண்மை ஆணையம் பிரிவு 15-ன்படி அது எடுக்கும் முடிவுகள் இறுதியானது என்றும், அது படுகை மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது.
மத்திய அரசு மே, 2019-ல் நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்புறவு அமைச்சகம் ஆகிய இரண்டையும் இணைத்து புதிதாக ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கியது. இதனை அடுத்து மத்திய அரசு ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்துள்ள பொருண்மைகள் குறித்து உள்ள விதிகளுக்கு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது.
இதில் ஜல் சக்தி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இவ்வமைச்சகத்தால் கையாளக்கூடிய பல பொருண்மைகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா வாரியமும் மற்றும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஏற்படுத்தப்பட்டுள்ள காவேரி நீர் மேலாண்மை ஆணையமும் அடங்கும்.
மேற்கூறியவாறு ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகள், நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகள் ஆகியவைகளை கையாளக்கூடிய பொருண்மைகள் குறித்து விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஒரு நிர்வாக நடவடிக்கையாகும். பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய சம்பளம் மற்றும் இதர நிர்வாகங்களை மேற்கொள்வதற்கான ஒரு வழக்கமான நடைமுறையாகும்.
இதனால், காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.இது குறித்து மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, காவேரி நதிநீரை நம்பியிருக்கும் விவசாயிகளின் நலன்களுக்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தப்படுகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மார்ச் மாதத்தில் மூடப்பட்டன.
12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டும் நடைபெற்ற நிலையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் நேரடியாகத் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது. இன்னும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத நிலையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் தேர்வு நடத்துவதா வேண்டாமா என்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அதே போல் கல்லூரிகளுக்கும் தேர்வு நடைபெறாத நிலையில், கொரோனா கட்டுக்குள் வந்து கல்லூரிகள் திறந்த பின் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது மற்றும் தேர்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு ஆய்வு செய்தது. இதனடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகளைத் திறக்கலாம் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ததாகத் தகவல் வெளியானது.
இந்தநிலையில் இந்தியா முழுவதும் கல்லூரிகளை நெறிமுறை படுத்தும் UGC எனப்படும் பல்லைக்கழக மானியக்குழு, நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
அதில் கீழ்கணட நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன.
கல்லூரிகளுக்கு அடுத்த கல்வியாண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும்.
முதலாமாண்டில் சேரும் மாணவர்களுக்குச் செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் துவங்கும்.
12-ம் வகுப்புக்குப் பதிலாக நடத்தப்படும் மாநிலங்களில் பியூசி வகுப்புகளுக்கான இண்டர்மீடியட் செமஸ்டர் நடத்த வேண்டாம். அதற்கான மதிப் பெண் அகமதிப்பீடு அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும்.
கரோனா சூழல் சரியானால் ஜூலை மாதம் டெர்மினல் செமஸ்டர் தேர்வை நடத்திக் கொள்ளலாம். அதேசமயம் நிலைமை சீரடையாவிட்டால் பின்னர் நடத்திக் கொள்ளலாம்.
இதுமட்டுமின்றி பல்கலைக்கழகங்கள் வேண்டுமென்றால் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்திக் கொள்ளலாம்.
தேர்வுக்கான பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும், தேர்வும் 3 மணி நேரத்திற்குப் பதிலாக 2 மணி நேரமாக குறைக்கப் பட வேண்டும்.
சென்னையை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநகரமாக மாற்ற அன்புமணி ராமதாஸ் கூறும் ஆலோசனை
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் வீடு, வீடாக ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் சோதனைகளை அதிகரிக்க வேண்டும்! என்றும் பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், நேற்று ஒரு நாளில் மட்டும் 103 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதும் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன. ஒட்டு மொத்த தமிழகத்திலும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சென்னையில் பரவல் அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் நேற்று ஒரு நாளில் மட்டும் 121 பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2058-ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 7-ஆம் தேதி தமிழகத்தின் முதன்முறையாக கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இப்போது தான் மிக அதிகமாக ஒரே நாளில் 121 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களிலும் 103 பேர், அதாவது 85.12 விழுக்காட்டினர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673-ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டாவது ஊரடங்கு தொடங்கிய ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் நேற்று வரையிலான இரு வாரங்களில் தமிழகத்தில் 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேல், அதாவது 462 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். முதல் ஊரடங்கு காலத்துடன் ஒப்பிடும் போது இரண்டாவது ஊரடங்கு காலத்தில் நேற்று வரை ஒட்டுமொத்த தமிழகத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் அளவு 70% மட்டுமே அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில் சென்னையில் இந்த அளவு 218% அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும் போது சென்னையில் நோய்ப்பரவல் வேகம் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. எண்ணிக்கை அதிகமாக தெரிந்தாலும் கூட, அதற்கான காரணங்கள் உள்ளன.
கொரோனா வைரஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மராட்டியம், குஜராத், தில்லி, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் மற்ற பகுதிகளை விட தலைநகரத்தில் தான் அதிக பாதிப்பு உள்ளன. ஊரகப் பகுதிகளில் இயல்பாக காணப்படும் கட்டுப்பாடுகள் தலைநகரங்களில் இருக்காது என்பதாலும், தலைநகரப் பகுதிகளில் மக்கள்தொகை எண்ணிக்கையும், மக்கள் அடர்த்தியும் அதிகம் என்பதாலும் கொரோனா வைரஸ் நோய்ப்பரவல் வேகம் சென்னையில் மிகவும் அதிகமாக உள்ளது. நோய்த்தடுப்பு உத்திகளை மாற்றியமைத்து செயல்படுத்துவதன் மூலம் தான் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தீவிர நோய்பாதிப்பு (Containment Area) பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அந்தப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் போதிலும், அந்தப் பகுதிகளைத் தாண்டி நோய் பரவத் தொடங்கி விட்டதை அறிய முடிகிறது. இதைக் கட்டுப்படுத்த அதிக எண்ணிக்கையிலான சுகாதாரப் பணியாளர்களை களமிறக்கி, வீடு வீடாக சென்று எவருக்கேனும் கொரோனா அறிகுறி உள்ளதா? என்பதை அடையாளம் கண்டு, அவர்களுக்கு கொரோனா சோதனை உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் சிறந்த வழியாகும்.
கொரோனா பாதிப்பை அறிய சென்னையில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக மாநாகராட்சி தரப்பில் கூறப்படும் போதிலும், அக்கணக்கெடுப்பு முழுமையானது அல்ல. வீடு, வீடாக சென்று வீட்டில் உள்ளவர்களின் பெயர்களை ஒரு முறை குறித்துக் கொண்டு, அடுத்தடுத்த நாட்களில் அதே பட்டியலை மறு உருவாக்கம் செய்து தரும் பணியாக, பெயரளவில் மட்டுமே அது நடைபெறுகிறது. அந்த ஆய்வின் மூலம் கொரோனா பாதித்தவர்களை கண்டுபிடிக்க முடியாது என்பதால், கொரோனா குறித்த பொது அறிவு கொண்ட பணியாளர்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
சென்னையில் அதிக எண்ணிக்கையில் நோய்த்தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதற்கு கொரோனா ஆய்வுகளின் எண்ணிக்கை பத்து லட்சத்துக்கு 3300 என்ற அளவுக்கு அதிகரிக்கப்பட்டிருப்பதும் காரணம் ஆகும். இந்த எண்ணிக்கையை முதலில் இரு மடங்காகவும், அடுத்த சில நாட்களில் மூன்று மடங்காகவும் அதிகரித்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அதனால் மக்களிடம் அச்சம் ஏற்படாமல் தடுக்க அதற்கான காரணங்களை அரசு விளக்க வேண்டும்.
சென்னையில் நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு சென்னை மாநகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். எந்தத் தேவைக்காகவும் மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை நிலையங்களை அதிகரிக்க வேண்டும்.
தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கொரோனா நோய் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையிலும் மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இயல்பு நிலையை ஏற்படுத்த முடியும். எனவே, வீடு வீடாக ஆய்வு, அதிக எண்ணிக்கையிலான சோதனைகள், சமூக இடைவெளியை பராமரித்தல் – கபசுரகுடிநீர் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் சென்னையை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநகரமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதி ஜங்கனசேரியை சேர்ந்த ஸ்ரீஜித்து என்ற 30 வயதான வாலிபர் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அஞ்சனா என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது, அதில் வரும் ஏப்ரல் 26ம் தேதி என்று திருமண தேதி குறிக்கப்பட்டது.
இதற்கு இடையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியோடு முடிந்துவிடும் என்று எதிர்பார்த்த வேளையில் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
முன்னதாக மணப்பெண் உத்திர பிரதேசத்தில் ஐடி கம்பெனி ஊழியராக பணியாற்றி வந்ததால் அரசின் உத்தரவை மீறி திருமணத்திற்கு சரியான நேரத்தில் வரமுடியவில்லை. இதனால் உறவினர்கள் கூடி மணமக்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே நிச்சயித்த தேதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
பொதுவாக கேரள மாநிலத்தில் திருமணம் என்றால் வெகு விமரிசையாக கேரள மேளம், விதவிதமான உணவுடன் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த திருமணத்திற்கு எந்த ஏற்பாடும் இல்லாமல் அவரவர் வீட்டில் மணமகள் மற்றும் மணமகன் தயாராய் இருந்தனர்.
மணமக்கள் மற்றும் உறவினர்களை இணைக்கும் விதமாக அனைவரும் வாட்ஸ்அப் வீடியோ காலில் இணைந்து கொண்டனர். கேரளாவில் மணமகன் ஸ்ரீஜித் தான் வைத்திருந்த தாலியை செல்போனுக்கு மாட்டினார், அதே நேரத்தில் அஞ்சனா தான் வைத்திருந்த தங்க தாலியை தன்னுடைய கழுத்தில் மாட்டிக்கொண்டார்.
இது ஒரு பக்கம் இருக்க இந்த திருமணத்தை பற்றி தெரிந்து கொண்ட நெட்டிசன்கள் அட ச்சே ஊரடங்கில் இந்த அலப்பறை வேறயாடா எனறு கலாய்த்தனர். என்ன தான் திருமணம் நடந்து முடிந்தாலும் ஊரடங்கு முடியும் வரை மணமகன் செல்போனோடு தான் குடும்பம் நடத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து வரும் மத்திய அரசு செய்த அடுத்த அநீதி! கண்டிக்கும் ஸ்டாலின்
மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்நாட்டின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்து வரும் மத்திய அரசு தமிழகத்திற்கு செய்த அடுத்த அநீதி குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையேயான காவிரி பிரச்சனையை தீர்க்க அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்திருப்பது தமிழகத்தின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற செயல். எனவே முதலமைச்சர் உடனடியாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, இந்த முடிவினை கைவிட வேண்டும் என்று அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.
இந்த அரசிதழ் உடனடியாக திரும்பப் பெறப்படவில்லை என்றால் மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திமு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தன்னாட்சி அமைப்பாக இருக்க வேண்டிய “காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை”, மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்து ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தைச் சிதைப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமைகளையும், தமிழக விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளையும் ஒவ்வொன்றாகப் பறித்து வரும் மத்திய அரசு, தற்போது இந்த “காவிரி ஆணையத்தையும்” தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பது அநீதியானது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி நீரிலிருந்து, அ.தி.மு.க. அரசு உரிய வகையில் புள்ளிவிவரங்களை எடுத்து வைத்து வாதிடாமல், உச்சநீதிமன்றத்தில் 14.75 டி.எம்.சி நீரைக் கோட்டைவிட்டது. காவிரி நடுவர் மன்றம் தந்த “காவிரி மேலாண்மை வாரியத்தையும்” கை நழுவவிட்டது. 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்து – அதன் அடிப்படையிலான காவிரி நதிநீர்ப் பங்கீட்டைச் செயல்படுத்துவதற்கு ஒரு “வரைவுத் திட்டத்தை” ஆறு வாரத்திற்குள் உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் – பல்வேறு காரணங்களைச் சொல்லி – அந்த காவிரி இறுதி வரைவுத் திட்டத்தை மூன்று மாதத்திற்கும் மேலாக மத்திய அரசு தாமதம் செய்தது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் நடத்திய “காவிரி உரிமை மீட்புப் பயணத்தின்” எழுச்சி காரணமாகவும், உச்சநீதிமன்றத்தில் எழுந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சமாளிக்கவும், ஒருவழியாக 18.5.2018 அன்று “காவிரி வரைவுத் திட்டத்தை” அறிவித்தது மத்திய பா.ஜ.க. அரசு.
இந்த தாமதத்தைக் கூட தட்டிக் கேட்க வக்கில்லாமல் – மத்திய பா.ஜ.க. அரசுடன் மாநிலத்தின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரிப் பிரச்சினையில் கண்ணாமூச்சி விளையாட்டு நடத்திக் கொண்டிருந்தது இங்குள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு.
காவிரி வரைவுத் திட்டத்தின் அடிப்படையில், “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்காமல்; உப்புச்சப்பில்லாத – உதவாக்கரையான – ஒரு பல்லில்லா “காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம்” அமைக்க அ.தி.மு.க. அரசு மத்திய பா.ஜ.க. அரசுக்கு மனமுவந்து ஒப்புதல் கொடுத்தது. அத்துடன் பா.ஜ.க. அரசுக்கு ஜால்ரா போடும் வகையில் “சகல அதிகாரங்களும் பெற்ற அமைப்பை உருவாக்கி விட்டோம்” என்று முதலமைச்சர் திரு. பழனிசாமியே வாதிட்டு, தன் முதுகில் தானே தட்டிக் கொடுத்துப் பாராட்டிக் கொண்டார்.
காவிரி வரைவுத் திட்டத்தில் உள்ள அனைத்து முரண்பாடுகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்றத்தில் – அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் – மக்கள் மன்றத்தில் எல்லாம் சுட்டிக்காட்டியும், அதையெல்லாம் நிராகரித்து, “அதிகாரம் பெற்ற அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது” என்று “பொய்வாதம்” செய்து பொழுதைப் போக்கினார் முதலமைச்சர் பழனிசாமி.
“பொம்மை” அமைப்பாக அமைக்கப்பட்ட இந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் முழு நேரத் தலைவரை நியமிக்காமல், மத்திய நீர்ப்பாசன வளர்ச்சித்துறையின் செயலாளரையே “பொறுப்புத் தலைவராக” நியமித்து இன்றுவரை மத்திய பா.ஜ.க. அரசு இந்த அமைப்பையே முற்றிலும் முடக்கி விட்டது.
கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்பது போல், மேகதாது அணை கட்டும் திட்டத்தைத் தடுக்கவோ, தமிழக விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவோ, தமிழ்நாட்டின் நீர் உரிமையை நிலைநாட்டவோ இந்த ஆணையமும், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவும் எதுவுமே செய்யவில்லை. இந்த இரு அமைப்புகளும் “கூடிக் கலையும் அமைப்புகளாகவே” இன்றுவரை இருந்து வருகின்றன.
தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளைக் காவு கொடுத்து விட்டு, இந்த “உரிமைப் பறிப்பு வைபவங்களை” எல்லாம் ஒய்யாரமாக அனுமதித்து – மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பவ்வியமாக – பக்கபலமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. அரசு.
வெறும் “எலும்புக்கூடு” அமைப்பான காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் உள்ள காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு இதுவரை 20-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தி விட்டது. ஆனால், இந்தக் குழுவின் எந்த முடிவையும் கர்நாடக அரசும் மதிக்கவில்லை; உச்சநீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியின்படி மத்திய பா.ஜ.க. அரசும் உரிய அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்ற முன்வரவில்லை.
முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு நடுவர் மன்றத்தை அமைத்துக் கொடுத்து – வலுவான வாதங்கள் மூலம் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைத் தமிழகம் பெற்றும் – “மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்குக் காவிரித் தண்ணீர்” என்ற மன்னிக்க முடியாத துரோகத்தைத் தமிழ்நாட்டிற்கு மத்திய பா.ஜ.க. அரசு முன்மொழிய – அதை வழிமொழிந்து – விவசாயிகளையும், வேளாண் தொழிலையும் வஞ்சித்து கை கட்டி நிற்கிறார் “விவசாயி” புகழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
தமிழக காவிரி நதிநீர் உரிமையை ஒவ்வொரு கட்டமாக விட்டுக் கொடுத்து – நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஆகியவற்றின் பயன்களைத் தமிழக விவசாயிகள் அனுபவிக்க விடாமல் செய்த குற்றத்தை அ.தி.மு.க. அரசு செய்திருக்கிறது.
இது போதாது என்று, இப்போது காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தையே மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து – அது தன்னாட்சி அமைப்பு அல்ல – மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட “கைகட்டி” நிற்கும் அமைப்பு என்ற நிலையை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.
இந்த அடாவடியான செயல், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தட்டிப் பறிக்கும் செயல்!
காவிரி நீரை நம்பியிருக்கும் வேளாண்மையை அடியோடு வேரறுக்கும் மனிதாபிமானமற்ற செயல்!
தமிழகத்தின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற, கண்டனத்திற்குரிய செயல் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பிறப்பிக்கப்பட்டுள்ள 24.4.2020-ஆம் தேதியிட்ட அரசிதழை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
காவிரி நதிநீர் உரிமை பறிபோவதை இனிமேலும் தமிழகம் பொறுத்துக் கொள்ள முடியாது.
இந்த அரசிதழ் திரும்பப் பெறப்படவில்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாயப் பேரமைப்புகளையும் ஒன்றுசேர்த்து மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்துள்ள முடிவினை கைவிட வேண்டும் என்று அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மே 2ம் தேதி முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – ஊரடங்கு குறித்து ஆலோசனை
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாக பரவுவதைத் தடுக்கும் வகையில் முதற்கட்டமாகக் கடந்த மாதம் 24ம் தேதியிலிருந்து இம்மாதம் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தது.
இந்த காலகட்டத்தில் கொரோனா சமூக பரவல் ஏற்படாமல் இருந்திருந்தாலும் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் இரண்டாம் முறையாக ஏப்ரல் 14ம் தேதியிலிருந்து மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா தாகத்திற்கு ஏற்றவாறு அந்தந்த மாநில முதல்வர்கள் ஊரடங்கைத் தளர்த்திக் கொள்ளவோ, கடுமையாக்கிக் கொள்ளவோ அதிகாரமளிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தது. நாளை முதல் மும்பு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போதைய நிலை குறித்து பல்வேறு நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை நடத்திய நிலையில் வரும் மே 3ம் தேதிக்கு மேல் ஊரடங்கை நீட்டிப்பதா என்பதைக் குறித்து விவாதிக்க மே 2ம் தேதி முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூடி விவாதித்து முடிவெடுக்கவிருக்கிறது.