உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார்.
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தற்போது இருக்கும் நிலையில் நீட்டிக்கப்படலாம் என்றே அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தாலும் அவர்களுக்கு போதிய ஓய்வு இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது தமிழக அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது, அதில் ஊரடங்கு காலத்தில் காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கியுள்ளது. அந்த உத்தரவில் ஓய்வு பெற்ற மத்திய ஆயுத படையினருக்கு மட்டுமே குறிப்பிட்டு வாய்ப்பை வழங்கியுள்ளது மாநில அரசு.
அவர்களுக்கு வயது வரம்பு 40 முதல் 50 வரை இருக்க வேண்டும் என்று அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாநில காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகும்படி அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா சமூக பரவலைத் தடுக்கும் பொருட்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றும் வகையில் திட்டமிட வேண்டும் எனக் கடந்த மாதம் அறிவித்திருந்தது.
பெரும்பாலான IT மற்றும் BPO நிறுவனங்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னர் ஊரடங்கு தொடருமா, அல்லது விலக்கிக் கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இந்நிலையில் IT ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் “கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளிலும் வேலை செய்யும் பாணி மாறிவிட்டது. உலகெங்கிலும் 80 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்கின்றனர். நம் நாட்டிலும், ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற இம்மாதம் இறுதி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அது தற்போது நீட்டிக்கப்படுகிறது. வீட்டிலிருந்து பணி செய்யும் ஐ.டி மற்றும் பி.பி.ஓ ஊழியர்கள் ஜூலை 31 வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம். ஆன்லைன் சுகாதார சேவைகளைத் தென் மாநிலங்கள் சிறப்பாகக் கையாளுகின்றன. மற்ற மாநிலங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும்.
ஊரடங்குக்குப் பின் பணி நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்க, பாரத் நெட் பிராட்பேண்ட் சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்கக் குழு அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
2021 ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் – ஒருங்கிணைப்பு தலைவர் தகவல்
32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் ஆகஸ்ட் 9ம் தேதி துவங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான யோஷிரோ மோரி, கொரொனா பரவல் கட்டுக்குள் வந்து நிலைமை சீரடைந்தால் மட்டுமே அடுத்த ஆண்டு ஒலிம்பிக் நடக்கும் என்றும், நிலைமை இப்படியே தொடர்ந்தால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
எனவே கொரொனாவிற்க்கு மருந்து கண்டறியப்பட்டு நடைமுறைக்கு வந்தால் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
T20 உலக கோப்பையை இப்படி நடத்துங்கள் – கவாஸ்கர் கூறிய யோசனை
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் T20 உலகக் கோப்பை நடத்தத் திட்டமிடப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக உலகெங்கிலும் கொரோனா பரவ பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அறிவித்துப் பின்பற்றி வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு வெளிநாட்டிலிருந்து பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மார்ச் மாதம் துவங்கவிருந்த ஐபில் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் T20 உலகக் கோப்பையைத் திட்டமிட்டபடி நடத்த யோசனை முன் வைத்துள்ளார்.
அதன் படி இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் T20 உலகக் கோப்பையை இந்தியாவிற்கு மாற்றி விட்டு, அடுத்த ஆண்டு இந்தியாவில் திட்டமிடப்பட்டிருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவிற்கு மாற்றும் வகையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என யோசனை தெரிவித்துள்ளார். கவாஸ்கர் கூறிய இந்த யோசனையை இரண்டு மட்டைப்பந்து வாரியங்களும் ஏற்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மாதம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நீடித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு தொடர்பாகக் கள நிலவரத்தை ஆராய்ந்து அந்தந்த மாநில முதல்வர்கள் முடிவெடுக்க மத்திய அரசு அதிகாரம் வழங்கியிருந்தது
இந்நிலையில் கடந்த 25ம் தேதி ஊரடங்கில் மேலும் சில கட்டுப்பாட்டுக்களை விதித்த தமிழக அரசு 26ம் தேதி முதல் 29ம் தேதி முழு ஊரடங்கை அறிவித்து ஆனை வெளியிட்டிருந்தது. இதனால் தள்ளுவண்டிகளில் மட்டுமே காய்கறி மற்றும் பழங்களை விற்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
இன்றுடன் அரசு அறிவித்த ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், இதற்கு முன் இருந்த ஊரடங்கின் நிலை நீடிக்கும் எனத தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்
“சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில், இன்று (புதன்கிழமை) இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், நாளை முதல் முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும்.
எனினும், நாளை (வியாழக்கிழமை) மட்டும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.
மே 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், அதிதீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய்த் தொற்று என்பதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அவசரம் காட்டாமல், நிதானமாக, பொறுமை காத்து, சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்”. என்று கூறப்பட்டுள்ளது.
கதாநாயகன் வேடமோ, குணச்சித்திர வேடமோ, வில்லன் வேடமோ அதை எளிதாக கையாண்டவர் நடிகர் இர்ஃபான் கான். தனது நடிப்பாற்றலால் உலகெங்கும் ரசிகர்களைப் பெற்ற நடிகர் இர்ஃபான் கான்.
கடந்த 2018ம் ஆண்டு மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக வெளிநாடு சென்று தொடர் சிகிச்சை மேற்கொண்ட போதும், நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
மூன்று நாட்களுக்கு முன்னர் இவரது தாயார் இறந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் வீடியோ கால் மூலம் தனது தாயாரில் இறுதி சடங்கைப் பார்த்துக் கதறி அழுதுள்ளார்.
இந்நிலையில் நேற்று திடீரென இவரது உடல்நிலை மோசமுடைய, அம்பானியின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அது பலனளிக்காமல் இன்று காலை மரணமடைந்துள்ளார்.
54 வயதான இர்ஃபானின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் இரங்கலையும், சோகத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
‘பொன்மகள் வந்தாள்’ – சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தாணு
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ நேரடியாக டிஜிட்டலில் வெளியாகிறது. சூர்யாவின் இந்த முடிவால் அவர் மீது அதிருப்தியிலிருக்கும் திரையரங்க உரிமையாளர்கள், இனி அவர் படங்களைத் திரையரங்கில் வெளியிடாமல் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.
மற்றொரு பக்கம் சூர்யாவுக்கு ஆதரவாக 30க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் சூர்யாவுக்கு ஆதரவாகக் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகாஸ்தாரான கலைப்புலி தாணு சூர்யாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “இன்றைய சூழ்நிலையில் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியிட முடிவெடுத்துள்ளதால், மிகப்பெரிய பிரச்சினையைத் தமிழ்த் திரையுலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. உங்களுடைய கணிப்பு அப்படிக் கொடுத்தது தவறு என்று இருக்கலாம். ஆனால், தயாரிப்பாளர்களின் இன்றைய காலகட்ட சூழ்நிலையில், அந்தப் படத்தைக் கொடுத்தது தவறில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் என்னவென்றால், இந்தப் படம் மார்ச் மாத இறுதியில் வெளியாகியிருந்தால் ஏப்ரல் மாதம் ஓடி, மே மாதம் OTT ப்ளாட்பார்மில் வெளியிடப்பட்டு இருக்கும்.
ஆனால், ஏப்ரல் மாதம் முழுக்கவே கரோனா பாதிப்பினால் திரையரங்குகள் முழுக்க மூடியாச்சு. ஏற்கெனவே அந்தத் தயாரிப்பாளருக்குத் திரையரங்கில் வெளியிடாததினால் எத்தனை கோடி இழப்போ, அதைச் சொல்ல முடியாது. ஆனால் இந்த OTT பணத்தையும் இழந்துவிட்டால் என்ன செய்வது?
ராஜசேகர் பாண்டியன் ஒரு சிறு தயாரிப்பாளர். சின்ன படத்தை எடுத்துப் பண்ணிக்கொண்டிருக்கிறார். அந்தப் படமொன்றும் பெரிய படமல்ல. குறைவாகத்தான் கொடுத்திருப்பார்கள். இணையத்தில் கற்பனைக்கு அளவில்லாமல் எழுதுவார்கள். OTT-ல் விற்ற பணத்தின் மூலம் இன்னொரு சின்ன படம்தான் எடுப்பார்கள்.
நண்பர்களே, திரையரங்குகளுக்கு எந்தக் காலத்திலுமே அழிவில்லை. தொலைக்காட்சி வரும்போது நாம் என்ன சொன்னோம். சினிமா அழிந்தது என்றோம். வீட்டுக்கு வீடு சிடி ப்ளேயர் வந்தவுடன் சினிமா அழிந்தது என்றோம். 50 கோடி ரூபாய், 100 கோடி ரூபாய் போட்டு படம் எடுத்து வெளியிட்டால், அன்றைக்கு இரவே இணையத்தில் வந்துவிடும். எதை நம்மால் தடை செய்ய முடிந்தது. சினிமா அழிந்துவிட்டதா?
அந்த மாதிரி தான் இந்த OTT ப்ளாட்பார்ம். வருடத்துக்கு 12 – 15 படங்கள்தான் வாங்குவார்கள். அதிலும் பெரிய படங்களாக வாங்கிவிட்டார்கள் என்றால், சின்ன படங்களை வாங்கவே மாட்டார்கள். அத்தி பூத்தாற்போல் ஒரு சின்ன படம் வாங்கியிருக்கும்போது இதை வரவேற்க வேண்டும். இதற்குத் தடைபோட்டு விடாதீர்கள்.
பல தயாரிப்பாளர்களின் படங்கள் முடிவடையும் நிலையில் உள்ளன. அவர்கள் படத்தை இனி முடிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். எங்களுக்குக் கொள்கை அளவில் படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. கொடுக்கப் போவதும் கிடையாது. ஈகை குணம் கொண்ட ஒரு பட நிறுவனம், கல்விக்காக நிறைய பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இந்தப் பணம் உதவியாக இருக்குமே தவிர, தடையாக இருக்காது. தயவுசெய்து இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்தப் படம் OTT-ல் திரையிடப்படட்டும். எதிர்காலத்தில் நாம் கூடி உட்கார்ந்து பேசி, எப்படிப் பண்ணலாம் என்று முடிவெடுப்போம்.
அனைவருமே என்னுடைய நண்பர்கள்தானே. சினிமாவை அழிக்கவே முடியாது. ஒரு வழி அடைத்தால் கடவுள் இன்னொரு வழி கொடுப்பார். அதனால் நமக்கு நல்லதொரு தீர்வைக் கடவுள் தருவார். ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஒன்றுசேர்ந்து பேசக்கூடிய சூழலை நாம் உருவாக்குவோம். எதிர்காலத்தில் நல்ல முறையில் வியாபாரம் செய்வோம். ‘பொன்மகள் வந்தாள்’ OTT-ல் வெளியாவதற்குத் தடை செய்ய வேண்டாம்.
அவர்களைத் தண்டிக்கவோ, கண்டிக்கவோ வேண்டாம். காலத்தின் கட்டாயம் கொடுக்க வேண்டிய சூழல். அவர்களும் மனுதர்மம் பிரகாரம்தான் நடந்திருக்கிறார்கள். ஆகவே, எனது அன்பு நண்பர்களே உங்களிடம் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, நல்லதொரு வாகை சூடி வலம் வருவதற்கு வழிவிடுங்கள். நல்லமுறையில் திரையுலகை வழிநடத்திச் செல்வோம்.
சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். உங்களை இந்தத் திரையுலகம் கைவிடாது. இன்றைய காலகட்டத்தில் அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள். இந்த சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய வேண்டும் என்பதை நாமெல்லாம் கூடிப்பேசி முடிவெடுப்போம். நமக்குள் ஒற்றுமை வேண்டும். இந்த ஒற்றுமையில்லாததால் வரும் பிரச்சினைதான் இது. இந்த ஒற்றுமைக்கு யார் தடையாக இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்”. எனக் கூறியிருக்கிறார்.
ஜான் பிரிட்டோ மற்றும் லலித் குமார் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’.
ஏப்ரல் 9ம் தேதி ‘மாஸ்டர்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாகப் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியீடு, நேரடியாக டிஜிட்டலில் வெளியீடும் என நாளுக்கு நாள் படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வரும் நிலையில், கொரோனா அச்சுறுத்தல் கட்டுக்குள் வந்து, திரையரங்குகள் வழக்கம் போல் செயல் படத் துவங்கினால் தீபாவளிக்கு ‘மாஸ்டர்’ படத்தினை வெளியிடத் தயாரிப்பு தரப்பு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 31 லட்சத்து 38 ஆயிரத்து 097 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 9 லட்சத்து 55 ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.
இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 30,085 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 943 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 7,023 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):
மகாராஷ்டிரா – 8590/369 குஜராத் – 3,548/162 டெல்லி – 3,108/54 ராஜஸ்தான் – 2,335/51 மத்திய பிரதேசம் – 2,368/113 உத்தரபிரதேசம் – 2,043/31 தமிழ்நாடு – 2,058/25 தெலுங்கானா – 1004/26 கேரளா – 485/04 ஆந்திர பிரதேசம் – 1,259/31 கர்நாடகா – 523/20 ஜம்மு & காஷ்மீர் – 565/07 மேற்கு வங்கம் – 697/20 பஞ்சாப் – 313/18 ஹரியானா – 296/03 பீகார் – 359/01 அசாம் – 38/01 சண்டிகர் -40/0 உத்தர்கண்ட் – 51/0 லடாக் – 22/0 அந்தமான் & நிக்கோபார் -27/0 சத்தீஸ்கர் – 37/01 கோவா – 07/0 இமாச்சல பிரதேசம் – 40/01 ஒடிசா – 118/01 பாண்டிச்சேரி – 08/0 மணிப்பூர் – 02/0 ஜார்க்கண்ட் – 103/03 மிசோரம் – 01/0 அருணாச்சலப் பிரதேசம் – 1/0 திரிபுரா – 02/0 நாகாலாந்து – 01/0/01 மேகாலயா – 12/01
தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 25 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 1,128 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);
இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
உலகமே கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் வேளையில் இங்கு ஒருவர் தேங்காய் சுற்றவிட்டு புதையல் இருப்பதாக கூறி லட்சங்களில் கொள்ளையடித்த சம்பவம் கமூதி அருகில் நிகழ்ந்துள்ளது. கமூதியை அடுத்துள்ள தொப்படையை சேர்ந்த மந்திரவாதி செல்வகுமார், இவர் புதையல் எடுப்பதாக கூறி ஏமாற்றியதாக பல புகார்கள் வந்துள்ளன.
உழைக்காமல் திடீர் பணக்காரன் ஆகும் எண்ணம் கொண்ட சிலரை கண்டுபிடித்து புதையல் ஆசை காட்டி பணம் பறிக்கும் கும்பல் ஒன்று நடமாடி வருகிறது. இவர்கள் மதுரையிலிருந்து வாங்கிவந்த போலியான கற்கள் மற்றும் நாணயங்களை வைத்து அதனைத் தோண்டி எடுத்து புதையல் எடுத்ததாக கூறி மக்களை நம்ப வைத்துள்ளனர்.
இதற்கு இவர்கள் பயன்படுத்துவது ஒரு தேங்காய் மட்டும்தான் அதன் ஒரு முனையில் மெல்லிய நூலை கட்டி சுற்றவைத்து மந்திரம் என்று கூறி வந்துள்ளனர். இது மாதிரியான நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மந்திரவாதி சக்தி மிக்கவர் புதையல் எடுப்பதில் வல்லவர் என்று மக்களிடம் காட்டி நம்ப வைத்துள்ளனர்.
இவர்கள் தேங்காயை சுற்ற வைக்க மட்டும் தங்கள் மோசடி டெக்னிக்கை பயன்படுத்தவில்லை கூடவே இந்த மந்திரவாதியை பற்றி மக்களிடம் கொண்டு சேர்க்கவும் ஒரு மார்க்கெட்டிங் டீமே வைத்துள்ளனர். அந்த டீமில் கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி, கிராம உதவியாளர் மகாதேவன், முருகராஜ், தூத்துக்குடி அருள்சாமி, ஏனாதியை சேர்ந்த முத்து என்ற பெண் உட்பட பலர் உள்ளனர்.
இந்த மோசடி கும்பல் பற்றி புகார் வரவே காவல் கண்காணிப்பாளர் அருண்குமாரின் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டியிடம் புதையல் தேடுவதாக கூறியுள்ளனர். இது பற்றி அறியாத அந்த கும்பல் தேங்காய் மந்திரவாதி செல்வகுமார் இடம் அவரது மார்க்கெட்டிங் டீம் அழைத்துச் சென்றுள்ளது.
இவர்கள் போலீஸ் என்று அறியாத மந்திரவாத கும்பல் வழக்கம் போல நூலை கட்டி தேங்காய் சுற்றவிட்டு தங்கம் மற்றும் வைர புதையல் இருப்பதாக கூறி எடுத்து கொடுத்துள்ளனர். இதனை சோதித்து பார்த்த போலீஸ் தரப்பினர் போலி என்று அறிந்ததும் மந்திரவாதி மற்றும் உடன் வந்தவர்களை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில் இவர்கள் தேங்காயில் நூலை சுற்ற விட்டு புதையல் எடுத்துத் தருவதாக கூறி பலரிடம் லட்ச லட்சமாக கொள்ளையடித்தது அனைவரையும் திடுக்கிட வைத்தது. காவல்துறையினர் ஊரடங்கு பணியில் தீவிரமாக இருந்து வரும் வேளையில், நாட்டில் இதுபோன்ற திருட்டு புள்ளிங்கோவிடம் இருந்து மக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும் என்று மட்டும் தெரிகிறது.