நடிகர் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி.அந்த படத்திற்கு பிறகு தமிழில் அங்காடி தெரு படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். இதனையடுத்து தொடர்ந்து பல நல்ல கதாபாத்திரத்தை தேர்தெடுத்து நடித்து வந்தார் நடிகை அஞ்சலி.
தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள நடிகை அஞ்சலி தற்போது விக்னேஷ் சிவனுடன் இணைந்துள்ளார்.
தற்போதைய நிலையில் பேரன்பு, லிசா ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகை அஞ்சலி கைவசம் நாடோடிகள் 2, கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் மாதவன் நடிக்கும் சைலன்ஸ் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
தற்போது நடிகை அஞ்சலி விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் நடிக்க தொடங்கியுள்ளார். நான்கு குறும்படங்களை அடிப்படையாக கொண்டு ஆந்தலாஜி பாணியில் உருவாகும் இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்காகத் தயாராகிறது. நான்கு இயக்குநர்கள் இணைந்து இயக்கும் இந்தப் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கும் குறும்படத்திற்காக நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார்.
இதில் மற்ற குறும்படங்களை வெற்றி மாறன், சுதா கொங்காரா, கௌதம் மேனன் ஆகியோர் இயக்குகிறார்கள். தற்போது விக்னேஷ் சிவன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள நிலையில் விரைவில் அந்த குறும்படங்களின் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது.
இவை தவிர விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனை கதாநாயகனாகக் கொண்டு புதிய படத்தை இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
சொத்து கணக்கு விபரங்களை அரசு ஆசிரியர்கள் பதிவிட வேண்டும்! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆசிரியர்கள் தங்களது சொத்து விவரங்களை பதிவிட பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆசிரியர்கள் தங்களது ஊதியம் போதவில்லை என்று சென்ற ஆண்டு போராட்டம் நடத்தினார்கள். சிறப்பாக தமிழக அரசு போராட்டத்தை கையாண்ட விதம் தமிழக மக்களின் பாராட்டுக்கு உள்ளானது. இந்த கோரிக்கை நியாயம் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. அதிகமாக ஊதியத்தை அரசு ஆசிரியர்களுக்கு வழங்கியும் அவர்களின் முதிர்ச்சியை கருத்தில் கொண்டும் ஊதியம் மிக அதிகமாக வழங்கப்படுகின்றது.
மேலும் எந்த ஒரு துறைக்கும் இல்லாத விடுமுறையை ஆசிரியர்கள் அனுபவித்து வருகின்றனர், இப்படி தமிழக அரசு பல சலுகைகளை அரசு ஆசிரியர்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால் இது போதவில்லை என்று மேலும் மேலும் ஊதியம் எங்களுக்கு அதிகப்படியாக வழங்க வேண்டுமென்று ஜாக்டோ-ஜியோ போன்றன ஆசிரிய அமைப்புகள் போராட்டத்தை ஆசிரியர்களிடம் தூண்டிவிட்டு கொண்டு இருக்கின்றன, இதன்காரணமாக அரசின் கடும் கோபத்திற்கு உள்ளாகிறார்கள் அரசு ஆசிரியர்கள்.
இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வை மிகக்கடுமையாக அமைத்தது, இதில் தேர்ச்சி பெறுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல.
இது ஒருபுறமிருக்க ஆசிரியர்களின் சொத்து கணக்கு விபரங்களை பணிப் பதிவேட்டில் முறையாக பராமரித்து வர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி அரசு ஆசிரியர்கள் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை பணிப் பதிவேட்டில் பதிவிட வேண்டும். இதனை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் ஆகியோர்கள் ஆய்வு செய்து வரவேண்டும்.
சொத்துக்கணக்கு விபரங்களை சரியாக பதிவிடாமல் தவறாக இருந்தால் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது, மேலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றுஅனைத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அரசு ஆசிரியர்கள் கடும் எரிச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். பொது மக்களும் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த வண்ணம் வருகின்றனர்.
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தை விரும்பாதோர் பட்டியலை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவு
பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்ட விரும்பாதோரை பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் செப். 15ம் தேதிக்குள் தங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு இல்லாதோர் மற்றும் குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கழிப்பறை வசதிகளுடன் கூடிய வீடு கட்டி கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில் வீடு கட்ட 2.10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற ‘சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியல் – 2011’ அடிப்படையில் கிராம சபை வழியே பயனாளிகள் கண்டறியப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பலர் வீடு கட்ட விரும்பவில்லை, மணல் விலை உயர்வு, கட்டுமான ஆட்களின் தினக்கூலி பல மடங்கு உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஆகியவை கடுமையாக மக்களை பாதித்துள்ளது. அதுவும் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பாதிப்பு மிக அதிகம் என்பதால் தற்போது வீடு வேண்டாம் என்று பலர் ஒதுங்கி கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாநிலங்களில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை செயலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் பின்வருமாறு:
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வுக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் பலர் வீடு கட்ட விரும்பவில்லை. ஆதரவற்றோர் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டோர் துப்புரவு தொழிலாளி போன்றோரை உடனடியாக பயனாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
தனியே வசிக்கும் 65 வயதிற்கு மேற்பட்ட பெண் மற்றும் ஆண்கள் மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்கள் போன்றோர் பெயரை பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்காமல் அவர்கள் வீடுகள் கட்டிக்கொள்ள உதவ வேண்டும். இடம் மாறி செல்வோர் வீடு கட்ட விருப்பம் இல்லாதோர் நிலம் தொடர்பான பிரச்னையில் உள்ளோரின் பெயர்களையும் நீக்கக் கூடாது. அவர்கள் மீண்டும் வீடு கட்ட விருப்பம் தெரிவிக்கலாம். இதை கிராம சபை கூட்டம் நடத்தி உறுதி செய்ய வேண்டும். வீடு கட்ட விருப்பம் இல்லாதோரிடம் அதற்கான காரணத்தை கேட்டறிய வேண்டும். நிலம் இல்லாதோருக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.
வீடு கட்ட விரும்பாதோரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றால் அவர்களிமிருந்து அதற்கான ஆவணங்களை பெற வேண்டும்.
வீடு கட்ட விரும்பாதோரின் பெயரை பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்குவது தொடர்பான கருத்துக்களை வரும் 15ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த கருத்துக்கள் அடிப்படையில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்
தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியாக இருந்தாலும் அதை ஒரு குறிப்பிட்ட சாதி.மதம் அல்லது மொழி அடிப்படையில் பிரித்து பார்ப்பதே வழக்கமாகி விட்டது. அதிலும் குறிப்பாக பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறும் திமுக சாதி மதமற்ற அரசியலை செய்வதாக கூறி தான் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறது. ஆனால் இதை அரசியல் அறிந்தவர்கள் நன்றாக உற்று கவனித்தால் சாதி மதமற்ற அரசியல் என்பதற்காக தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சாதகமாகவும்,வேறு ஒரு பிரிவினருக்கு எதிராகவும் திமுக செயல்பட்டு வருவது தெளிவாக புரியும். இதையெல்லாம் உறுதி செய்யும் வகையில் தான் திமுகவின் கடந்த கால செயல்பாடுகள் அமைந்துள்ளன.
திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி இருக்கும் போது, பாமக, வி.சி.க, புதிய தமிழகம் கட்சிகளை தேர்தலுக்காக கூட்டணியில் இணைக்க வேண்டிய கட்டாயம் வந்தால், ‘அவை சாதிக் கட்சிகள் அல்ல. சாதிக்கும் கட்சிகள்’ என்று நியாயப்படுத்துவார். அதே கட்சிகள், திமுக கூட்டணிக்கு தேவையில்லை என்ற நிலையெடுத்தால், அவற்றை சாதிக்கட்சிகள் என்று விமர்சிப்பார்.இதில் அதிகம் பாதிக்கப்பட்டது மருத்துவர் ராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி தான். ஆரம்பத்தில் வன்னியர் சங்கமாக இருந்தாலும் இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பிறகு பாமக ஆரம்பித்து அரசியலுக்குள் நுழைந்த பிறகு தொடர்ந்து ஒட்டு மொத்த தமிழக மக்களுக்காக தான் பாமக நிறுவனர் ராமதாஸ் போராடி வருகிறார்.ஆனால் திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகள் தாங்கள் வெற்றி பெற அக்கட்சியின் வாக்குகளை பயன்படுத்தும் போது சாதகமாக ஏற்று கொள்கிறார்கள். இதுவே பாமக எதிரணியில் இருக்கும் போது அக்கட்சியை சாதிக் கட்சி என கூறி கடுமையான விமர்சனங்களை வைக்கிறார்கள்.
கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக இருக்கும் போது தைரியமாக ‘தனித் தொகுதி தலித் மிகுதி’ என்று கலைஞரால் அழைக்கப்பட்ட தொகுதிகளில் மட்டுமின்றி, மற்றவர்கள் போட்டியிடும் பொதுத் தொகுதிகளிலும் பட்டியலின வேட்பாளர்களை நிறுத்துவார்கள். அதாவது திருச்சி மக்களவைக்கு தலித் ஏழுமலையையும், மதுரவாயல் சட்டப்பேரவைக்கு சிபிஎம் கட்சியின் பீமராவையும் நிறுத்தி, ஜெயலலிதா வெற்றி பெற வைத்தார் என்பதே அதற்கு உதாரணம்.
பொதுவாக, கடந்த கால அரசியலை பார்க்கும் போது திமுக, அதிமுக கட்சிகள் அந்தந்த தொகுதிகளில் செல்வாக்குள்ள சாதி வேட்பாளர்களையே நிறுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற செயல்களை அந்த குறிப்பிட்ட சாதிகளை, வலுப்படுத்தவே உதவும் என்பது பற்றி அவர்கள் கவலைப்படாமல் அரசியல் வெற்றி ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். உள்கட்சி காரணங்களுக்காக, ஆர்.கே.நகர் சட்டப்பேரவைக்கு, ஸ்டாலின் தலைமையிலான திமுக, நாடார் சமூகத்தைச் சேர்ந்த சிம்லா முத்துச் சோழனை நிறுத்தாததால் ஏற்பட்ட படுதோல்வி நிச்சயமாக திமுக தலைமையை இது குறித்து சிந்திக்க வைத்துள்ளது.
இப்போது அடுத்து வரவுள்ள 2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்காக தங்களை தயார் செய்து வருகிறது திமுக. நடந்து முடிந்த மக்களவைப் பொதுத்தேர்தலில், மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தாலும் வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவால் திமுக தலைமை சற்று அச்சமடைந்துள்ளது.
ஜெயலலிதா, 2016 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு இளைஞர் பேரவை பெயரில் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை பெயரில் கருணாஸ், முஸ்லிம் அடையாளத்திற்கு, மனிதநேய ஜனநாயகக் கட்சி பெயரில் தமீமுன் அன்சாரி என்று ‘சாதி ரீதியிலான அடையாள அரசியலை’ கையாண்டு அதன் மூலம் குறிப்பிட்ட உறுப்பினர்களை வெற்றி பெற வைத்து சட்டப்பேரவைக்கு சேர்த்துக்கொண்டார்.
அதுபோல மு.க.ஸ்டாலினும், தென்மாவட்டங்கள், கிழக்கு மாவட்டங்களைப் பொறுத்தவரை, சாதித் தலைவர்களது பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்வுகள் வரும் காலங்களில் அது தன்னுடைய அரசியலுக்கு முக்கியமானவை என உணந்துள்ளார். பெரம்பலூர் மக்களவைக்கு, பாரிவேந்தர் மூலம் பார்கவ குலமான உடையார்கள், நாமக்கல் மக்களவைக்கு கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, சிதம்பரம், விழுப்புரம் மக்களவைத் தொகுதிகளுக்கு, வி.சி.க., என்பது போல சாதி மதமற்ற அரசியலை கையிலெடுப்பதாக கூறும் திமுகவும் சாதி அடிப்படையிலான அடையாள அரசியலை சேர்த்துக் கொண்டது.
தற்போது, இது அடுத்த நிலையை அடைந்து சம்பந்தபட்ட சாதித் தலைவர்களது விழாக்களில் திமுக தலைவரான ஸ்டாலின் பங்கு கொண்டு வாக்குகளை ஈர்ப்பது என்ற அளவிற்கு வந்துள்ளனர். வழக்கமாக, முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்திக்கு மட்டுமே, மு.க.ஸ்டாலின் செல்வார். ஆனால் டி.டி.வி. தினகரனோ, இரண்டு ஆண்டுகளாக, தேவர் ஜெயந்தி மட்டுமின்றி, ஒண்டிவீரன் பூலித்தேவன், இமானுவேல் சேகரன், வல்வில் ஓரி ஆகியோர் நிகழ்ச்சிகளுக்கும் சென்று கொண்டிருக்கிறார்.
ஆகவே இனி திமுக தலைவரும் இது போன்ற வாய்ப்புகளை விடக் கூடாது என்று முடிவெடுத்து விட்டார். இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், அருந்தியர்களின் அடையாளத்திற்காக ஒண்டிவீரன், மறவர் அடையாளத்திற்கு பூலித்தேவன் நிகழ்ச்சிகளுக்கும் சமீபத்தில் சென்று வந்தார். சென்ற ஆண்டு கிராம சபைகள் பெயரில் திமுக கூட்டிய சபைகளில், உதயநிதியையும், கனிமொழியையும், தேவேந்திர குல வேளாளர் இளைஞர்கள், ‘ஏன் ஸ்டாலின் இமானுவேல் சேகரன் நிகழ்ச்சிக்கு வரவில்லை?’ என்று கேள்வி கேட்டுத் துளைத்து விட்டனர். அதுவே நடந்து முடிந்த தென்மாவட்ட, மக்களவைத் தேர்தல் பரப்புரைகளிலும் தொடர்ந்தது.
தேவேந்திர குல அடையாளத்துடன் கிருஷ்ணசாமியும், ஜான் பாண்டியனும், அதிமுக பக்கம் இருந்தனர். ஆனாலும், நடந்து முடிந்த மக்களவைப் பொதுத்தேர்தலில், திமுகவின் தனுஷ்குமாருக்கு தென்காசியிலும், கனிமொழிக்கு தூத்துக்குடியிலும், முஸ்லிம் லீக் நவாஸ் கனிக்கு இரு தேவர் சமூக வேட்பாளர்களை எதிர்த்து ராமநாதபுரத்திலும், தேவேந்திர குல வாக்குகள் கணிசமாக விழுந்து திமுக தலைமைக்குத்தெரியும்.
இந்தப் பின்னணியில் இந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் நிகழ்ச்சிக்கு பரமக்குடிக்கு ஸ்டாலின் செல்கிறார். இதனை உறுதி செய்யும் வகையில் இதற்கான விளம்பரங்கள் செய்வதற்கு அனுமதி கோரி திமுகவின் ராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவே தேவேந்திர குல வாக்காளர்களை திருப்திப்படுத்தும் என திமுக தலைமை நம்புகிறது. அடுத்து மருது பாண்டியர்கள் நிகழ்ச்சி, தேவர் ஜெயந்தி போன்ற விழாக்களிலும் இது தொடரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, தங்கத் தமிழ்செல்வனுக்கு கொ.ப.செ., கலைராஜனுக்கு இலக்கிய அணிச் செயலாளர் பதவிகள் கொடுத்ததன் மூலம் பிறமலைக்கள்ளர், மற்றும் கள்ளர் சமூகங்களை திருப்திப்படுத்தலாம் என திமுக எடுத்த முடிவு தெளிவாக புரிகிறது.
மற்ற கட்சிகளை சாதிக் கட்சி என விமர்சனம் செய்து வாக்குகளை பெற்ற திமுகவே இப்படி சாதி அடையாளத்தை பயன்படுத்தி இரட்டை வேட அரசியல் செய்வது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த நிலையில் சாதி அடிப்படையில் பள்ளி மாணவர்கள் கையில் கயிறு கட்டி வருவதை திமுக எதிர்த்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
அரசியலுக்காக எந்த நிலைக்கும் இறங்கலாம் என்பது திமுகவின் இந்த இரட்டை வேடம் அம்பலமாவதின் மூலம் தெளிவாக தெரிகிறது.
மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்த குமரி ஆனந்தன்! மதுவிலக்கு போராட்டத்திற்கு அழைப்பு
மதுவிலக்கு உண்ணாநிலையில் பங்கேற்க குமரி அனந்தன் அவர்கள் மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். உண்ணாநிலையில் நிச்சயமாக பங்கேற்பதாக தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை காந்தியவாதியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தன் இன்று சென்னையில் சந்தித்து பேசினார்.
அப்போது தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 15-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ளவிருப்பதாகவும், அந்தப் போராட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் பங்கேற்று வாழ்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட மருத்துவர் அய்யா அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தில் பங்கேற்று வாழ்த்த ஒப்புக்கொண்டார்.
முன்னணி நடிகர்களே தயங்கிய நிலையில் நடிகர் சந்தானம் எடுத்த துணிச்சலான முடிவு
பிரபலமான பல முன்னணி ஹீரோக்களே டபுள் ஆக்ட் படத்தில் நடிக்கத் தயங்கிக் கொண்டிருக்கும் போது ட்ரிபிள் ஆக்ட் படம் ஒன்றில் நடிக்கும் துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறார் சமீபத்தில் காதனையாகராக உருவெடுத்திருக்கும் நடிகர் சந்தானம்.
இந்நிலையில் கதாநாயகனாக அறிமுகமாகி ’தில்லுக்கு துட்டு 2’, ‘A1′ என தொடர்ந்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிகளை நடிகர் சந்தானம் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சந்தானம் தனது நடிப்பு பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக பிரபல நடிகர்களே தயங்கும் சூழ்நிலையில் இந்த துணிச்சலான முடிவை நடிகர் சந்தானம் எடுத்துள்ளார்.
நடிகர் சந்தானம் தன்னுடைய அடுத்தப் படத்திற்காக சயின்ஸ் பிக்ஷன் கதையோடு களம் இறங்கும் அவர் அப்படத்திற்காக மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பது தான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாப்பிக் என்கிறார்கள்.
இதுவரை சந்தானம் நடித்துள்ள படங்களில் காமெடியில் இது தான் உச்சம், என்று சொல்லும் அளவிற்கு இப்படம் உருவாக போகிறதாம். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். ‘அறம்’, ’குலேபகாவலி’, ’ஐரா’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்திருக்கும் இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ஹீரோ’, விஜய் சேதுபதி நடிப்பில் ‘க.பெ.ரணசிங்கம்’ ஆகிய படங்களையும் தற்போது தயாரித்து வருகிறார்.
மேலும்,நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட்ட வரும் இவர் தான். இவரோடு சேர்ந்து சோல்ஜர் பேக்டரி கே.எஸ்.சினிஸும் இப்படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார். இவர், ஜெய்-அஞ்சலி நடிப்பில் வெளியான பலூன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் தலைப்பு வரும் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று அறிவிக்கபட உள்ளது. இந்தப் படம் இவ்வளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளான படமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்பது தான். மேலும் இது மட்டுமில்லாமல் இப்படத்தை இயக்க இருப்பவர் மிகப் பிரபலமான எழுத்தாளர் கார்த்திக் யோகி என்பதும் தான்.
கார்த்திக் யோகி தமிழ் சினிமாவில் பல வெற்றிகரமான திரைக்கதைகளுக்கு உதவியாக இருந்தவர். இப்படக்குழுவினர் இது மிக வித்தியாசமான கிரியேட்டிவான படமாக இருக்கும் என்கிறார்கள். இப்படத்தில் நிச்சயம் சந்தானத்தின் ட்ரிபிள் அவதாரம் வேற லெவலில் இருக்கும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே நடிக்க முடிவெடித்திருக்கும் சந்தானம் ‘பிகில்’,’தர்பார்’ஆகிய இரு படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க அழைப்பு வந்த போது கூட கொஞ்சமும் யோசிக்காமல் நோ சொன்னது இண்டஸ்ட்ரி அறியாத ரகசியம் என்கிறார்கள்.
எது எப்படியோ நகைச்சுவை நடிகராக அறிமுகமான சந்தானம் தற்போது ஹீரோவாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் நல்ல இடத்திற்கு உயர்ந்து விட்டார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
தெலுங்கானா ஆளுநர் பதவி தமிழக பாஜக தலைவர் பதவியை விட பெரியதா? தமிழிசையை வம்புக்கு இழுக்கும் திமுக
திமுக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான திரு. சரவணன் அண்ணாதுரை அவர்கள் பாஜகவின் தமிழகத் தலைவர் பதவியை விட தெலுங்கானா ஆளுநர் பதவி பெரியதா! என்று தனது ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார்.
தமிழிசையின் அரசியல் எதிர்காலம் என்ன?
தமிழக பாஜக விற்கு யார் தலைமை பொறுப்பு ஏற்பது, தமிழக பாஜகவின் நிலைமை என்ன என்பதை குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தமிழக பாஜகவினரை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது
தமிழிசை சவுந்திரராஜன் அவர்கள் காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவர், பாஜக வின் வளர்ச்சிக்கு ஆரம்பகாலம் முதல் கடுமையாக உழைத்தார். தனது கடுமையான உழைப்பின் மூலம் தமிழகத் தலைவர் என்ற மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றார்.
மத்திய அரசை ஆட்சி செய்யும் கட்சியின் தமிழக தலைவர் என்பது மிகப்பெரிய பொறுப்பு. அவர் பல தேர்தல்களில் களம் கண்டுள்ளார், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தைரியமாக தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் களம் கண்டார்.
தமிழக மக்கள் அவருக்கு வெற்றியை அளிக்காவிட்டாலும் பாஜகவின் தலைமை அவரை அங்கீகரித்து தற்போது தெலுங்கான ஆளுநர் என்ற மிகப்பெரிய முதலமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்து உள்ளது.
இதனை கேலி செய்யும் விதமாக திமுகவின் தலைமையின் தூண்டுதலில் பெயரில் தான் சரவணன் அண்ணாதுரை அவர்கள் கடுமையாக தாக்கி விமர்சித்துள்ளார்.
கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை பெற்ற மிகப்பெரிய கவுரவத்தை பொறுத்துக் கொள்ளமுடியாமல் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக திமுகவையும் சரவணன் அண்ணாதுரையையும் கடுமையாக பாரதிய ஜனதா கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை விமர்சிக்கும் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் சமூக வலைத்தளவாசிகள்
தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார் முதல்கட்டமாக அவர் பிரிட்டன் சென்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களை செய்து தமிழகத்திற்கு தேவையான சில திட்டங்களை வெளிநாட்டு தொழிலாளர்கள் முன் வருவதற்கு வழிவகை செய்துள்ளார்
மேலும் அவருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களும் முதலமைச்சருடன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார், இது ஒருபுறமிருக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் பின்லாந்து சென்று புதிய கல்வி முறை திட்டங்களை எப்படி செயல்படுத்தலாம் என்று அங்குள்ள கல்வியாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்.
மேலும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு நிலோபர் கபில் அவர்களும் ரஷ்யா சென்றுள்ளார்.
தமிழக தொழில்துறை அமைச்சர் திரு எம் சம்பத் அவர்கள் நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றுள்ளார், நேற்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார்ஆகியோரும் முதலமைச்சரின் அமெரிக்கா சுற்றுப்பயணத்தின் போது தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இது ஒரு புறம் நல்ல விஷயமாக இருந்தாலும் மறுபுறம் வயிற்று எரிச்சல் காரணமாக திமுகவினர் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணத்தை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரித்து வருகின்றனர்.
குறிப்பாக முதலமைச்சர் அணிந்து வரும் கோட் சூட்டுகளை பற்றி வெறுப்பேற்றும் விதமாக சமூகவலைத்தளங்களில் சித்தரித்து வருகின்றனர்
இதற்கு பதிலடி தரும் விதமாக முன்னாள் தமிழக முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான திரு.கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்த போது கோட் சூட்டுடன் கூடவே அவருடைய மனைவி தயாளு அம்மாள் உடன் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படத்திற்கு என்ன மாதிரியான விமர்சனங்களை திமுகவினர் வைக்க போகின்றனர் என்று கலாய்த்து வருகின்றனர்.
இதனால் திமுகவினர் கதி கலங்கி போய் உள்ளனர். தன் வினை தன்னைச் சுடும் என்ற பழமொழிக்கேற்ப இது பொருந்தும் என நடுநிலைவாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நஷ்ட்த்தை ஏற்படுத்தும் கேபிள் ஆப்ரேட்டர்கள்! கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நஷ்ட்த்தை ஏற்படுத்தும் கேபிள் ஆப்ரேட்டர்கள்! கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர்.
அரசுக்கு கட்டணம் செலுத்தாமல் தமிழக அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை தங்களின் சுய வருமானத்தை பெருக்குவதற்காக முடக்கி வைத்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
டிஜிட்டல் ஒளிபரப்பு கட்டாயமாக்கப்பட்ட பின் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் 34 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை வாங்கி விநியோகித்தது. இவற்றில் 11 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் இயக்காமல் முடங்கியுள்ளன. கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மொத்தம் 1.86 கோடி ரூபாய் கட்டண நிலுவை வைத்திருக்கின்றனர். அரசு கேபிளை இயக்காமல் தனியார் செட்டாப் பாக்ஸ்க்களை இயக்கி லாபம் ஈட்டி வருகின்றனர். மேலும் தமிழக அரசின் செட்டாப் பாக்ஸ்க்களை அவர்களே முடக்கி வைத்து அரசுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
கேபிள் டிவி தாசில்தார்கள் அலட்சியமாக இருப்பதால் தான் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. கேபிள் கட்டணம் குறைக்கப்பட்ட பின்பும் மக்களிடம் வரவேற்பு இல்லை என கேபிள் டிவி நிறுவனத் தலைவர் தலைவர் திரு உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் கேபிள் தாசில்தார்களையும் ஆப்ரேட்டர்களையும் கண்டித்துள்ளார்,
பழைய ஆப்ரேட்டர்கள் ஒத்து வராவிட்டால் அரசு செட்டாப் பாக்ஸ்களை இயக்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு புதிதாக வாய்ப்பு கொடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார். அரசுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள ஆபரேட்டர்களை அழைத்து பேசி செட்டாப் பாக்ஸ்களை இயக்க வலியுறுத்தவேண்டும் என்றும், உடன்படாவிட்டால் கட்டணத்தை வசூலிக்க நோட்டீஸ் வழங்க வேண்டும். குறிப்பிட்ட அவகாசத்தில், கட்டண நிலுவை செலுத்தாமல் இருந்தால் போலீஸுடன் சென்று ஜப்தி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் எச்சரித்துள்ளது.
அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகளை வரன்முறைபடுத்தி பட்டா வழங்கும் பணியை ஓராண்டுக்குள் முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக உள்ள குடியிருப்புகளை வரன்முறைபடுத்தி தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டம்ஙங 2018 இல் அறிவிக்கப்பட்டது, இதை 6 மாதங்களுக்குள் முடிக்க அரசு உத்தரவிடப்பட்டிருந்தது, ஆனால் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் காரணமாக திட்டப்பணிகள் தடைப்பட்டது.
இதன் காரணமாக திட்டத்திற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என நில நிர்வாக ஆணையர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார், அதன்படி இந்தத் திட்டத்தை ஓராண்டுக்குள் நிறைவேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி அரசு வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு.
*அனைத்து புறம்போக்கு நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்பை விபரங்களை தொகுத்து கணினியில் பதிவு செய்ய வேண்டும்.
*சென்னை மற்றும் இதர மாநகராட்சிகளில் ஆட்சேபனைக்குரிய மற்றும் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு விபரங்களை சேகரித்து அரசுக்கு அனுப்ப வேண்டும்.
இப்பகுதிகளில் தடையாணை பதிவு செய்யப்பட்டிருந்தால் அதை தளர்வு செய்வது குறித்து அரசு முடிவு செய்யும்.
நீர்நிலைகளில் குடியிருப்போருக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு பட்டா வழங்க வேண்டும். ஆண்டு வருமானம் மூன்று லட்சம் வரையில் உள்ள பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும். ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தகுதியான நபர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வரன்முறை செய்ய வேண்டும்.
*கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழைக் குடும்பத்தின் நலன் கருதி தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்க நில மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டும், மேய்க்கால் மந்தைவெளி போன்ற ஆட்சேபனுக்குரிய ஆக்கிரமிப்புக்கள் ஆக இருந்தால் கால்நடைத்துறை அனுமதி அவசியம்.
ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பயனாளிகளுக்கு நிலமதிப்பு வழிகாட்டி மதிப்பின்படி உரிய தொகை வசூல் செய்து பட்டா வழங்க வேண்டும்.
*நகர்ப்புற பகுதிகளில் இரண்டு சென்ட்க்கு மிகாமலும் கிராமப்புறங்களில் மூன்று சென்ட்க்கு மிகாமலும் பட்டா வழங்கலாம்.
*இச்சிறப்பு திட்டங்களை ஓராண்டுக்குள் செயல்படுத்த வேண்டும். கணினியில் பதியப்பட்ட புள்ளி விவரங்கள் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மாதாந்திர ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வு அறிக்கையை நில நிர்வாக ஆணையர் வரும் ஐந்தாம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது!