இந்தோனேசியாவில் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100,000-ஐத் தாண்டியுள்ளது. நோய்ப்பரவல் எப்போது உச்சத்திற்குச் செல்லும் என்பதைக் கணிக்க முடியாமல் இந்தோனேசிய விஞ்ஞானிகள் திணறுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 1,525 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது, இந்தோனேசியாவில் 100,303 பேருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 4,838ஆக உள்ளது. 58,173 பேர் உடல்நலம் தேறியுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 45 விழுக்காட்டினர் கிழக்கு ஜாவா, தலைநகர் ஜக்கர்த்தா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்.
அந்த இரண்டு பகுதிகளும் இந்தோனேசியாவில் நோய்ப்பரவலின் மையப்பகுதிகளாக உருவெடுத்துள்ளன. இந்தோனேசியாவில் இதுவரை 800,000 பேருக்கு மட்டுமே மருத்துவச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நாள்தோறும் சராசரி 13,000 பேருக்கு மட்டுமே சோதனைகள் நடத்தப்படுகின்றன. அக்டோபர் மாத மத்தியில் இந்தோனேசியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400,000 ஐக் கடந்துவிடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.