மழை நீர் வடிகால் மற்றும் கால்வாய் தூர்வாருதல் பணிகளில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!!
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட தமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்தது போல் காணப்பட்டு வருகிறது. இதனால் சென்னை வாசிகளின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது. ஒரு கனமழைக்கே சென்னை இப்படி மாறிவிட்டதே என்று அனைவரும் புலம்பும் படியாக தற்போதைய நிலைமை இருக்கிறது.
குடி இருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீருடன் கழிவு நீரும் கலந்து இருப்பதால் நோய்தொற்று பரவும் அபாய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
இதற்கு காரணமான ஆளும் திமுக அரசு மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்து இருக்கிறது. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள திமுக அரசு தவறி விட்டது என்ற கருத்து பேசுபொருளாகி இருக்கிறது.
இந்நிலையில் மழையால் கடும் பாதிப்பை சந்தித்த சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பார்வையிட்டு, மக்களிடம் குறைகளை கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது அரசின் கடமை. ஆனால் ஆளும் திமுக அரசு மழை நீர் வடிகால் அமைப்பதிலும் சொதப்பி விட்டது. நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளையும் முடக்கி விட்டதன் விளைவே இன்று சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து இருக்கிறது.
மேலும் அதிமுக, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கான இயக்கமாகவே செயல்படும். மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருக்கிறார் என்று தெரிவித்தார்.
மேலும் திரு.ஸ்டலின் அவர்கள் சென்னையில் மழைக்காலங்களில் ஒரு சொட்டு மழைநீர் கூட தேங்காது என்று கூறினார். ஆனால் தற்பொழுது சென்னையின் நிலை எப்படி இருக்கிறது? மழைநீர் வடிகால் அமைக்க 4000 கோடி செலவானதாக சொல்லும் ஸ்டாலின் அவரகள் 400 படகு வாங்கி மழைக்காலங்களில் சென்னை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தாலாவது மக்களுக்கு அது பயனாக இருந்திருக்கும் என்று கேலியாக பேசினார்.
நிர்வாகத்தை திறமையாக நடத்த இயலாத இந்த திமுக அரசால் மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்று ஜெயக்குமார் அவர்கள் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.