சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி சிரம்மப்பட தேவையில்லை!!
சுற்றுலாவிற்கு செல்லும் மக்கள் ஹோட்டலிலோ அல்லது ஏதேனும் தங்கும் விடுதிகளிலோ தங்கி வருகின்றனர். ஆனால் அவர்களின் வாகன ஓட்டுனர்கள் இது போன்ற வசதியை அனுபவிக்காமல் வண்டியினுள்ளோ அல்லது தூங்காமலோ சிரமப்படுவர்.
இவர்களுக்கு உதவும் வகையில் தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சுற்றுலா செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தங்கும் விடுதிகள் அல்லது ஹோட்டல் போன்ற பகுதிகளில் தூங்குவதற்கு வசதியை ஏற்படுத்தித்தர முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த முடிவிற்காக தமிழகத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டுமான விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் முதன்மைச் செயலாளரான அபூர்வா கொண்டுவந்துள்ளார்.
இந்த உத்தரவில், ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் உள்ளேயோ, அல்லது அந்த இடத்தில் இருந்து 250 மீட்டர் தொலைவிலோ வாகன ஓட்டுனர்களுக்கான தூங்குமிட வசதிகள் செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு தலைமைச் செயலாளராக இருக்கும் போது இது தொடர்பாக வெ.இறையன்பு வீட்டுவசதித் துறைக்கு உரிய தகவல்களை கடிதம் மூலமாக தெரிவித்திருந்தார்.
எனவே இறையன்புவின் அறிவுறுத்தல்களை ஏற்கும் விதமாக இந்த கட்டுமான விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தூங்கும் வசதிகள் ஏற்படுத்தித்தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டுனர்கள் சிரமமில்லாமல் தூங்கலாம் என்று தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவு வாகன ஓட்டுனர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.