ஜாமீன் பெற இதெல்லாம் ஒரு காரணமா..? செந்தில் பாலாஜியை கட்டம் கட்டிய உச்சநீதிமன்றம்!!
அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 8 முதல் 12 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரித்து பின்னர் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்பொழுது செந்தில் பாலாஜி அளித்த வாக்கு மூலத்தை 3000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களாக தயாரித்து நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமர்ப்பித்தனர். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் செந்தில் பாலாஜியின் கோரிக்கை மனுவை ஏற்று இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவானது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது.
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தலைமறைவாக இருக்கும் நிலையில் உடல் நிலையை காரணம் காட்டி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சி, ஆதாரங்கள், ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிடும் என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்விட்டது.
உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவில் தனது உடல் நிலை குறித்து உயர் நீதிமன்றம் முறையாக ஆராயாமல் தன்னுடைய ஜாமீன் மனுவை நிராகரித்து விட்டது என்றும், அசோக்குமார் தலைமறைவாக இருப்பதை காரணமாக எடுத்துக் கொண்டு தனக்கு ஜாமீன் தர மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி தொடுக்கப்பட்ட நிலையில் இன்று நீதிபதி திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் செந்தில் பாலாஜி உடல் நிலை சரி இல்லாமல் இருக்கிறார்.அவருக்கு எந்த நேரமும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அவரது மூளையில் இரத்த கட்டிகள் உள்ளது. எனவே அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறினார்.
இதனை கேட்ட நீதிபதி திரிவேதி நான் கூகுளில் chronic lacunar infraction (மூளையில் ரத்தக் கட்டி) என்றால் என்ன, அதற்கு தீர்வு என்ன என்பது குறித்து ஆராய்ந்தேன். இந்த பாதிப்பை மருந்துகளால் குணப்படுத்த முடியும் என்றும் இவை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய நோய் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே இந்த மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் காட்டியுள்ள அதிரடியை பார்க்கும் பொழுது செந்தில் பாலாஜி இனி வெளியில் வர வாய்ப்பு குறைவு தான் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது.