கேரளா ஸ்பெஷல் “இஞ்சிப்புளி” – அதிக மணம் மற்றும் சுவையுடன் செய்வது எப்படி?
பொதுவாக கேரளா உணவு என்றால் மிகவும் சுவையாகவும் பாரம்பரியமிக்க ஒன்றாகவும் இருக்கும். கேரள உணவு அதிக சுவையுடன் இருக்க காரணம் தேங்காய் எண்ணெய் தான்.
இவர்களின் பாரம்பரிய உணவு வகைகள் தனி சுவையை கொடுப்பதால் கேரளா மக்கள் மட்டும் இல்லை மற்ற மாநில மக்களும் கேரளா உணவை செய்து சாப்பிட விரும்புகின்றனர். அந்த வகையில் கேரளா ஸ்பெஷல் உணவு வகைகளில் ஒன்றான இஞ்சிப்புளி அதிக சுவையுடன் செய்வது குறித்த முறையான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த இஞ்சிப்புளி இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்த உணவு ஆகும்.
தேவையான பொருட்கள்:-
*இஞ்சி – 3/4 கப்
*பச்சை மிளகாய் – 7
*வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
*புளி – பெரிய எலுமிச்சம் பழ அளவு
*வெல்லப் பாகு – 1 1/2 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
*எண்ணெய் – 4 தேக்கரண்டி
*கடுகு – 3/4 தேக்கரண்டி
*கறிவேப்பிலை – 1 கொத்து
*வரமிளகாய் – 2
செய்முறை:-
இஞ்சிப்புளி செய்வதற்கு முதலில் ஒரு பவுல் எடுத்து எலுமிச்சம் பழ அளவு புளி போட்டுக் கொள்ளவும். அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊற விடவும். பின்னர் அவை நன்கு ஊறி வந்ததும் புளிக் கரைசலை தயார் செய்து கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 தேக்கரண்டி அளவு வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.
பின்னர் அதே வாணலியில் எண்ணெய் 4 தேக்கரண்டி அளவு ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் 3/4 தேக்கரண்டி கடுகு, 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். பின்னர் அதில் 2 வர மிளகாயை கிள்ளி போடவும்.
அடுத்து ஒரு பெரிய இஞ்சி எடுத்து தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதேபோல் பச்சை மிளகாயை நறுக்கி கொள்ளவும். இந்த இரண்டு பொருளையும் வதங்கி கொண்டிருக்கும் கலவையில் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன் பின் தாயார் செய்து வைத்துள்ள புளிக்கரைசல் சேர்த்து கலக்கி கொள்ளவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க விடவும்.
சேர்த்த புளிக்கரைசல் கெட்டி தன்மைக்கு வந்ததும் தயார் செய்து வைத்துள்ள வெல்ல பாகு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
பின்னர் வறுத்து பொடி செய்து வைத்துள்ள வெந்தயத் தூளை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். இவ்வாறு செய்தால் கேரளா ஸ்பெஷல் காரம் மற்றும் புளிப்பு சுவை கலந்த இஞ்சிப்புளி மிகவும் சுவையாக இருக்கும்.