Friday, September 20, 2024
Home Blog Page 4894

தயாராகிவிட்டார் தல அஜித்; டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்

0

தயாராகிவிட்டார் தல அஜித்; டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்

தல அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அவர் அடுத்ததாக நடிக்க உள்ள ’வலிமை’ என்ற திரைப்படத்தில் அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. ஆகஸ்ட் மாதமே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், செப்டம்பர் அக்டோபர் போய் தற்போது நவம்பர் வந்தும் இன்னும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு ஒரு இனிப்பான செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அஜீத் இதுவரை நடித்திராத வித்தியாசமான போலீஸ் கேரக்டரில் நடிக்க உள்ளதால், இந்த கேரக்டருக்காக தன்னை தயார் படுத்த அவர் மூன்று மாத காலம் அவகாசம் கேட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதனை தயாரிப்பாளர் போனிகபூரும் உறுதி செய்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த கேரக்டருக்காக முழுமையாக தன்னை தல அஜித் தயார்படுத்தி கொண்டதாகவும், தற்போது படப்பிடிப்பு தயார் என்று அறிவித்துள்ளார் என்றும், இதனை அடுத்து வரும் டிசம்பர் மாதம் முதல் வாரம் இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இயக்குனர் எச்.வினோத் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகி உள்ளது

எனவே அஜித்தின் மாஸ் திரைப்படமாக உருவாகவுள்ள ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கி தொடர்ச்சியாக நடைபெறும் என்றும், ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது

சோனியா மன்மோகன் குடும்பத்திற்கு புதிய பாதுகாப்பு! மத்திய அரசு அறிவிப்பு

0

சோனியா மன்மோகன் குடும்பத்திற்கு புதிய பாதுகாப்பு! மத்திய அரசு அறிவிப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி உட்பட இதுவரை எஸ்.பி.ஜி. என்று அழைக்கப்படுகிற சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் பாதுகாப்பு மத்திய அரசால் அளிக்கப்பட்டு வந்தது. இதே போன்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், அவரது மனைவி குர்சரண் கவுர் ஆகியோருக்கும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு அதிரடியாக சோனியா காந்தி, மன்மோகன் சிங் குடும்பத்தினருக்கு அளித்து வந்த இந்த பாதுகாப்பை ரத்து செய்து விட்டது. அதற்கு பதிலாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இசட்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.

இவர்களின் பாதுகாப்புக்காக குறைந்தது மேலும் 1000 போலீசார் வேண்டும் என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை கேட்டு உள்ளது.

மேலும், சோனியா காந்தி குடும்பத்துக்கான புதிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை கடிதம் எழுதி உள்ளது.

அதில், “ சோனியா காந்தி மற்றும் மன்மோகன்சிங் குடும்பத்துக்கு ஏ.எஸ்.எல். நடைமுறை (முன்கூட்டியே தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து பாதுகாப்பு அளிக்கும் நடைமுறை) பின்பற்றப்படுகிறது. எனவே இதில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் உளவு தகவல்கள் தந்து உதவ வேண்டும்; போலீசாரை அளித்து உதவ வேண்டும்; நிர்வாக உதவிகளை செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதாவது சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங், குர்சரண் கவுர் ஆகியோர் தங்கள் மாநிலங்களுக்கு அலுவல் ரீதியிலான பயணமாகாவோ, தனிப்பட்ட பயணமாகவோ வருகிறபோது, அந்தந்த மாநிலங்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தலைவர்கள் செல்லக்கூடிய இடங்களுக்கு குறைந்தபட்சம் 24 மணி நேரத்துக்கு முன்பாகவாவது மத்திய ரிசர்வ் போலீஸ் படை சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சிறப்பு பாதுகாப்பு படையினர் பயன்படுத்தி வந்த குண்டு துளைக்காத வாகனங்களை சோனியா காந்தி குடும்பத்தினர் பாதுகாப்புக்கு பயன்படுத்திக்கொள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

அதே நேரத்தில் மன்மோகன் சிங், குர்சரண் கவுர் பாதுகாப்புக்கென கூடுதல் கவச வாகனங்களை கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை கடிதம் எழுத இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது 3 லட்சத்துக்கும் அதிகமான காவலர்களை கொண்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை, 57 மிக முக்கிய பிரமுகர்களுக்கு (வி.வி.ஐ.பி.) பாதுகாப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழரின் வரலாற்றை திட்டமிட்டே மறைக்கும் மத்திய அரசு! வெகுண்டெழுந்த மருத்துவர் ராமதாஸ்

0

தமிழரின் வரலாற்றை திட்டமிட்டே மறைக்கும் மத்திய அரசு! வெகுண்டெழுந்த மருத்துவர் ராமதாஸ்

தமிழரின் வரலாற்றை உலகிற்கு உணர்த்திய கீழடி அகழாய்வில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும், அதை மறைக்க பார்க்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு கீழடி தொல்லியல் ஆய்வுப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் திட்டம் ஆய்வில் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. இதை கண்டிக்கும் வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் ⁿ என்பதை ஒட்டுமொத்த உலகிற்கும் உணர்த்திய கீழடி தொல்லியல் ஆய்வுப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் திட்டம் ஆய்வில் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதில் செய்யப்படும் கால தாமதம் மிகவும் வருத்தமளிக்கிறது.

நாடாளுமன்ற மக்களவையில் கீழடி அகழாய்வு தொடர்பான வினாக்களுக்கு விடையளித்த மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத்சிங் படேல், கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் திட்டம் இல்லை என்றாலும் கூட, அகழாய்வு நடைபெற்று வரும் இடத்திற்கு அருகில் மாநில அரசின் மூலம் அருங்கட்சியம் அமைக்கப்படும்; அகழாய்வு விரிவுபடுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றால் அதற்கான பரிந்துரை தமிழக அரசிடமிருந்து தான் செய்யப்பட வேண்டும். தமிழக அரசு அத்தகைய பரிந்துரையை இன்னும் செய்யாத நிலையில், கீழடி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படாதோ? என்ற அச்சம் தேவையில்லை.

கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பது உயர்நிலைத் தகுதி அல்ல. மாறாக, தொல்லியல் ஆய்வு நடைபெற்று வரும் ஓர் இடத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதன் மூலம் அப்பகுதியில் நிலங்களை மிகவும் எளிதாக கையகப்படுத்த முடியும். கீழடியைப் பொறுத்தவரை மிகவும் குறைந்த பரப்பளவிலான பகுதிகளில் தான் இதுவரை தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவரை மொத்தம் 5 கட்ட ஆய்வுகளில் 110 குழிகள் மட்டுமே தோண்டப்பட்டுள்ளன. ஆனால், அவற்றிலிருந்து கிட்டத்தட்ட 15,000 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்ட ஆய்விலும் கண்டெடுக்கப்படும் பொருட்களுக்கு இடையே நிறைய வேறுபாடுகளை காண முடிகிறது. முதல் நான்கு கட்ட ஆய்வுகளின் மூலமாகவே தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என நிறுவ முடிந்துள்ள நிலையில், ஆய்வு நடைபெறும் பகுதியை பலநூறு ஏக்கர் அளவுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் தமிழர் நாகரிகம் இன்னும் பல நூற்றாண்டுகள் பழமையானது என்பதை அறிவியல் பூர்வமாக நிறுவுவது சாத்தியமாகும்.

கீழடி குறித்த ஆய்வுக்கு நிலம் வழங்க அப்பகுதி மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றாலும் கூட, அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதன் மூலம் நிலம் எடுப்பது இன்னும் எளிதாகும். ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுப் பகுதி கூட ஆங்கிலேயர் காலத்திலேயே பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக அறிவிக்க தமிழக அரசு பெரிதாக எதையும் செய்யத் தேவையில்லை. இனி வரும் காலங்களில் அகழாய்வு செய்ய வேண்டிய பகுதிகளைஅளந்து, அவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்தாலே போதுமானது. ஆய்வுக்கு நிலம் வழங்க மக்கள் தயாராக இருப்பதாலும், அதற்கான இழப்பீட்டை வழங்க அரசுகள் தயாராக இருப்பதாலும் இதில் எந்த சிக்கலும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதற்கான தேவை இப்போதைக்கு எழவில்லை என்றும், ஆறாம் கட்ட ஆய்வுக்குப் பிறகே இது குறித்து ஆராயப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருக்கிறார். இதற்காக அதுவரை காத்திருக்கத் தேவையில்லை. உத்தரப்பிரதேசத்தின் பாக்பத் நகருக்கு அருகிலுள்ள சனவுலி கிராமத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தான் அகழாய்வு தொடங்கப்பட்டது. அங்கு கி.மு.2000 முதல் கி.மு.1800 வரையிலான காலத்தைச் சேர்ந்த தேர் உள்ளிட்ட தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அடுத்தக்கட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 28.67 ஏக்கர் நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ரூ.6,000 கோடி நிதியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஆனால், அதற்கெல்லாம் முன்பாக 2015-ஆம் ஆண்டிலேயே அகழாய்வுகள் தொடங்கப்பட்ட கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியை அறிவிப்பதற்காக இன்னும் காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கான பரிந்துரையை தமிழக அரசு உடனடியாக தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கீழடி அகழாய்வை விரிவுபடுத்தவும், அருங்காட்சியகத்தை திட்டமிட்டதை விட பிரமாண்டமாக அமைக்கவும் வசதியாக மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியையும் பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: பா ரஞ்சித்

0

உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: பா ரஞ்சித்

கடந்த இரண்டு நாட்களாக விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து பேசிய சர்ச்சை குறித்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகை காயத்திரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் திருமாவளவனை சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்து வந்ததால் அவருடைய டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது

காயத்ரி ரகுராம் மட்டுமின்றி எஸ்வி சேகர் உள்பட பலர் திருமாவளவனை தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியிலும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருமாவளவன் மீதான விமர்சனம் குறித்து இயக்குனர் பா ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

ஒரு கருத்தையொற்றி எதிர்வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இங்கு விமர்சனங்களாக வசைகள், தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது. அண்ணன் #திருமா அவர்களை தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறபோவதில்லை!
என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சித்தின் இந்த திட்டத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் நெட்டிசன்கள் இடையே பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

போதுமான அளவு வாடிக்கையாளர்களை பெற்றதும் வேலையை காட்டும் ஜியோ

0

போதுமான அளவு வாடிக்கையாளர்களை பெற்றதும் வேலையை காட்டும் ஜியோ

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மொபைல் சேவையை வழங்க ஆரம்பித்த பின் ஏற்கனவே இந்த துறையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைக்க படாத பாடு பட்டன.

அந்த அளவிற்கு இந்த ஜியோ நிறுவனம் சலுகைகளை வாரி வழங்கியது. விவரம் தெரிந்தவர்கள் கூறியபடியே தற்போது போதுமான அளவு வாடிக்கையாளர்களை பெற்றதும் இவ்வளவு சலுகைகளை வழங்கிய ஜியோ நிறுவனமும் மற்ற நிறுவனங்களுக்கு நிகராக கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது மொபைல் போன் மற்றும் டேட்டா கட்டணங்களை வரும் நாட்களில் அதிகபடுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த துறையில் உள்ள பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் தங்களது கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் இந்த கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அந்நிறுவனம் வழங்கும் ‘தரவு நுகர்வும், வாடிக்கையாளர்களையும் பாதிக்காத வண்ணம் கட்டணம் உயர்த்தப்படும்’ என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

முன்னதாக பார்தி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் வரும் டிசம்பர் 1 முதல் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் செப்டம்பர் 2019-ல் முடிந்த காலாண்டில் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்து தான் இந்த கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

இந்நிலையில் இரு நிறுவனங்களின் இணைந்த நஷ்டம் ரூ.74,000 கோடி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட்: போட்டி தொடங்கும் முன்பே செய்த சாதனை

0

இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட்: போட்டி தொடங்கும் முன்பே செய்த சாதனை

கடந்த சில ஆண்டுகளாக பகலிரவு டெஸ்ட் போட்டி உலகம் முழுவதும் புகழ் பெற்று வரும் நிலையில், இந்தியா முதல் முதலாக வரும் 22ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி ஒன்றில் வங்கதேச அணியுடன் மோத உள்ளது.
இந்த போட்டியை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


பொதுவாக டெஸ்ட் போட்டி என்றாலே ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. இதனை அடுத்த டெஸ்ட் போட்டியில் ரசிகர்களை ஈடுபாட்டை அதிகரிக்க பகலிரவு டெஸ்ட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட பல நாடுகள் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் முதன்முறையாக இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையே பகலிரவு இறுதி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற உள்ளது

இந்தியா விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் 67 ஆயிரம் பேர் போட்டியை பார்க்கும் அளவுக்கு இடவசதி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கிய நிலையில், டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் கொண்ட ஆர்வத்தால் முதல் நாளிலேயே நான்கு நாட்களுக்கான டிக்கெட் விற்பனை ஆகி விட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க தான் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க முதல் முதலாக கிடைத்த வாய்ப்பு என்பதால் பலர் இந்த போட்டிக்கான டிக்கெட்டை வாங்க முன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்முடியை விழுப்புரம் மாவட்டத்தை விட்டே விரட்டிய எடப்பாடி! பின்னணியில் இராமதாஸ்

0

பொன்முடியை விழுப்புரம் மாவட்டத்தை விட்டே விரட்டிய எடப்பாடி! பின்னணியில் இராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் தற்போது இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தை பிரித்து உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் வருவாய் கோட்டங்களும், சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளூந்தூர்ப்பேட்டை, கல்வராயன்மலை தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.

விழுப்புரத்தில் விழுப்புரம் திண்டிவனம் வருவாய் கோட்டங்களும், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், செஞ்சி, திண்டிவனம், மேல்மலையனூர், மரக்காணம், கண்டச்சிபுரம் தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.

இது ஒருபுறம் இருந்தாலும் கட்சிகளுக்கிடையே அமைப்பு ரீதியில் அதிமுகவும் திமுகவும் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

அதாவது விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்த வரை அதிமுகவின் அமைச்சர் சீ.வி. சண்முகத்துக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் திண்டிவனம்,வானூர், செஞ்சி, மயிலம், விழுப்புரம்,விக்கிரவாண்டி என ஆறு தொகுதிகள் அவரது கட்டுப்பாட்டில் வருகிறது.

திமுகவைப் பொறுத்தவரை மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய தளபதி எனப்படும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் ஆதிக்கமே இருந்து வருகிறது. அவரது கட்டுப்பாட்டில் விழுப்புரம் மத்திய மாவட்டம் என்று அமைப்பு ரீதியாக திமுக பிரிக்கப்பட்ட பின்பு விழுப்புரம்,விக்கிரவாண்டி, வானூர், திருக்கோவிலூர் என நான்கு தொகுதிகள் வருகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் பொன்முடி தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதியதாக பிரிக்கப்பட்டு உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள திருக்கோவில் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளார்.

அதாவது தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திருக்கோவிலூர் தொகுதி சென்றுவிட்டது. இந்த சூழ்நிலையில் அவருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் அல்லது விழுப்புரம் மாவட்ட செயலாளர் என எதாவது ஒன்றை திமுக அமைப்பு ரீதியாக அறிவிக்கப்பட வேண்டும். இதில் திமுக தலைமை என்ன செய்யப் போகிறது என்று திமுகவினரிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விழுப்புரம் தொகுதியில் வன்னியர் சமுதாய வாக்குகள் பெரும்பாலும் திமுகவிற்கு எதிர்ப்பாக விழுந்ததால் தான் பொன்முடி விழுப்புரம் தொகுதியை விட்டு அவரின் சொந்த தொகுதியான திருக்கோவிலூர் தொகுதிக்கு சென்று போட்டியிட்டார். கடந்த மாதம் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட வன்னியர்களின் பலமிக்க தொகுதி என்பதால் பொன்முடியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் வன்னியர்கள் முழு மூச்சாக செயல்பட்டனர். இதற்கு பலனும் கிடைத்துவிட்டது.

திமுகவில் உள்ள வன்னிய பிரமுகர்களை வைத்து கடுமையாக பிரச்சாரம் செய்தும், மு.க.ஸ்டாலின் சுழன்று சூறாவளியாக பிரச்சாரம் செய்தும், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தரப்படும் என்று வாக்குறுதி அளித்தும், வன்னியர்கள் திமுகவை எதிர்த்து வாக்களித்தது மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தியது.

தோல்விக்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்ததில், பொன்முடி எதிர்ப்பு காரணமாக தான் விக்கிரவாண்டியில் நாம் தோல்வி அடைந்தோம் என்று பெரும்பாலான திமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். அவர் செய்து கொண்டு வரும் வன்னியர் எதிர்ப்பு அரசியல் தான் இதற்கு முக்கிய காரணம் என்றும், வன்னியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தனது சொந்த சாதியினருக்கும் மட்டும் தான் விழுப்புரம் மாவட்ட திமுகவில் முன்னிலைப்படுத்தி பதவிகளை அனுபவிக்க செய்து வந்தார் என்றும் கூறியுள்ளனர். மேலும் இதனாலேயே தோல்வியை பரிசாக பெற்றோம் என்று திமுகவில் உள்ள வன்னியர்களே தெரிவித்தது பொன்முடியை அதிர்ச்சி அடைய செய்தது. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி நலனுக்காக நான் சர்வாதிகாரியாக கூட மாறுவேன் என்று திமுக மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். இது பொன்முடிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக உள்ள திருக்கோவிலூர் தொகுதி முதலில் விழுப்புரம் மாவட்டத்தில்தான் சேர்க்கப்படுவதாக இருந்தது. விக்கிரவாண்டி வெற்றிக்குப் பிறகு அதிமுகவின் பார்வையில் பொன்முடியை விழுப்புரம் மாவட்டத்தை விட்டே விரட்ட வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கியது. இதனால் திடீரென திருக்கோவிலூர் தொகுதியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்தது ஆளும் தரப்பு. இதனால் ஏற்படும் பாதிப்பு எல்லாம் பொன்முடிக்கு தான். குறுநில மன்னன் போல் கட்சியிலும் ஆட்சியிலும் பங்கு கொண்ட பொன்முடி இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அதிமுக தனது அஸ்திரத்தை எடுத்துள்ளது. மாவட்டத்தில் அடங்கியுள்ள தொகுதிகள் அனைத்துமே வன்னியர்கள் பலமிக்க தொகுதியாகும் விழுப்புரம் விக்கிரவாண்டி,மயிலம்,திண்டிவனம்,வானூர் இந்த தொகுதியில் வன்னியர்கள் சராசரியாக 55 சதவீதம், தலித் சமுதாயம் சராசரியாக 35 சதவீதம் மீனவர்கள் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினர் போன்றவர்கள் 10 சதவீதம் பேர் அடங்கியுள்ளனர்.

வன்னியர் சமுதாயத்தை சேரந்தவரான அமைச்சர் சி.வி சண்முகம் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு விழுப்புரம் மாவட்டத்தின் அசைக்கமுடியாத மாவட்ட செயலாளராக மாறிவிட்டார். ஆனால் பொன்முடி தற்போது விழுப்புரம் மாவட்ட செயலாளரா? அல்லது கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரா? என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர் விழுப்புரம் மாவட்ட திமுக உடன்பிறப்புகள்.

பாமக நிறுவனர் ராமதாஸின் சொந்த மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வந்தார் பொன்முடி. இதனாலயே வன்னியர்களை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ள விடாமல் ஒதுக்கி வைத்தார் பொன்முடி.

தற்போது முதலமைச்சர் எடப்பாடியும் பாமக நிறுவனர் ராமதாஸும் கைகோர்த்து உள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தை விட்டு பொன்முடியை விரட்டி அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் திருக்கோவிலூர் தொகுதி கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் சேர்ந்து சதி செய்து விட்டனர் என்று திமுக உடன்பிறப்புகள் கூவிக்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

பாஜக,அதிமுக முத்திரையை தந்திரமாக உடைத்த ரஜினி:

0

பாஜக,அதிமுக முத்திரையை தந்திரமாக உடைத்த ரஜினி:

ரஜினி தான் என்று அரசியலுக்கு வருவதாக கூறினாரோ அன்றில் இருந்து அவரை பாஜகவின் ஆதரவாளர் என்றும், அதிமுகவுக்கு அவர் ஆதரவு கொடுப்பார் என்றும் பேசப்பட்டு வந்தன. தனக்கு பின்னால் பாஜகவும் இல்லை வேறு எந்த கட்சியும் இல்லை என்றும், தான் தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினி கூறியும் யாரும் அதனை நம்ப வில்லை. மீண்டும் மீண்டும் அவர் பாஜகவுக்கு ஆதரவாக பேசுவதாக அரசியல்வாதிகள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இரண்டே இரண்டு பேட்டிகளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தற்போது பாஜக மற்றும் அதிமுகவினர் ரஜினியை திட்டும் அளவுக்கு ரஜினி கொண்டு வந்துவிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் மீதும் திருவள்ளுவர் மீதும் காவி சாயம் பூச முடியாது என்று ரஜினி கூறியதை பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இதிலிருந்து அவர் பாஜகவில் பின்னால் இல்லை என்பது உறுதியாயிற்று

இதனை அடுத்து தற்போது அவர் அடுத்த கட்டமாக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி குறித்து பேசியதை அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த இரண்டே இரண்டு பேட்டிகளில் தன் மீது இருந்த பாஜக மற்றும் அதிமுக முத்திரையை அவர்கள் மூலமே நீக்கிவிட்டார். இனி யாரும் ரஜினியை பாஜகவின் பிம்பம் என்றும் அதிமுகவின் ஆதரவாளர் என்றும் பேச மாட்டார்கள். ரஜினியின் இந்த தந்திரத்தை அரசியல் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்

விமர்சனம் செய்தால் பதிலடி கொடுக்கப்படும்: கமல்-ரஜினிக்கு அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை

0

விமர்சனம் செய்தால் பதிலடி கொடுக்கப்படும்: கமல்-ரஜினிக்கு அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை

கடந்த ஞாயிறு அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆட்சி குறித்து அதிசயம்-அற்புதம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி ரஜினி கூறிய கருத்து தீயாய் பற்றிக்கொண்டு கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இன்னும் ஒருசில நாட்களுக்கு ஊடகங்களுக்கு தீனியாக இந்த விஷயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், ‘ரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்க வாய்ப்பு இல்லை என்றும், மக்களுக்கு நல்லது செய்த பின்னர் பதவிக்கு வரவேண்டும் என்றும், மற்றவர்கள் மீது கல்லெறிந்து பதவியை பெற நினைக்க கூடாது என்றும் கூறினார். மேலும் தமிழகத்தில் தற்போது சிறப்பான ஒரு அரசு நடைபெற்று வருவதாகவும், அந்த அரசை விமர்சனம் செய்யக்கூடாது என்றும் கூறிய அமைச்சர் ஜெயகுமார், மீறி விமர்சனம் செய்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் தமிழகத்தில் அரசியலில் ஈடுபட்டு அரியணை ஏற ரஜினி கமல் விஜய் என யாராக இருந்தாலும் சரி அனைவருக்கும் ஆசை இருக்கும் என்றும், அதனை தவறு என்று சொல்ல முடியாது என்றும் ஆனால் அதே நேரத்தில் எங்கள் மீது கல்லெறிந்தால் காயம் எங்களுக்கு இல்லை, அவர்களுக்குத்தான் ஏற்படும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் எச்சரித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியில் இருந்து அனைத்து முக்கிய அதிமுக தலைவர்களும், பாஜகவினர்களும் தொடர்ந்து ரஜினியை விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் வழக்கம்போல் ரஜினிகாந்த் எந்தவித பதிலும் கூறாமல் ‘தர்பார்’ டப்பிங் பணியில் உள்ளார் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் வாழ்வா? சாவா? நிலையில் இந்தியா

0

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் வாழ்வா? சாவா? நிலையில் இந்தியா

நடைபெற்று வரும் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் வாழ்வா சாவா போட்டியில் இந்தியா ஓமனிடம் மோதவுள்ளது.

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இதில் இந்தியா ஓமனுக்கு எதிரான 2வது லெக் போட்டியில் ஓமனில் உள்ள மஸ்கட் நகரில் இன்று (செவ்வாய்) இரவு 7.00 மணிக்கு விளையாடவுள்ளது.இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறாவிட்டால் உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்துவிடும்.

இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் தோல்வி அடைந்தது. 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி ஆசிய சாம்பியனான கத்தாருடன் ட்ராவில் முடிந்தது. 3-வது ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேச அணியுடன் ட்ராவில் முடிந்தது.4வது ஆட்டமும் 1-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியுடன் ட்ராவில் முடிந்தது.

முதலாவது லெக்கில் 1-2 என்ற கணக்கில் ஓமனிடம் தோல்வி அடைந்ததால் இந்தப் போட்டியில் ஓமனை விட 2 கோல் அதிகம் பெற்றால் மட்டுமே இந்தியா வெற்றி பெரும்.இதில் இந்தியா தோல்வி அடைந்தாலோ அல்லது ஆட்டம் ட்ராவில் முடிவடைந்தாலோ உலக கோப்பைக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துவிடும்.

எனவே இந்த ஆட்டம் இந்திய கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவுள்ளது. இதைப் பற்றி இந்திய கேப்டன் சுனில் சேட்த்ரி – முதல் லெக்கில் ஓமனிடம் அடைந்த தோல்விக்கு இப்பொழுது பழி தீர்ப்போம் என்று கூறிவுள்ளார்.