நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – நீதிமன்றம் எச்சரிக்கை!!
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளது, இந்த மோசடி சம்பவத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட `நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 3 ஆண்டுகளில் முதலீடு இரட்டிப்பாகவும் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து சேரும் என்றும் விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி ஏராளமான மக்கள் இந்த நிதி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கிலும், லட்சக் கணக்கிலும் முதலீடு செய்துள்ளனர்.
ஆரம்பத்தில் சரியாக மாதம்தோறும் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேர்ந்துள்ளது. ஆனால் மாதங்கள் செல்ல- செல்ல பணம் வருவதில் தாமதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் பணம் எதுவும் வரவில்லை. லட்சக்கணக்கில் பணம் செலுத்தியவர்கள் இந்த நிறுவனத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டது புரிய வந்துள்ளது. இதையடுத்து, இந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் பல்வேறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான கமலக்கண்ணன், வீரசக்தி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 17 பேர்மீது பொருளாதாரக் குற்றப்பிரிவினர் வழக்கு பதிவுசெய்தனர். இதில் சிலர் கைதுசெய்யப்பட்டும், கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி ராமகிருஷ்ணா அவர்கள் இந்த வழக்கை விசாரணை நடத்தினார். அப்போது, முறையான விசாரணை நடத்தாவிட்டால் நியோமேக்ஸ் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்ற நேரிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
நியோமேக்ஸ் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது நீதிபதி ராமகிருஷ்ணன் அவர்கள், தேவைப்பட்டால் விசாரணை அதிகாரிகளின் தொலைப்பேசி தொடர்புகளைச் சோதனை செய்யவும் நேரிடும் என்றும் அதிகாரிகளிடம் கூறினார்.
பல ஆயிரம் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றதாகக் கூறப்படும், தமிழக அளவில்
நியோமேக்ஸ் நிதி நிறுவன
மோசடி மிகப்பெரிய மோசடி சம்பவம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.