புதிய உணவு பட்டியல் வெளியீடு!! மாணவர்களுக்கு வெளியான தமிழக அரசின் அறிவிப்பு!!
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டது.
தற்போது செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ரூ. 33.56 கோடி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. மாணவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டியாக உப்புமா, கோதுமை ரவா, வெண்பொங்கல், கிச்சடி முதலியவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் தற்போது “முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தின்” கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புதிய உணவு பட்டியல் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த புதிய உணவு பட்டியலின் கீழ் திங்கள் கிழமை அன்று ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா வழங்கப்பட உள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி வழங்க உள்ளது. அதே போல் புதன் கிழமை அன்று காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா பொங்கல் மற்றும் வெண்பொங்கல் வழங்கப்படும்.
வியாழக்கிழமைகளில் காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவை வழங்கப்படும். வெள்ளிக்கிழமை அன்று சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, ரவா காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி முதலிய உணவுகள் வழங்கப்படும்.
மேலும் ஒரு மாணவ/மாணவிக்கு ஒரு நாளில் வழங்கப்படும் காலை உணவுகளில் உள்ள மூலப்பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி / கோதுமை ரவா / ரவா மற்றும் சேமியா.
உள்ளூர்களில் அந்தந்த இடங்களில் விளையக்கூடிய சிறுதானியங்கள்/ சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் ஊரில் கிடைக்கக்கூடிய காய்கறிகள் ( சமைத்த பிறகு 150 – 200 கிராம் உணவு, 100.மி.கி. கூடிய சாம்பார் ).
மேலும் ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 2 நாட்களிலாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் செய்யப்பட்ட காலை உணவை வழங்கவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.