பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!! ஜூலை 2 கலந்தாய்வு!!
இந்த ஆண்டுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நிறைவுப்பெற்று, இதற்கான முடிவுகள் மே எட்டாம் தேதி வெளியிடப்பட்டது. எனவே மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த துறைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மொத்தமாக 1.54 லட்சம் இளநிலை படிப்பிற்கான இடங்கள் உள்ளது.
இதில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு மே 5 இல் துவங்கி ஜூன் 4 வரை நடைபெற்றது. இதில் மொத்தமாக 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன.
மேலும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 பேர் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்கின்றனர். இந்த சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி கடந்த 20 ஆம் தேதி அன்று நிறைவு பெற்றது.
அந்த வகையில் இன்று பொறியியல் கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. மேலும் அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் உள்ள கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடுகிறார்.
இந்த பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மொத்தம் 1 லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவர்களுக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
மேலும் மாணவர்கள் இந்த தரவரிசை பட்டியலை www.tneaonline.org என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தரவரிசை பட்டியலை பற்றி புகார் தெரிவிக்க மாணவர்களுக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜூலை இரண்டாம் தேதி முதல் கலந்தாய்வு துவங்க உள்ளது.