Home Breaking News பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்!

பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்!

0

பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்!

கிருஷ்ணகிரியில் மாங்காய் ஒரு டன்னுக்கு 50,000 விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50,000 இழப்பீடு வழங்க கோரியும் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக மா உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக மா உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாங்கூழ் தொழிற்சாலை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடமிருந்து 18ஆயிரம் ரூபாய்க்கு மட்டும் மா கொள்முதல் செய்யப்படுகிறது ஆனால் வெளி மாநில விவசாயிகளிடமிருந்து 65 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நிலை நீடிப்பதால் இனி சராசரியாக ஒரு டன் மாங்காய் 50 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கை சீற்றங்களான ஆலங்கட்டி மழை, சூறாவளி காற்று மற்றும் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளை இலவச இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்பட்டு காவிரி டெல்டா பகுதிகளில் வழங்கப்படும் இழப்பீடு போல் இங்கும் ஏக்கர் ஒன்றுக்கு 50,000 இழப்பீடு வழங்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வால்பேன்கள் மற்றும் அசுவனி நோயால் பாதிக்கப்பட்ட மா பயிர்களுக்கு உடனடியாக ஏக்கருக்கு ஐம்பதாயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக வரட்சியால் பாதிக்கப்பட்ட மாத்தோட்டங்களை மீண்டும் அமைக்க நடவு மானியம் 60 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பழைய தோட்டங்களை பராமரிக்க ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் வழங்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்ட மா மற்றும் மாங்கூழ்களை சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்ய மீண்டும் கிருஷ்மாவை செயல்பட வைக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து மாங்கூழ் தொழிற்சாலைகளும் மீண்டும் செயல்பட வைக்க வேண்டும் என ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

author avatar
Savitha