‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறைப்பா? உயர்நீதிமன்றம் கூறிய கருத்து!
சீனாவில் உள்ள உகான் பகுதியில், கடந்த 2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸானது இந்தியாவிலும் பரவத் தொடங்கியது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததை தொடர்ந்து தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்தது. இந்த சமயத்தில், கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த ஒமைக்ரான் வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்தியாவிலும் பரவத் தொடங்கியது.
இந்த ஒமைக்ரானின் வருகைக்கு பின், நாட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று வேகமெடுத்தது. இந்த சூழ்நிலையில், சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆதித்யா லரோயா என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில், இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்தியாவில் முன்கள பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு 9 மாத கால இடைவெளியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும், ஆனால் சில நாடுகளில் 2-வது தடுப்பூசிக்கு பிறகு 39 நாட்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றும், இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை குறைக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதனை பரிசீலித்த நீதிபதிகள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் கால இடைவெளியை மருத்துவ நிபுணர்கள் நிர்ணயித்துள்ளனர் என்றும், இது போன்ற கொள்கை விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.