கர்ப்பிணி உட்பட நான்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்! 10ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் டி.மண்டபம் கிராமத்திற்கு கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த திருக்கோவிலூரில் இருந்து போலீசார் சென்றனர்.அந்த விசாரணையில் பழங்குடி இருளர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் சென்று சோதனை நடத்தினார்கள்.
அந்த சோதனையில் அங்கிருந்து நான்கு பெண்களை விசாரணை என்ற பெயரில் வேனில் அழைத்து சென்றனர்.அவர்களில் ஒரு பெண் கர்ப்பிணி என்பது குறிப்பிடதக்கது.மேலும் செல்லும் வழியில் தைலமர தோப்பில் வைத்து நான்கு பெண்களையும் போலீசார்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இது குறித்து அப்போது பணியில் இருந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ,சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன் ,ஏட்டு தனசேகரன் ,போலீஸ்காரர்கள் பக்தவச்சலம் மற்றும் கார்த்திக்கேயன் ஆகியோர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்டோர் மீது பாலியல் பலாத்காரம் ,கையால் தாக்குதல் உள்ளிட்ட ஆறு சட்டங்களின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மேலும் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உட்பட ஐந்து போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.இந்த வழக்கு விழுப்புரத்தில் உள்ள எஸ்.சி.,எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
மேலும் இந்த வழக்கில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் ,ஏட்டு தனசேகரன் ,போலீஸ்காரர்கள் பக்தவச்சலம் மற்றும் கார்த்திகேயன் ஆகிய நான்கு பேர்களுக்கும் முன்னதாகவே ஜாமீன் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் சீனிவாசனுக்கு மட்டும் ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதனால் அவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அப்போது அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் விழுப்புர நீதிமன்றத்தில் தான் நீங்கள் பார்க்க வேண்டும் என கூறி உத்தரவிட்டது.
அதனால் அவர் ஜாமீன் கேட்டு விழுப்புரம் எஸ்.சி.,எஸ்.டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த மனு கடந்த மே மாதம் 16ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.அந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த மனுவின் உத்தரவு வெளியிடப்படுவதற்கு முன்பாகவே தம்மை கைது செய்ய நேரிடும் என்று நினைத்து இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் இருந்து தப்பிச்சென்றார்.அதனையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறபித்து அப்பொழுதே கோர்ட் உத்தரவிட்டது.
அந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலம் முடிவடைந்த நிலையில் சீனிவாசன் அரக்கோணம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.அதனையடுத்து திருக்கோவிலூர் போலீசார் அவரை தேடுவதை அறிந்த இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மருத்துவ விடுப்பு எடுத்து தலைமறைவாக இருந்து வந்தார்,
இந்நிலையில் அவர் நேற்று காலை விழுப்புரம் எஸ்.சி.,எஸ்.டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பாக்கியஜோதி முன்னிலையில் சரணடைந்தார்.அப்போது அவர் எனக்கு இந்த வழக்கில் இருந்து ஜாமீன் வழங்குபடி மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததோடு ,இன்ஸ்பெக்டர் சீனிவாசனை கைது செய்து வருகிற 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.அதனையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசனை திருக்கோவிலூர் போலீசார் கைது செய்தனர்.