சேப்பாக்கத்தில் நாளை இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் பலபரீட்சை!!
இந்திய விளையாட்டு ரசிகர்களின் இதயத்துடிப்பு ஆட்டம் என்றால் அது கிரிக்கெட்டை தவிர வேறு எதுவாக இருக்க முடியும், அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகள் என்றால் சொல்லவா வேண்டும். ஆஸ்திரேலிய அணியானது கடந்த மாதம் முதல் நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான தொடரில் விளையாடுவதற்காக வந்துள்ள நிலையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் வெற்றி வாகை சூடியது இந்திய அணி .
இந்த நிலையில் மூன்று ஒருநாள் போட்டிகளில், ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்தது இதில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து வெற்றி மகுடம் சூட போவது யார் என்ற போட்டியானது, நாளை சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மூன்றாவது போட்டி நடைபெறும் சிதம்பரம் மைதானத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நாளை போட்டி நடைபெற இருப்பதால் சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். இந்த போட்டிகளுக்கான டிக்கெட்கள் அனைத்தும் ரசிகர்கள் வாங்கிவிட்டனர், இதனால் நாளை மைதானம் ரசிகர்களால் நிரம்பி வழிய போகிறது.
இந்த ஆட்டங்களுக்கான பயிற்சியில் இரு நாட்டு வீரர்களும் நேற்று இன்றும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் வெல்லப்போவது யார் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியா அல்லது டெஸ்ட் தொடரை இழந்த ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியா என்ற எதிர்பார்ப்புடன் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
நாளை போட்டி நடைபெறுவதை ஒட்டி சென்னை சேப்பாக்கத்தில் மைதானம் சுற்றிலும் மதியம் பனிரெண்டு மணி முதல் இரவு பனிரெண்டு மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.