எங்களையே டிக்கெட் எடுக்க சொல்கிறாயா? சினிமாவைப் போல் ஓடும் பஸ்ஸில் ரவுடிகளால் நடத்துநருக்கு ஏற்பட்ட கொடூரம்!
சென்னையில் டிக்கெட் எடுக்க கூறிய நடத்துனரை ரவுடிகள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வண்ணாரபேட்டையில் ஓடும் பஸ்சில் டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனரை மறைத்து வைத்த அரிவாளால் ரவுடிகள் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இந்த அதிர்ச்சியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
நேற்று இரவு சென்னை திருவேற்காட்டில் இருந்து அரசு பஸ் ஒன்று வள்ளலார் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் நடத்துனராக சூளைமேடு- ஆத்ரேயபுரம் பிரதான சாலையை சேர்ந்த நடத்துனர் த.ஜெகதீசன் என்பவர் பயணசீட்டு கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த பஸ் பழைய வண்ணாரபேட்டை மூலகொத்தளம் சிக்னல் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பொது இரண்டு பேர் அந்த பஸ்சில் ஏறி உள்ளனர்.
அவர்களிடம் ஜெகதீசன் டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு இருவரும் எங்களிடம் எப்படி டிக்கெட் கேக்கலாம் என கூறி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரிடம் தகராறு செய்தனர். அப்போது வாக்குவாதம் முற்றவே அந்த நபர்கள் தங்களிடம் இருந்த கத்தியால் திடிரென ஜெகதீசனை வெட்டினர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பஸ்சில் பயணம் செய்த பிற பயணிகள் கூச்சலிடவே அந்த இருவரும் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தப்பியோடினர். ரவுடிகள் வெட்டியதில் காயம் அடைந்த நடத்துனர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இதுகுறித்து ஜெகதீசன் வண்ணாரபேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஓடும் பஸ்சில் நடத்துனரை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.