கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது!
மருத்துவமனைக்கு கர்ப்பிணியை ஏற்றிச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸ் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மனைவி சந்திரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இவரது பிரசவத்தில் சிக்கல் இருப்பதால் திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து உறவினர் பாதுகாப்புடன் திருச்சியை நோக்கி ஆம்புலன்ஸ் கிளம்பியது. அப்போது திருச்சி அவிநாசி சாலையில் சென்றபோது கார் ஒன்று ஆம்புலன்ஸை இடிப்பதுபோல் வந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ் தலைகுப்புற கவிழ்ந்து நூலிழையும் கர்ப்பிணி உயிர்தப்பினார்.
இதையடுத்து மற்றொரு ஆம்புலன்ஸ் வந்து கர்ப்பிணியை ஏற்றிச்சென்ற போது அந்த வாகனம் திடீரென தீப்பிடித்த எரிந்தது. தீவிபத்து குறித்து உடனடியாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் கர்ப்பிணி உட்பட நால்வர் உயிர் தப்பினர். இருவேறு ஆபத்துகளை கடந்துவந்த கர்ப்பிணி சந்திராவுக்கு நேற்றிரவு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது.