ADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கான நேரம் நெருங்கி வருவதால் அதிமுக தமிழகத்திலுள்ள தொகுதிகள் அனைத்தையும், தன் வசப்படுத்தி விட வேண்டுமென்ற நோக்கில் உள்ளது. இதனால் தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளில் சுமார் 160 தொகுதிகளுக்கும் மேலாக இபிஎஸ் சுற்றுப்பயணம் செய்து விட்டார். மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவை சேர்ந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி பல வருடங்களாக அதிமுக வசம் உள்ளது. இதனை எப்படியாவது திமுக வசம் கொண்டு வர வேண்டுமென ஸ்டாலின், அமைச்சர் மூர்த்திக்கு கட்டளையிட்டதாக தெரிகிறது. அவரின் செயல்பாடுகளும் அதனை நிரூபிக்கும் வகையில் உள்ளது.
எப்போதும் இல்லாமல் கடந்த சில மாதங்களாகவே அமைச்சர் மூர்த்தி & கோ மதுரை மேற்கு தொகுதியில் உள்ள கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இலவசமாக சில பொருட்களையும், வாரத்திற்கு ஒரு முறை அசைவ விருந்து போன்ற பல வேலைகளை செய்து வருகின்றார். இதனை தடுக்க செல்லூர் ராஜு எவ்வளவு முயன்றும் அவர்களை தடுக்க முடியவில்லை.
இதனால் இபிஎஸ்யிடம் சென்ற செல்லூர் ராஜு மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இதற்கு மறுத்த இபிஎஸ் எல்லோரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தான் போட்டியிட வேண்டுமென்று திட்ட வட்டமாக கூறிவிட்டாராம். இதனால் திமுக மதுரை மேற்கு தொகுதியில் காலூன்ற போவதை அறிந்த செல்லூர் ராஜு என்ன செய்வதென்று தெரியாமல் திணறி கொண்டிருக்கிறார்.