TVK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்தவர் விஜய். இவர் புதிய கட்சி தொடங்கிய நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் முதல்முறை போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இவர் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கணிக்கப்படுகிறது. இவர் கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை தவெகவுக்கான ஆதரவு அதிகளவில் உள்ளது. இதனால் தவெகவில் முக்கிய முகங்களாக திகழ வேண்டுமென பலரும் முயற்சித்து வருகின்றனர்.
அதற்காக தங்களுடைய சொந்த கட்சியை தவிர்த்து விட்டு தவெகவில் ஐக்கியமாகி உள்ளனர். அந்த வரிசையில், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், புஸ்ஸி ஆனந்த, அண்மையில் செங்கோட்டையன் என பலரையும் சொல்லி கொண்டே போகலாம். இந்நிலையில் விஜய் அழைக்காமலேயே அவரது கட்சிக்கு குரல் கொடுத்து வந்தவர் நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. கரூர் சம்பவம் நடந்த போது கூட சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட அவர், தளபதி அரசியலுக்கு புதியவர்.
அதனால் அவருடன் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் அவருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமென விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இதனால் இவர் கூடிய விரைவில் தவெகவில் சேர்க்கப்பட்டு, முக்கிய பதவி வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரை தவெகவில் யாரும் கண்டு கொள்ளபடாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தாடி பாலாஜி, லட்சிய ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்து கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், எத்தனை நாள் நானும் பொறுத்திருப்பது.
மரியாதையை எங்கு கிடைக்கிறதோ அங்கு செல்வது தான் மனுஷ இயல்பு. தளபதிக்காக அவர் கூப்பிடாமலே உழைச்சேன். ஆனா அவர் கூட இருக்கவங்க என்ன கண்டுக்கவே இல்ல. ஒரு தடவ தளபதியை 10 நிமிசம் பாக்க டைம் கெடச்சி இருந்த எல்லாத்தையும் கொட்டி இருப்பேன். ஆனா அது முடியல, அப்புறம் தான் தெரிஞ்சது, விஜய் அப்பாவுக்கே இந்த நிலைமை தான்னு. இவ்வாறு பல்வேறு குற்றசாட்டுகளை அவர் அடுக்கினார். இவரின் இந்த திடீர் மாற்றம் விஜய்க்கு எதிராக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.