DMK VCK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தமிழக அரசியல் அரங்கு மிகவும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில், அதிமுக வசம் உள்ள கொங்கு மண்டலத்தை திமுக வசம் கொண்டு வருவதற்கான பணிகளும், சென்ற முறை தோல்வியடைந்த இடங்களில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளும், விஜய் பக்கம் உள்ள இளைஞர்கள் வாக்குகளை திசை திருப்பவது போன்ற ஏகப்பட்ட முயற்சிகள் திமுகவால் செய்யப்பட்டு வருகிறது.
இப்போது இருக்கும் சூழலில் எந்த ஒரு கட்சியாலும் தனித்து நின்று வெற்றி பெற முடியாது என்பதால், திமுக அதன் கூட்டணி கட்சிகளிடம் மிகவும் கவனமாக நடந்து வருகிறது. இந்நிலையில் திமுக உடன் பல ஆண்டுகளாகவே அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சமீப காலமாக திமுக தலைமையிடம் கறார் காட்டி வருகிறது. விசிகவிற்கு இந்த முறை இரட்டை இலக்கத் தொகுதிகள் வேண்டும், ஆட்சியில் பங்கு கேட்போம் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. இவ்வாறான நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் என்ற பெயரை கிராமின் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு மசோதா இயற்றப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசின் இந்த செயலை கண்டித்து திமுக சார்பில் ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் நடந்த போது, அதில் விசிகவும் பங்கேற்றது. அப்போது விசிகவின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் பாஜக அரசை கண்டிக்கிறோம் என்பதற்கு பதிலாக, ஸ்டாலின் அரசை கண்டிக்கிறோம் என்று முழக்கமிட்டு சற்று நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். இவரின் இந்த முழக்கத்தால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.