கே.பி.அன்பழகன் அறிவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்! அறிவிப்பு என்ன தெரியுமா?

Photo of author

By Parthipan K

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு கோரி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், “அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்  சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை” என்று அறிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பை மு.க.ஸ்டாலின் அவர்கள் வரவேற்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி இந்த முடிவை மத்திய அரசுக்கு கடிதம் மூலம் நேரடியாக தெரிவிக்கும்படி மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராக, மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா  அவர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தர்மபுரியிலிருந்து அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது : “அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டால் தமிழக  மாணவர்கள் பாதிக்கப்படுவர். ஏனெனில் உயர் சிறப்பு அந்தஸ்து பெற்றால் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்படும். 

மேலும் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அது மட்டுமன்றி பிற மாநில மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இதுபோல பல  விஷயங்களை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை என்பதை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மேலும் தமிழக மாணவர்களுக்கு எந்த ஒரு கடினமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் எந்த ஒரு சிறப்பு அந்தஸ்துக்காக எவற்றையும் நாம் இழக்க வேண்டாம் என்றும் மேலும் நாம் இப்போதே சிறப்பாக தான் இருக்கிறோம், ஆகையால் சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை” என்று அவர் பேட்டியளித்துள்ளார்.