பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து நடப்பாண்டு செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான நடப்பாண்டு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் 14ம் தேதி தொடங்கும் என்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் முடிந்த பிறகே, இதர மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், செமஸ்டர் தேர்வுக்காண விரிவான அட்டவணை விரைவில் அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.