மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயிலின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான உழைப்பாளர்களின் உழைப்பில் மலையை குடைந்து இந்த ரயில் வழித்தடம் உருவாக்கப்பட்டது. இயற்கை எழிலுடன் கூடிய மலைமுகடுகளை இந்த மலை ரயிலில் பயணிக்கும் போது கண்டு ரசிக்க முடியும். அதனால் மக்கள் குடும்பத்தோடு இந்த மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்டிருந்த இந்த மலை ரயில் போக்குவரத்து தற்போது மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.
தெற்கு ரயில்வே இயக்கி வந்த இந்த மலை ரயில்கள் தற்போது தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. குத்தகைக்கு எடுத்த அந்த தனியார் நிறுவனம் இந்த மலை ரயிலின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த மலை ரயிலில் பயணிக்க நபர் ஒருவருக்கு 2,500 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ரயிலின் முன் பகுதியில் தெற்கு ரயில்வே இலட்சினைகள் எதுவும் இல்லாமல் TN 43 என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. தனியார் நிறுவனம், ஒரு மலை ரயிலுக்கு சுமார் 4.5 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தி இயக்கி வருகிறது.
மேலும், விமானத்தில் இருப்பதைப்போல ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் ஒரு பணிப்பெண்கள் இருக்கிறார்களாம். அத்துடன் ரயிலில் பயணிக்கும் போது ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. மலை ரயிலின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.