சூயஸ் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டாலும் எகிப்துக்கும், உரிமையாளருக்கும் தலைவலியாக உள்ள கப்பல்!
உலக பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமான கடல் வழித்தடமாக உள்ளது சூயஸ் கால்வாய். இதில் கடந்த மாதம் 23ஆம் தேதி ஜப்பானை சேர்ந்த எவர் கிவன் என்ற சரக்குப் பெட்டகக் கப்பல், கால்வாயின் இரு கரையை அடைத்தவாறு சிக்கியது.
கால்வாயில் இருந்து எந்த கப்பலும் செல்ல முடியாத அளவுக்கு சிக்கிக் கொண்டதால் எகிப்து அரசு திணறியது. இழுவைக் கப்பல்கள் உதவியுடன் பெரும் போராட்டத்திற்குப் பிறகு, 6 நாட்கள் கழித்து 29ஆம் தேதி கப்பல் மீட்கப்பட்டது.
இந்த 6 நாட்களில் 420 சரக்குக் கப்பல்கள் சூயஸ் கால்வாயின் இரு பக்கத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால், ஒவ்வொரு கப்பலுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. சரக்குகளும் குறித்த நேரத்தில் செல்ல முடியாததால், அந்த நிறுவனங்களும் இழப்பை சந்தித்தன.
எகிப்து அரசுக்கும் நாள்தோறும் 12 மில்லியனில் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டாலர் வரை இழப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில், சிக்கிய கப்பலை மீட்கவும் ஏகப்பட்டதால் ஏகப்பட்ட செலவு ஏற்பட்டுள்ளது.
இதனால், மொத்த வருவாய் இழப்பையும் எவர் கிவன் கப்பல் உரிமையாளர் தலையில் கட்டிய எகிப்து அரசு, 900 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டுள்ளது. இதனை எவர் கிவன் கப்பல் உரிமையாளர் தரப்பில் செலுத்தாததால், கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற ஆணையின்படி இழப்பீட்டை செலுத்திய பிறகே கப்பலை விடுவிக்க முடியும் என சூயஸ் கால்வாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், கப்பலுக்கு ஏற்பட்டுள்ள சேதம், மற்றும் இழப்பீடு குறித்து காப்பீட்டு நிறுவனத்துடன் கப்பல் உரிமையாளர் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.
இழப்பீடு கிடைத்தால் தான், வருவாய் இழப்பை சமாளிக்க முடியும் என்ற நிலையில் எகிப்து அரசுக்கும், கப்பலில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இழப்பீட்டு தொகையால் கப்பல் மீட்க முடியாததால் உரிமையாளர் தரப்புக்கும், எவர் கிவன் கப்பல் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.