உடல் எடையை குறைக்க ஆசைப்பட்ட இளைஞர்!! பதினைந்தே நிமிடத்தில் பறிபோன உயிர்!!
முன்பெல்லாம் உடல் எடை அதிகரித்து விட்டால் வீட்டில் அல்லது உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைப்போம். ஆனால் இன்றைய நவீன காலத்தில் மருத்துவ துறையின அபார வளர்ச்சி காரணமாக அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்து வருகிறார்கள். இதனால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் விளைவுகளை அறியாதவர்கள்.
இதேபோல தான் புதுச்சேரியை சேர்ந்த 26 வயது இளைஞரான ஹேமச்சந்திரன் அவரின் உடல் எடையை குறைக்க ஆசைப்பட்டுள்ளார். டிசைனராக பணியாற்றி வரும் ஹேமச்சந்திரன் எப்படியாவது தன் உடல் எடையை குறைக்க வேண்டுமென பல இடங்களில் விசாரித்துள்ளார். அப்போது அவருக்கு சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனை குறித்து தெரியவந்துள்ளது.
உடனே ஹேமச்சந்திரன் இதுகுறித்து மருத்துவமனையிடம் ஆலோசனை பெற்றுள்ளார். இதனையடுத்து நேற்று ஹேமச்சந்திரனுக்கு கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால் சிகிச்சை தொடங்கிய 15 நிமிடத்திலேயே ஹேமச்சந்திரன் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் ஹேமச்சந்திரனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து ஹேமச்சந்திரன் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக விளக்கம் அளித்துள்ளனர். உடல் எடையை குறைக்க ஆசைப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.