AMMK ADMK: அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன் இபிஎஸ்யின் துரோகத்தை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பின்னர் பாஜக கூட்டணியில் இணைந்த இவர், தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் பிடிக்காமல் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார்.
மேலும் இபிஎஸ்யை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்றும் அழுத்தமாக கூறி வருகிறார். மேலும் தினகரன் புதிய கட்சி தொடங்கியதிலிருந்தே இபிஎஸ்யை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரின் அனைத்து செய்தியாளர் சந்திப்பிலும் இபிஎஸ்யை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இபிஎஸ் அவரை பற்றி அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்.
அண்மையில் கூட விஜய்-அதிமுக கூட்டணி குறித்து கூறிய தினகரன், விஜய் அதிமுக உடன் கூட்டணிக்கு சென்றால் அது தற்கொலைக்கு சமம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரி ஆர்.பி உதய குமார் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு, அவரை பற்றி பேச வேண்டாமென இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார் என்று கூறினார். மக்கள் பணியில் கவனம் செலுத்தி பேச வேண்டும், அதை விட்டு விட்டு அவரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறினார்.
