D.M.K: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் கட்டத்தில் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக வியூகங்களை வகுத்து வரும் வேளையில், அதிமுக, பாமக கட்சிகளிடையே தலைமை போட்டியும், முக்கிய தலைவர்களின் பிரிவும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆளுங்கட்சியான திமுக மிகவும் நேர்த்தியான முறையில் கூட்டணி கட்சிகளிடமும், மக்களிடமும் தங்களின் ஒற்றுமையையும், நிலைப்பாட்டையும் உறுதி செய்து வருகிறது.
இதனால் அடுத்த தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் திமுக இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திமுக கூட்டணியில் எங்களுக்கு வெறும் இரண்டு சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினர்.
இதனை தொடர்ந்து கார்த்திக் சிதம்பரமும் அவருடைய கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் திமுக தலைமையிலான ஆட்சியில் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதிரடி கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அரசு முடிவுகளில் காங்கிரஸ் கருத்துகள் மதிக்கப்படவில்லை என்றும், கூட்டணி கட்சிகளை ஆலோசிக்காமல் திமுக தனிப்பட்ட முடிவுகளை எடுத்து வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினர்.
“கூட்டணியின் பலம், அனைவரின் பங்களிப்பில் தான் இருக்கிறது. ஆனால், காங்கிரசுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை” என்ற அவரது கூற்று, கூட்டணி அரசில் புதிய பிளவைஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியில் கூட, திமுக-வுடனான கூட்டணி குறித்து கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிடும் வாய்ப்புகள் குறித்து காங்கிரஸ் கட்சியில் தீவிர ஆலோசனைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. கார்த்திக் சிதம்பரத்தின் இந்த கூற்றுகள், அரசியல் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. திமுக தரப்பில் இதற்கு என்ன பதில் வரும் என்பது அடுத்த கேள்வியாக உள்ளது.