Home Blog Page 5644

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய அறிவிப்புகளும் தளர்வுகளும் என்னென்ன? விபரம் உள்ளே!

0

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க உள்ளது. அரசு ஊழியர்கள் சுழற்சி அடிப்படையில் வாரத்தில் 6 நாட்கள் பணிபுரிவார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 3-வது கட்ட ஊரடங்கு உத்தரவு நாளை முடிவுக்கு வரும் நிலையில் ஒரு சில தளர்வுகளுடன் அடுத்த கட்ட ஊரடங்கு நாளை மறுநாள் பிறப்பிக்க உள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களும் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல் பாதி எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணை:-

ஊரடங்கு உத்தரவு குறித்து 3-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையில், அரசு அலுவலகங்களில் அதிகபட்சமாக 33 சதவீத ஊழியர்கள் பணியாற்றலாம் என்று கூறப்பட்டு இருந்தது.
இதன் தொடர்ச்சியாக, 18ஆம் தேதியில் (திங்கட்கிழமை) இருந்து அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இயங்க அனுமதிக்கப்படுகிறது.

இதற்கு முன் பணி நேரத்தை இழந்திருப்பதால் அந்த இழப்பை சரிக்கட்டும் வகையில், வாரத்தில் சனிக்கிழமை உள்பட 6 நாட்களையும் பணி நாட்களாக முறைப்படுத்தப்பட்டுள்ளது. 6 நாட்களும் தற்போதுள்ள வழக்கமான பணி நேரத்தை பின்பற்றி அலுவலகம் இயங்க வேண்டும் என அறிவிப்பு.அரசு ஊழியர்கள் 2 பிரிவாக பிரிக்கப்பட வேண்டும். சுழற்சி முறையில் பணியில் ஈடுபட வேண்டும்.

இந்த சுழற்சி வேலைத் திட்டத்தின்படி ஊழியர் வீட்டில் இருந்தாலும், வேலைக்கு அழைக்கும் பட்சத்தில் அலுவலகத்துக்கு வர வேண்டும். சம்பளப் பட்டியலின்படி குரூப் ஏ பிரிவில் வரும் அனைத்து அரசு ஊழியர்களும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும்.அதுபோல, சம்பளப் பட்டியலின்படி அல்லாமல், அலுவலகத்தின் தலைமைப் பணியில் இருக்கும் ஊழியர்களும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும்.

தலைமைச் செயலகத்தில் இருந்து மாவட்டம் மற்றும் கள அளவிலான அரசு அலுவலகங்கள், ஆணையங்கள், வாரியங் கள், அரசு கழகங்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் இந்த வகையில் இயங்கும்.

காவல்துறை , மாவட்ட நிர்வாகம், அரசுக் கருவூலம், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் கடந்த மார்ச் 25-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட ஆணைப் படி செயல்படும். அலுவலகத்துக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.

கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே டாஸ்மாக்.! இத்தனை டோக்கன் மட்டுமே வழங்கப்படும்!!

0

தமிழகத்தில் இன்று முதல் சில விதுமுறைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகம் பாதிப்பான சென்னை மாநகர பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாநகர பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. மேலும் பொழுதுபோக்கு இடமான மால்கள், வணிக வளாகங்கள், கொரோனா சோதனை மையங்களுக்கு அருகில் இருக்கும் மதுக்கடைகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மதுபானக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 500 டோக்கன் மட்டுமே வழங்க வேண்டும் என்று புதிய விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது. இந்த டோக்கன்கள் ஏழு வண்ணங்களில் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும் மதுபான கடைகளுக்கு வரும் மதுபான பிரியர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று மட்டுமே 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தும் இந்தியா! வேகமாக அதிகரிக்கும் பாதிப்பு! ஒரே நாளில் 100 பேர்?

0

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் விரைவில் சீனாவை இந்தியா முந்தும் என தெரிகிறது. பல்வேறு இடங்களில் அதிக தொற்று பரவி வருவதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று மட்டுமே கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,967 பேர் மேலும் நேற்று 100 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனா பாதிப்பில் 12 வது இடத்தில் இருக்கும் இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளி 11 வது இடத்தை பிடிக்கும் அளவிற்கு வேகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. இங்கு 14 லட்சம் பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதுவரை 84,500 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 3 ஆம் கட்ட ஊரடங்கில் சில விதிமுறை தளர்வுகளை மத்திய அரசு அனுமதி கொடுத்து பிறகு காய்கறி சந்தைகள், ஊருக்கு கூட்டம் கூட்டமாக செல்வது மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் போனதால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வரை இந்தியா முழுவதும் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,649 ஆக அதிகரித்துள்ளது.

அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு எண்ணிக்கையால் இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடமாக தமிழகத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். மேலும் பாதிப்பை கட்டுப்படுத்த 4 ஆம் கட்ட ஊரடங்கு புதிய விதிமுறைகளுடன் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவிலிருந்து விடுபட்ட மேலும் ஒரு மாவட்டம்

கொரோனாவிலிருந்து விடுபட்ட மேலும் ஒரு மாவட்டம்

கடந்த மார்ச் மாத இறுதியில் சென்னையில் பரவ துவங்கிய கொரோனா தொற்று, வேகமாக தமிழகம் முழுவதும் பரவியது.தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையுடன் இனைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகிறது. தமிழகத்தில் சென்னை கொரோனா தொற்றில் முதலிடம் வகுத்து வந்த நிலையில் நேற்று முன் தினம் (14.05.2020) ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களும் கொரோனா இல்லாத மாவட்டமாக ஆனது.

இந்நிலையில் நேற்று (15.05.2020) தமிழக முதல்வரின் மாவட்டமான சேலம், கொரோனா இல்லாத மாவட்டமாக அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தினர் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இன்றைய நிலவரம்! குறையும் பாதிப்பு எண்ணிக்கை

0

தமிழகத்தில் இன்று மட்டுமே 434 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக தற்போது வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10108 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தினமும் 500 க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் சமீபத்தில் சில நாட்களாக தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களில் 500 க்கும் குறைவான நபர்களுக்கே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 9674 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 434 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்று வரை ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10108 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு சற்றே குறைந்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 310 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 21 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 20 நபர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 11 நபர்களுக்கும், மதுரையில் 11 நபர்களுக்கும், திருநெல்வேலியில் 22 நபர்களுக்கும், தூத்துக்குடியில் 10 நபர்களுக்கும், கன்னியாகுமரியில் 4 நபர்களுக்கும், கடலூரில் 3 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூரில் 2 நபர்களுக்கும், தென்காசியில் 2 நபர்களுக்கும், தஞ்சாவூர் மற்றும் விருதுநகரில் தலா ஒருவருக்கும், திருவண்ணாமலையில் 3 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வெள்ளிக்கிழமையான இன்று மட்டும் 359 நபர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலமாக ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மே 15 ஆம் தேதி நிலவரப்படி 2599 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 7436 நபர்கள் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் இன்று மட்டும் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் தற்போது வரை கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 71 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று உயிரிழந்த 5 நபர்களில் 3 நபர்களுக்கு கிட்னி பிரச்சனை இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் வழக்கில் பலதரப்பட்ட எதிர்ப்புகளையும் மீறி சாதித்து காட்டிய தமிழக அரசு! நடந்தது என்ன?

0

தமிழகத்தில் வரும் மே 17 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என அளித்த உத்தரவிற்கு இடைக்கால தடை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஆளும் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்த நிலையிலும் டாஸ்மாக் கடைகளை எப்படியாவது திறக்க வேண்டும் என்று போராடிய தமிழக அரசின் சட்ட போராட்டத்திற்கு இது முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இந்த விசாரணையின் போது நாட்டின் மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பதிப்பு அதிகமுள்ள சிவப்பு மண்லடங்களில் கூட மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்று இருக்கும் மகாராஷ்டிராவில் கூட மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நிலைமை இப்படி இருக்க தமிழகத்தில் மட்டும் ஏன் மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல கேள்விகள் வைக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கிற்காக தமிழக அரசு சில முக்கியமான வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் முன் வைத்துள்ளது. அதில்,குறிப்பாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் போதிய சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. மக்களுக்குள் சமூக இடைவெளி விடப்பட்டது. அரசின் பொருளாதார தேவைக்காக மதுக்கடைகளை திறப்பது அவசியம். மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றம் வழங்கிய அனைத்து விதிகளும் இதில் பின்பற்றப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளிலும், சென்னையிலும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்பன உள்ளிட்ட பல முக்கிய வாதங்கள் வைக்கப்பட்டது

பாமக,தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளே கடுமையாக எதிர்த்த நிலையில் டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு பெற்ற வெற்றியானது சட்ட ரீதியான வெற்றி என்பதை விட ஆளும் அதிமுகவின் அரசியல் ரீதியான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் கருகிய ஆடுகள்! வலியை கொடுத்த வாயில்லா ஜீவன்களின் அலறல் சத்தம்!

0

ஆட்டுக் கொட்டகையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு 20 ஆடுகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 3 ஆம் கட்ட ஊரடங்கை மக்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் 4 ஆம் கட்ட ஊரடங்கு குறித்த செய்தி நாளை அல்லது நாளை மறுநாள் பிரதமர் மோடி அவர்கள் வெளியிடுவார் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு காலத்தில் அனைவரும் வீட்டில் இருக்கும் நேரத்திலும் சில விபத்துகள் அடிக்கடி நடந்துவிடுகின்றன.

திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் கருகிய ஆடுகள்! வலியை கொடுத்த வாயில்லா ஜீவன்களின் அலறல் சத்தம்!
தீவிபத்தில் பலியான ஆடுகள்

அந்த வகையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள பாலசமுத்திரம் என்னும் கிராமத்தில் வீரசூரன் என்பவர் 50 -க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென ஆட்டுகொட்டகையில் தீவிபத்து ஏற்பட்டு ஆடுகள் அலறத் தொடங்கின. தீவிபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த தீவிபத்தில் 20 ஆடுகள் உடல் கருகி பலியாகின.

இச்சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டு கொட்டகையில் தீவிபத்து ஏற்பட்டு ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாம் கட்ட புதிய திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன் – முக்கிய அம்சங்கள் என்ன?

0

மூன்றாம் கட்ட புதிய திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன் – முக்கிய அம்சங்கள் என்ன?

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்த பட்டதையடுத்து இந்தியப் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதை மீட்கும் பொருட்டு ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என பாரத பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக செய்தியாளர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதற்கட்டமாக சில திட்டங்களை அறிவித்திருந்தார்.

சுயசார்பு திட்டம் என கூறப்படும் இத்திட்டத்தின் மூன்றாக் கட்டமாக விவசாயம், மீன்வளம் சார்ந்த புதிய திட்டங்களை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்

அதன் அம்சங்களைக் கீழே தொகுத்தளித்துள்ளோம்.

  • விவசாயத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்கப்படும். கொள்முதல் நிலைய உள்கட்டமைப்பு, குளிர்பதன கிடங்கு உள்ளிட்டவற்றுக்கு இந்த நிதி செலவிடப்படும்.
  • தமிழ்நாட்டின் மரவள்ளிக்கிழங்கு, ஆந்திரப்பிரதேசத்தின் மிளகாய் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களின் பெயர்பெற்ற விவசாயப் பொருட்கள் குறித்து சர்வதேச அளவில் விளம்பரப்படுத்துவதற்காக 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
  • மீன்வளத்துறையை மேம்படுத்துவதற்காக “பிரதமரின் மீன்வள திட்டம்” என்ற பெயரில் புதிய திட்டம் தொடக்கம். இதன் மூலம், நாடு முழுவதும் மீன்வளத்துறையை மேம்படுத்த 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இதில் ஒன்பது ஆயிரம் கோடி மீன்வளத்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மீதமுள்ள 11 ஆயிரம் கோடி மீனவர்கள் நலனுக்காகவும் செலவிடப்படும்.
  • கால்நடைகளின் நோய்த்தடுப்பு திட்டங்களுக்கு 13,343 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இந்த நிதியை கொண்டு, நாட்டிலுள்ள அனைத்து எருமை, செம்மறி ஆடு, ஆடு மற்றும் பன்றிகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
  • கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. பால் பதப்படுத்துதல் நிலையங்களை அமைக்கவும், மதிப்பு கூட்டல் மற்றும் கால்நடை தீவன உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தனியார் முதலீட்டை ஆதரிக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.
  • தேனீ வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்தியை ஊக்குவிக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • மூலிகை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுவதை ஊக்குவிக்க 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இதன் மூலம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூலிகை பொருட்கள் பயிடப்படும் நிலப்பரப்பு 10,00,000 ஹெக்டராக அதிகரிக்கும்.
  • மாநிலங்களுக்கு இடையே விவசாய விளைபொருட்கள் தடையற்ற வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும். இதன் மூலம், விவசாயிகளின் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்யும் வாய்ப்பும் கிடைக்கும்.
  • தேசிய அளவிலான பேரிடர் அல்லது பஞ்சம் ஆகியவற்றால் விலை ஏற்றம் ஏற்படும்போது மட்டுமே விவசாய உற்பத்தி பொருட்கள் மீதான கையிருப்பு அளவை கட்டுப்படுத்துவது குறித்த விதிமுறைகள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு.
  • வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம், உருளை ஆகியவை மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.
  • விவசாயப் பொருட்களை விநியோகம் செய்வதில் ஏற்படும் சிக்கல்களை களைவதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஏற்கனவே தக்காளி, வெங்காயம் மற்றும் உருளை பயிருக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் தற்போது காய்கள், பழங்கள் என அனைத்து பயிர்களுக்கும் வழங்கப்படும்

எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்? – விமான ஊழியர்களுக்கான பாதுகாப்பு உடைகள் அறிமுகம்

எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்? – விமான ஊழியர்களுக்கான பாதுகாப்பு உடைகள் அறிமுகம்

தற்போது உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தாலும் இதற்கு மேலும் ஊரடங்கை நீட்டித்தால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து நாடுகளும் தள்ளப்பட்டு விடும்.

கொரோனா தொற்றுக்கு ஒருபக்கம் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வந்தாலும், அது வரை நாம் என்ன செய்வது. எனவே அனைவரும் கொரோனா தொற்றுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமே அறிவுறுத்தியுள்ளது.

தற்போது கொரோனா முன்னெச்சரிக்கையுடன் ரயில் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில் அடுத்து பேருந்து போக்குவரத்தும் துவங்கப்படவுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பரவல் அச்சம் காரணமாகக் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் சர்வதேச, உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேசமயம் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மட்டும் வந்தே பாரத் மிஷன் மூலம் ஏர் இந்தியா விமானங்களில் கடந்த 7ம் தேதி முதல் அழைத்து வரப்படுகின்றனர். சரக்கு விமானப் போக்குவரத்துத் தடையின்றி இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முழுமையான பயணிகள் விமானப் போக்குவரத்து எப்போது இயக்கப்படும் என்பது குறித்து எந்தவிதமான தகவலும் இல்லை. இந்த சூழலில் வரும் 17ம் தேதி 3ம் கட்ட ஊரடங்கிற்குப் பின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்படும் பட்சத்தில் விமானத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பஃபே கிட் வழங்க விமான நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் ஏசியா ஆகிய விமான நிறுவனங்கள் சமீபத்தில் நடத்திய ஆலோசனையில், விமான ஊழியர்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பயன்படுத்தும் PPE கவச உடைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்? - விமான ஊழியர்களுக்கான பாதுகாப்பு உடைகள் அறிமுகம்

இதன்படி முகக் கண்ணாடி, உடலை முழுமையாக மறைக்கும் உடைகள், தலைக்கு உறை, முகக்கவசம், அங்கி, அப்ரான், கையுறைபோன்றவை வழங்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் 27-ம் தேதி பிலிப்பைன்ஸ் ஏர் ஏசியா விமான நிறுவனம் சிவப்பு நிறத்தில் தனது ஊழியர்களுக்கு PPE கிட்டை அறிமுகப்படுத்தியது. அந்த உடை விமானப் பணிப்பெண்கள் உடல் முழுவதும் மறைக்கும் விதத்திலிருந்தது. அதேபோன்ற ஆடைகளை இந்திய விமான நிறுவனங்களும் வழங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவரும் பணியில் ஈடுபட்டுள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இதேபோன்ற PPE ஆடைகள் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விசயத்தில் தமிழக முதலமைச்சரே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

0

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளி மாநிலங்களில் வேலைக்கு சென்றவர்கள் தங்கள் ஊருக்கு வரமுடியாமல் சிக்கி தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் ” மராட்டியத்தில் தங்க இடமின்றி, உணவின்றி
தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு, தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 216 பேர் வேலை தேடி கடந்த சில மாதங்களுக்கு முன் மராட்டியத்திற்கு சென்றுள்ளனர். மராட்டியத்தின் பால்கார் மாவட்டத்தில் உள்ள கிழக்கு வாசை பகுதியில் வேலை செய்து வந்த அவர்கள், கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். வாழ்வாதாரத்தை இழந்து, அடுத்த வேலை உணவுக்கு கூட வழியின்றி தவிக்கும் அவர்கள், சொந்த ஊருக்கு திரும்ப நினைத்தாலும் அது சாத்தியமாகவில்லை.

வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்காக தமிழக அரசு அறிவித்த இணையதளத்தில் அவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர்களை அழைத்து வர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. அதிகாரிகளிடம் உதவி கேட்ட போது, 216 பேருக்காக தனி தொடர்வண்டி இயக்க முடியாது என்று கூறி விட்டனர். அதைத் தொடர்ந்து மராட்டியத்தில் உள்ள தமிழர்களை அழைத்து வருவதற்கான தமிழக அரசின் பொறுப்பு அதிகாரியான பூஜா குல்கர்னியை தொடர்பு கொண்டு கேட்ட போது, ஏதேனும் பேருந்துகளை ஏற்பாடு செய்தால், அவற்றுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என கூறிவிட்டதாக தெரிகிறது.

வாசை நகரிலிருந்து திருவண்ணாமலைக்கு 216 பேரும் பயணிக்க வேண்டும் என்றால் பேருந்து வாடகையாக மட்டும் ரூ.8 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. பிழைப்பு தேடி மராட்டியத்துக்குச் சென்று ஊர் திரும்ப வழியின்றி தவிக்கும் ஏழை மக்கள் அவ்வளவு தொகைக்கு எங்கு செல்வர்? திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரையும் தொடர்பு கொண்ட மக்கள் தங்களின் நிலையை எடுத்துக் கூறி, சொந்த ஊர் திரும்ப உதவும்படி கோரியுள்ளனர். அவரும் பேருந்து வாடகைக்கு நன்கொடையாளரை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால் அடுத்து என்ன செய்வது, எப்படி சொந்த ஊருக்கு திரும்புவது என்பது தெரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

அவர்கள் தங்கியுள்ள வாசை நகரம் நெரிசல் மிகுந்ததாகும். அதுமட்டுமின்றி அப்பகுதியை உள்ளடக்கிய பால்கர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் மிகவும் அதிகமாக உள்ளது. இதற்கெல்லாம் மேலாக தங்குவதற்கு இடமின்றி தவிக்கும் அவர்கள், அங்குள்ள தாழ்வான பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து விடும் என்றும், அவ்வாறு நடந்தால் அவர்களின் உடமைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆகவே, அவர்களை அடுத்த சில நாட்களில் அங்கிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேபோல், மும்பை மாநகரின் மாஹிம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிசை அமைத்து தங்கியுள்ள திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மக்களும் தங்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லும்படி தமிழக அரசை வேண்டியுள்ளனர். மும்பையில் அடுத்த சில நாட்களில் பருவமழை தொடங்கி விடும் என்பதால், உடனடியாக அவர்களை மீட்காவிட்டால் மிக அதிக பாதிப்புகள் ஏற்பட்டு விடக்கூடும். திருவண்ணாமலை மாவட்ட மக்கள் தங்கியிருக்கும் வாசை நகரம் மும்பையிலிருந்து 70 கி.மீ தொலைவில் தான் உள்ளது. அதனால் அவர்களை அங்கிருந்து மும்பைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அவர்களையும், மும்பையில் ஏற்கனவே தவித்து வரும் 800 பேரையும் தொடர்வண்டி மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்க முடியும். அதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும்.

அதிகாரிகள் நிலையில் பல முறை வலியுறுத்தியும் மராட்டியத்தில் வாழும் மக்களை மீட்டு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சர் அவர்களே நேரடியாக தலையிட்டு, மராட்டியத்தில் தவிக்கும் தமிழர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.