கேரளா கடலை கறி – சுவையாக செய்வது எப்படி?

0
71
#image_title

கேரளா கடலை கறி – சுவையாக செய்வது எப்படி?

கருப்பு கொண்டக்கடலை வைத்து செய்யப்படும் உணவு கடலை கறி.இவை கேரள மக்களின் விருப்ப உணவாக இருக்கிறது. இந்த கொண்டைக்கடலை கறி ஆப்பம், இடியாப்பம் உள்ளிட்டவைகளுடன் வைத்து உண்ண சிறந்த சைடிஸாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கருப்பு கொண்டைக்கடலை – 1 கப்

*தேங்காய் எண்ணெய் – 6 தேக்கரண்டி

*பட்டை – 2 அல்லது 3

*கிராம்பு – 5

*ஏலக்காய் – 2

*சோம்பு(பெருஞ்சீரகம்) – 1 தேக்கரண்டி

*வெங்காயம் – 3

*பூண்டு – 6 பற்கள்

*இஞ்சி – 1 துண்டு

*தக்காளி – 2

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

*கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி

*தேங்காய் – 1/4 கப் (துருவியது)

*கடுகு – 1 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 1 கொத்து

*பச்சை மிளகாய் – 2

*உப்பு – தேவையானஅளவு

*கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் 1 கப் கருப்பு கொண்டை கடலை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் வரை நன்றாக ஊற வைக்கவும்.

பின்னர் கொண்டை கடலை நன்கு ஊறி வந்ததும் அவற்றை ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேக விடவும். மசியும் அளவிற்கு வெந்து வந்ததும் குக்கரை இறக்கவும்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் அதில் 2 அல்லது 3 துண்டு பட்டை, 5 கிராம்பு (இலவங்கம்), 2 ஏலக்காய், 1 தேக்கரண்டி சோம்பு சேர்த்து வறுக்கவும். பின்னர் அதனுடன் 3 வெங்காயம் 1 துண்டு இஞ்சி, 6 பூண்டு பற்கள் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காய கலவை வதங்கியதும் அதில் 2 தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் 1/4 கப் தேங்காய் துருவலை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை நன்றாக வதக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து இவற்றை நன்கு ஆற விடவும்.

பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும். அதோடு வேக வைத்துள்ள கொண்டைக்கடலை சிறிதளவு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் நன்கு சூடேறியதும் அதில் 1 தேக்கரண்டி கடுகு, 2 பச்சை மிளகாய், 1 கொத்து கருவேப்பிலை போட்டு பொரிய விடவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள கொண்டைக்கடலை விழுதை அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் மீதமுள்ள கொண்டைக்கடலையை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

கொண்டைக்கடலை கறி கொதித்து வந்த பின்னர் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த கொண்டைக்கடலை கறி புட்டு, ஆப்பம், இடியாப்பம் உள்ளிட்ட உணவுகளுக்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.