கேரளா ரெசிபி: மலபார் ஸ்பெஷல் “பெட்டி பத்திரி” – சுவையாக செய்வது எப்படி?

0
38
#image_title

கேரளா ரெசிபி: மலபார் ஸ்பெஷல் “பெட்டி பத்திரி” – சுவையாக செய்வது எப்படி?

பெட்டி பத்திரி என்பது மலபார் பாணி இஃப்தார் உணவாகும். இது கோதுமை மாவு மற்றும் சிக்கன் வைத்து தயாரிக்கப்படும் சுவையான உணவு வகை ஆகும். இந்த பெட்டி பத்திரியை கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*சிக்கன் குழம்பு – தேவையான அளவு

*கோதுமை மாவு – 1/4 கிலோ

*எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

*சின்ன வெங்காயம் – 100 கிராம்

*மிளகுத்தூள் – 1/4 தேக்கரண்டி

*சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

பெட்டி பத்திரி செய்யும் முறை…

ஒரு பவுலில் 1/4 கிலோ கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு மாவு பிசைவது போல்
பிசைந்து கொள்ளவும்.

பின்னர் 100 கிராம் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், 1/4 தேக்கரண்டி மிளகுத் தூள், 1/2 தேக்கரண்டி சீர்கத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

கலவை நன்கு வதங்கி வந்ததும் எடுத்து வைத்துள்ள சிக்கன் குழம்பில் உள்ள எலும்பு இல்லாத சிக்கனை’அதில் சேர்த்துக் கொள்ளவும். இதை நன்கு வதக்கவும். அடுத்து சிக்கன் குழம்பில் 2 கரண்டி அளவு எடுத்து அதில் ஊற்றி கொதிக்க விடவும்.

வெங்காயம் மற்றும் சிக்கன் துண்டுகள் உதிரியாக வரும் வரை நன்கு கிளறி விடவும். பின்னர் அடுப்பை அணைத்து விடவும். இந்த சிக்கன் கலவையை சிறிது நேரம் ஆற விடவும்.

அடுத்து பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். பின்னர் இதை வட்டமாக உருட்டிக் கொள்ளவும்.

அடுத்து மாவின் நடுவில் செய்து வைத்துள்ள சிக்கன் கலவையை ஒரு கரண்டி எடுத்து பூரணம் போல் வைக்கவும் இரண்டு பக்கமும் ஓரங்களை பிரிந்து விடாமல் நன்கு ஒட்டி வைத்து ஒரு முள் கரண்டியால் அழுத்தி விடவும். இவ்வாறு இருக்கும் உருண்டைகளை செய்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தயார் செய்து வைத்துள்ள கோதுமை மாவை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுக்கவும். இந்த பெட்டி பத்திரி கேரளா மக்களின் பேவரைட் ஸ்னாக்ஸ் ஆகும். இப்படி பெட்டி பத்திரி தயார் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.