தண்ணீரில் மிதக்கும் கரையோர கிராமங்கள்! திருச்சிக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு!

0
245

சமீப காலமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியிருப்பதால் அணைக்கு வரக்கூடிய நீரின் வரத்து முழுவதும் உபரி நீராக தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆகவே காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

மேட்டூர்- எடப்பாடி சாலையில் காவிரி நீர் புகுந்திருப்பதால் அங்கே போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. காவிரி கரையோர பகுதியில் வயல்களும் தண்ணீரில் மூழ்கி இருக்கின்றது. சில பகுதிகளில் கிணறுகள், பம்ப் செட்டுகள், மோட்டார் உள்ளிட்டவையும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன.

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியிலிருக்கின்ற கூட்டு குடிநீர் பம்ப் ஹவுஸ் தண்ணீரில் மூழ்கி இருக்கிறது. இந்த பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் வாழை மற்றும் பருத்தி தோட்டத்திலும், தண்ணீர் புகுந்திருக்கிறது. ஒகேனக்கல் ஊட்டமலை, நாட்டார் கொட்டாய், ஆலம்பாடி, போன்ற பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அங்கு இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணை தன்னுடைய முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. இதன் காரணமாக, ஆற்றங்கரை ஓரம் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் குவியல் குவியலாக நுரை பொங்கி காணப்படுகிறது. ஆகவே விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரி அருகே இருக்கின்ற கே ஆர் பி அணைக்கான நீர் வரத்து அதிகரித்திருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. தென்பெண்ணையாற்றில் நீர் கரைபுரண்டு ஓடுவதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதால் தஞ்சாவூர் மாவட்டம் விளாங்குடியில் திருவையாறையும் அரியலூர் மாவட்டத்தையும் ஒன்றாக இணைக்கும் கொள்ளிடம் ஆறு கடல் போல காட்சி தருகிறது. காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இருக்கின்ற கொள்ளிடம் ஆற்றில் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு முன்னதாகவே 2 லட்சம் கன அடி நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே கரையோர கிராமங்களுக்குள் தண்ணீர் புகுவதற்கான அபாயம் ஏற்பட்டிருக்கிறது. திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டிருப்பதால் அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவானது திருச்சி வருகை தந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக 44 வீரர்கள் கொண்ட அந்த குழுவுடன் ஆட்சியர் பிரதீப்குமார் ஆலோசனை நடத்தினார்.

Previous articleஇந்த மாணவர்களுக்கு மட்டும் மத்திய அரசின் உதவி தொகையா? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!
Next articleபா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here