DMDK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்றாலே அதில் ஏகப்பட்ட திருப்பங்கள் நிகழும். இதனை மேலும் மெருகேற்றும் வகையில் 2026 தேர்தலும் அமைந்துள்ளது. இந்த தேர்தலில் ஆண்ட கட்சியான அதிமுகவும், ஆளுங்கட்சியான திமுகவும், புதிய கட்சியான தவெகவும் ஆட்சி கட்டிலில் அமர போராடி வருகின்றன. தற்போது இருக்கும் சூழலில் கூட்டணி இல்லாமல் ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது கடினம். இதனால் அதிமுக, திமுக, தவெக, போன்ற கட்சிகள், மிக தீவிரமாக கூட்டணி கணக்குகளை வகுத்து வருகின்றன. அந்த வகையில் அதிமுக தேசிய கட்சியான பாஜகவும் கூட்டணி அமைத்த நிலையில், திமுக உடன் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகள் தொடர்ந்து அங்கம் வகித்து வருகின்றன.
மேலும் பாமக, தேமுதிகவின் கூட்டணி நிலைமை இன்னும் உறுதியாகவில்லை. பாமகவின் ஒரு பகுதி அதிமுக பக்கமும், மற்றொரு பகுதி திமுக பக்கமும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தேமுதிக ஜனவரி 9 ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் தான் கூட்டணி அறிவிப்போம் என்று முடிவாக உள்ளது. இந்நிலையில் தேமுதிகவை, அதிமுக பக்கம் இழுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா நேற்று தமிழகம் வருகை தந்த நிலையில், இன்று தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று பிரேமலதா அறிவித்த நிலையில், மேலும் ஒரு தகவலும் வந்துள்ளது.
இதில் பங்கேற்றுள்ள மாவட்ட செயலாளர்களின் கையில் ஒரு பேப்பர் தரப்பட்டுள்ளது. அதில் முக்கிய கட்சிகளின் பெயர்களும் கொடுக்கபட்டுள்ளது. இது ஆப்சன் முறையில் தரப்பட்டுள்ளதால், யாருக்கு எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க விருப்பமோ அவர்கள் அந்த கட்சியை அந்த பேப்பரில் தேர்வு செய்யலாம். அந்த பேப்பர் ஒரு பெட்டியில் போடப்படும். அதன் பின்னர் இதில் எந்த கட்சிக்கு அதிக ஆதரவு உள்ளதோ, அந்த கட்சியுடன் தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்படும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. பிரேமலதாவின் இந்த புதிய முறை தற்போது பேசு பொருளாகியுள்ளது.