கோவையில் உள்ள இந்த மருத்துவமனைக்கு அரசு தடை விதித்துள்ளது!

0
123

கொரோனாவால் பலரின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்த கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு புதிய கொரோனா நோயாளிகளை அனுமதிக்கவோ , சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அனைவரின் பொருளாதாரமும் முடங்கிப் போயுள்ளது. நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் தனியார் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன.

இதனால் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறையினர் அளித்த பேட்டி ஒன்றில், கோவையில் உள்ள முத்தூஸ் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்கக் கூடாது எனவும் சிகிச்சை அளிக்க அரசு தடை விதித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று கோவையில் நான்கு தனியார் மருத்துவமனைகள் மீது புகார் எழுந்துள்ளது. கோவையில் உள்ள சரவணம்பட்டியில் உள்ள முத்தூஸ் மருத்துவமனை விசாரணைக்கு மறுத்ததால் அரசு தடை விதித்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு மட்டும் புதிதாக கொரோனா நோயாளிகளை சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணம் அடையும் வரை சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களுக்கு அரசு விதிக்கப்பட்ட கட்டணத்தையே பெற வேண்டும் என்று கூறியுள்ளது. மற்றும் மருத்துவமனைகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் தனியார் மருத்துவமனை மேல் புகார் அளிக்க மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு கட்டளை மையத்தை அழைக்கலாம். 1077 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். 1800 425 3993 இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் மூலமும் புகார் அளிக்கலாம் என 94884-40322 என்ற வாட்ஸ்அப் எண்ணை அளித்து உள்ளது. புகார் குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.