TVK BJP: அடுத்த 4, 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து கட்சிகளும் மக்களை சந்தித்து தங்கள் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இறங்கி விட்டன. அந்த படி அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் மிக சிறப்பாக செய்து வருகிறது. மேலும் கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் தீவிரம் அடைந்துள்ளன.
இந்நிலையில் சுமார் 1 வருடத்திற்கு முன்பு, அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக, தமிழகத்தில் காலூன்ற பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதில் முக்கியமானது, அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே ஆகும். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவுகள் சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கியில் பிளவை ஏற்படுத்தும் என்பதை அறிந்த அமித்ஷா அதனை சரி செய்ய பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இவ்வாறான நிலையில் தான் பாஜகவிற்கு மேலும் சிக்கல் எழுந்துள்ளது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பாஜகவை அரசியல் எதிரி என்று கூறி அதனை எல்லா இடங்களிலும் விமர்சித்து வருகிறது.
ஆனால் விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்ட பாஜக அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சிக்க, கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் தெளிவாக இருந்தார் விஜய். இதனால் பாஜக, விஜய்யை நேரடியாக விமர்சிக்க தொடங்கிவிட்டன. இந்நிலையில் தான், ஓபிஎஸ், அண்ணாமலையை தொடர்ந்து நயினாரும் டெல்லி சென்றார். இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அமித்ஷா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், புதிதாக கட்சி தொடங்கிய யாரும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லையென்று விஜய்யை விமர்ச்சித்துள்ளார்.