Home Blog Page 5639

கூடலூர் அருகே பழங்கால தாழி கண்டெடுப்பு

0

தேனி மாவட்டம் கூடலூர் அருகே விவசாய நிலத்தில் பழைய மண்பாண்டப் பொருள்களும் மனித எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் பெருமாள்கோவில் மலை அடிவாரத்தில் அமாவாசை என்பவருக்குச் சொந்தமான மானாவாரி நிலம் உள்ளது. அந்த நிலத்தை சனிக்கிழமை உழுதபோது, சில மண்பாண்டங்கள், மண் ஜாடிகள் மற்றும் மனித எலும்புகள் கிடைத்துள்ளன.

இதையடுத்து தொல்லியல் துறைக்கு தகவல் அளித்த நிலையில் குமாரமங்கலம் தொல்லியல் ஆய்வாளர் மோகன் ஞாயிற்றுக்கிழமை அந்த இடத்திற்குச் சென்று பழங்காலப் பொருள்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியது: இவை சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமை வாய்ந்த பொருள்களாக இருக்கக்கூடும் என்று அவர் அப்போது தெரிவித்துள்ளார்.

தாழியில் எலும்பு கிடைத்துள்ளது. பாத்திரங்களில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. தொன்மையான மக்கள் வசித்துள்ள பகுதியாக இப்பகுதி இருந்திருக்கக்கூடும். அரசு அனுமதி பெற்று ஆய்வு செய்ய உள்ளோம் என்றார்.தமிழினம் மூத்தகுடி என்று மீண்டும் இதன் மூலமாக நிரூபணமாகியுள்ளது.

அரசு உத்தரவில்லாமல் முன்பதிவை துவங்கிய பேருந்து நிறுவனங்கள் – உஷார் மக்களே

தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.ஆம்னி பஸ் என்று அழைக்கப்படும் தனியார் பேருந்து சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இதனிடையே பல மாநில அரசுகள், சமூக இடைவெளியுடன் போக்குவரத்தைத் தொடங்க முடிவு செய்த நிலையில், மீண்டும் பேருந்து சேவையை துவங்க ஆம்னி பேருந்துகள் என கூறப்படும் தனியார் பேருந்துகள் அரசின் உத்தரவுக்காக காத்திருந்தன.

வரும் மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்திருந்தாலும், பேருந்து சேவையை துவங்குவதை பற்றி அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதனால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் தனியார் பேருந்து நிறுவனங்கள் ஏமாற்றமடைந்தன.

இந்நிலையில் அரசின் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ள தனியார் பேருந்து நிறுவனங்கள் இரண்டு மடங்கு டிக்கட்டின் விலை ஏற்றி வைத்து ஜூன் 1ம் தேதி முதல் பயணத்தை மேற்கொள்ளும் வகையில் இணையத்தில் முன் பதிவு செய்ய துவங்கியுள்ளது.

தமிழக்த்தினிடையே பேருந்தை இயக்கவே அரசு அனுமதி தருமா என இன்னும் தெரியாத நிலையில் அனைத்து தமிழக மாவட்டங்கள், ஆந்திரா, கர்னாடாகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் முன் பதிவை இந்நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

ஏற்கனவே இதை போல் விமான முன் பதிவு செய்தவர்களுக்குப் பணத்தை திரும்ப அளிக்காத விமான நிறுவனங்கள் இழுத்தடித்து வரும் நிலையில், அனுமதியே இல்லாமல் பேருந்து சேவைக்கு முன்பதிவை மேற்கொள்ளும் பேருந்து நிறுவனத்திடம் உஷாராக இருங்கள் மக்களே.

அரசின் அறிவிப்பு வரும் வரை காத்திருந்து பின்னர் முன் பதிவை மேற்கொள்ளுங்கள்.

பள்ளி திறப்பு தேதியை அறிவித்த ஆந்திரா – தமிழகமும் இதை பின்பற்றுமா?

0

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வின்றி அனைவரும் தேர்ச்சிபெற்றதாக பெரும்பாலான மாநில அரசுகள் அறிவித்தன.

தமிழகத்தை போலவே அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்திலும் இன்னும் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு இன்னும் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெகநாதன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பள்ளிகளை புனரமைப்பதற்கான ரூ.456 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் நவீனமயமாக்கப்படும் என்றும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவை தொடர்ந்து தமிழக அரசும் பள்ளி மீண்டும் எப்போது திறப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

சம்பளம் தர தேவையில்லை – ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மத்திய அரசின் முடிவு

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் இயங்கவில்லை. IT, BPO உள்ளிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வலை செய்ய பணித்து தொடர்ந்து இயங்கி வருகிறது.

மத்திய அரசு 2005-ம் ஆண்டு தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி இந்நிலையில் ஊரடங்கால் பணிக்கு வர இயலாமல் இருந்தாலோ அல்லது நிறுவனமே இயங்காமலிருந்தாலும் தங்கள் ஊழியருக்கு சம்பளம் தர வேண்டும் என்றும், ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்தாலோ, தராமல் இருந்தாலோ அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதனை எதிர்த்து பல நிறுவனங்கள் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. நிறுவனம் இயங்காத போது எப்படி வருவாய் ஈட்ட முடியும். வருவாயே இல்லாத நிலையில் எப்படி சம்பளம் வழங்க இயலும் என்று நிறுவனங்கள் கேள்வி எழுப்பியிருந்தன. இது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்குப் பதிலளித்த மத்திய அரசு, தங்களது அந்த உத்தரவைத் திரும்பப் பெற்று கொள்வதாக தெரிவித்துள்ளது.

இதனால் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்வதோ, சம்பளம் கொடுக்காமல் இருப்பதை பற்றி சம்மந்தப்பட்ட நிறுவனங்களே முடிவு எடுத்து கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

மத்திய அரசின் இந்த நிலை ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இத்தனை திருமணங்கள் நின்று போயுள்ளதா?

இன்றைய காலகட்டத்தில் ஒரு பெற்றோரிடம் எது கடினமான விஷயம் என்று கேட்டால், அவர்கள் உடனடியாக தங்கள் பிள்ளைக்கு சரியான வரம் அமைந்து திருமணம் செய்து வைப்பது தான் என கூறுவார்கள்.

இன்று திருமணம் செய்வதென்பது அவ்வளவு பெரிய வழிமுறையாக உள்ளது. அப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் சில சில காரணங்களுக்காக நின்று போயிருப்பதை கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவாமல் இருக்க அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் நின்று போன திருமணங்களின் எண்ணிக்கையை கேட்டால் அவ்வளவு மலைப்பாக உள்ளது.

கடந்த மார்ச் இறுதி வாரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொது மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், வர்த்தக வளாகங்கள், திரையரங்குகள், கடற்கரை என அனைத்தையும் உடனடியாக மூட அரசு உத்தரவிட்டது.

ஏற்கனவே தேதி குறிக்கப்பட்ட திருமணங்கள் நடைபெறலாம் எனவும் அதில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என அரசு அறிவித்தது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை திருமணம் நடத்த முன் பதிவு செய்ய வேண்டாம் என திருமண கூடங்களுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் மட்டும் கொரோனா ஊரடங்கால் 1.50 லட்சம் திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் திருமண அழைப்பிதழ் அடிக்கும் அச்சக தொழில் தொடங்கி, காய்கறி, மளிகை விற்பனை, சமையல் கலைஞர்கள், பூ விற்பவர், வாத்திய கலைஞர்கள் வர பலரும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். நகைக்கடைகளும் மூடி உள்ளதால் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

திருமணம் நிற்பது ஒருபுறம் இருந்தாலும், ஏற்கனவே நிச்சயித்து திருமண மண்டபங்களில் முன் பணம் தந்தவர்கள், கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாமல் தவிப்பில் உள்ளனர். அரசு இதில் தலையிட்டு கொரோனா ஊரடங்கால் நடைபெறாத திருமணத்திற்கு முன் பணமாக அளிக்கப்பட்ட தொகையை திருப்பி தர திருமண கூடங்களுக்க்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சரக்கு மிடுக்கு என பெண்களை இழிவுபடுத்திய திருமாவளவன் நாகரிகத்தை பற்றி பேசலாமா? ஹச்.ராஜா விளாசல்

0

சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி மத்திய அரசை விமர்சிக்கிறேன் என பிரதமர் என்றும் பார்க்காமல் கல்லால் அடிக்காமல் விட்டார்கள் என்று பொது வெளியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். இதற்கு எதிர்வினையாற்றிய பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜன் சகோதரி எம்பியா இல்லை நாலாந்தர.. என கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.

இந்நிலையில் இந்த நிகழ்விற்கு இரு தரப்பிலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் பாஜக தரப்பினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த நிகழ்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் தனது பங்கிற்கு கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அதாவது, “நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை டி.வி விவாதத்தில் பாஜக பொறுப்பாளர் அவமதித்ததை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. மகளிருக்கு எதிரான பாஜகவின் அடிப்படைவாதமே அவருக்கு இத்தகைய துணிச்சலைத் தருகிறது. இது சனாதனத்தின் விளைச்சல்,” எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பாஜக பிரமுகரை கண்டித்து பதிவிட்ட திருமாவளவனை பாஜகவின் தேசிய செயலாளர் ஹச். ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ள அவர் திருமாவளவன் இதற்குண் சரக்கு மிடுக்கு என மற்ற சமுதாய பெண்களை தரக்குறைவாக பேசியதை உதாரணமாக காட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிற சமுதாய ஆண்களுக்கு ஆண்மை இல்லை. அதனால் உங்கள் பெண்கள் எங்கள் 3 ஜாதி பேரச் சொல்லி இடம் வந்து படுக்கிறார்கள். 10 மாதம் …, என்று ரொம்ப நாகரீகமாக நீங்க பேசிய வீடியோ என்னிடம் இருக்கிறது. அந்த மாதிரி எந்த பாஜகவினரும் பெண்களை பேச மாட்டார்கள். முதலில் தயாநிதி மாறனை கண்டியுங்கள்,” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பில் மற்றொரு கோயம்பேடா? எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

0

சென்னையில் தினம் தினம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு கோயம்பேடு மார்க்கெட் முதன்மையான காரணமாக அமைந்தது. இந்நிலையில் தற்போது காய்கறி மார்க்கெட்டாக செயல்பட்டு வரும் திருமழிசை மற்றொரு கோயம்பேடாக மாறி விட கூடாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “இன்னொரு கோயம்பேடாக மாறிவிடக்கூடாது: திருமழிசையில் கொரோனா ஆய்வு தேவை!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக, நோய்ப்பரவலுக்கு வழிவகுக்கும் அத்தனை வாய்ப்புகளையும் கண்டறிந்து முறியடிக்க வேண்டும். சென்னையில் அதிக அளவில் வணிகர்கள் கூடும் இடமாக திருமழிசை சந்தை திகழ்ந்து வரும் நிலையில், அது நோய்த்தொற்று மையமாக மாறிவிடாமல் தடுக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் மூலமாக ஒரு மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவும் என்பது தான் இயல்பானதும், வழக்கமானதும் ஆகும். இந்த இலக்கணத்தின்படி மட்டும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவியிருந்தால், எப்போதோ அந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், எவருமே எதிர்பாராத வகையில், தில்லி மாநாட்டின் மூலமாகவும், சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்தும் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரவியது தான் தமிழகத்தின் நிலைமையை மோசமாக்கியுள்ளது. மேற்கண்ட இரு நிகழ்வுகளில் இருந்தும் பாடம் கற்றுக் கொண்டு, அதேபோன்ற நிகழ்வு மீண்டும் ஒருமுறை நடக்காமல் தடுக்க வேண்டியது கொரோனா நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் அரிச்சுவடி ஆகும்.

தில்லி மாநாட்டின் மூலம் பரவிய நோய்த்தொற்றுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டு, கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்ட நிலையில், கோயம்பேடு சந்தை மூலம் ஏற்பட்ட தொற்றுகளை கண்டறிந்து கட்டுப்படுத்துவது தான் அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் கடுமையாக போராடினாலும், எதிர்பார்த்த வெற்றியை இன்னும் பெற முடியவில்லை; மக்களிடம் அச்சம் தீரவில்லை.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் இன்று சந்தித்து வரும் அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியது தான். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்ட 11,760 தொற்றுகளில் மூவாயிரத்துக்கும் கூடுதலான தொற்றுகள் கோயம்பேட்டிலிருந்து பரவியவை தான். நோய்ப்பரவல் தொடரக்கூடாது என்பதற்காகத் தான் கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, சென்னை புறநகர் பகுதியில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

திருமழிசை சந்தை செயல்படத் தொடங்கி இன்றுடன் 10 நாட்கள் ஆகும் நிலையில், கோயம்பேடு சந்தை மூலம் ஏற்பட்ட நோய்ப்பரவல் திருமழிசை சந்தை மூலமாகவும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை அரசு எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும். கோயம்பேடு சந்தையில் காய்கறி மொத்த விற்பனை கடைகள் மட்டும் 1800-க்கும் கூடுதலாக இருந்தன. திருமழிசை சந்தையில் ஒட்டுமொத்த கடைகளின் எண்ணிக்கையே 200 மட்டும் தான். ஆனாலும் கூட கோயம்பேடு சந்தைக்கு வந்த காய்கறிகளில் மூன்றில் இரு பங்கு அளவுக்கு திருமழிசைக்கும் வருகின்றன. கேயம்பேடு சந்தையுடன் ஒப்பிடும் போது திருமழிசை சந்தைக்கு நான்கில் மூன்று பங்கு மொத்த வணிகர்கள் வந்து செல்கின்றனர். திருமழிசை சந்தை ஒரு நாளைக்கு சில மணி நேரங்கள் மட்டும் தான் செயல்படுகிறது என்றாலும் கூட, அங்கு பெரும் கூட்டம் கூடுகிறது.

கோயம்பேடு சந்தைக்கு வந்த அதே ஊர்களில் இருந்து தான் காய்கறிகள் வருகின்றன. அதே வணிகர்கள் தான் வருகின்றனர். ஒவ்வொரு நாளும் திருமழிசை சந்தையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; முகக்கவசமும், கையுறைகளும் அணிய வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், திருமழிசை சந்தையில் ஆரம்பத்தில் சில நாட்களைத் தவிர, அடுத்து வந்த நாட்களில் அவையெல்லாம் கடைபிடிக்கப்படவில்லை. மாநிலம் விட்டு மாநிலம் வரும் சரக்குந்துகள் மற்றும் அதன் ஓட்டுனர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் வரும் வணிகர்கள், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் சங்கமமாகும் திருமழிசை சந்தையில் ஏதேனும் ஒருவருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் கூட, அது மளமளவென மற்றவர்களுக்குத் தொற்றி, அடுத்த சில நாட்களில் புதிய நோய்த்தொற்று மையத்தை உருவாக்கி விடக்கூடும்.

ஏற்கனவே, திருமழிசை சந்தை அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் 566 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 537, காஞ்சிபுரத்தில் 203, சென்னையில் 7117 பேர் என சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 8423 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழகத்தின் மொத்த எண்ணிக்கையில் 72% ஆகும். இத்தகைய சூழலில் திருமழிசை சந்தையும் கோயம்பேடாக மாறினால், அதன் விளைவுகளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளால் தாங்க முடியாது. எனவே, நோய்த்தடுப்பு மிகவும் முக்கியமாகும்.

திருமழிசை சந்தை நோய்த்தொற்று மையமாக மாறுவதைத் தடுக்க அங்குள்ள வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, அங்குள்ளவர்கள் கையுறை அணிவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை உறுதி செய்வது, குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை கைகளையும், முகங்களையும் கழுவுவது உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடைமுறைகளை அனைவரும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். திருமழிசை சந்தையை முழுமையான சுகாதார கண்காணிப்புக்குள் கொண்டு வந்து, அங்கிருந்து கொரோனா பரவுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக திருமழிசை சந்தையில் சிறப்பு காவல் அதிகாரிகளையும், சுகாதார அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

எங்களை பிச்சைக்காரர்கள் போல் நடத்துவதா? – மத்திய அரசு மீது வெகுண்டெழுந்த முதல்வர்!

0

கொரோனா ஊரடங்கால் மாநிலத்தின் பொருளாதார நிலை மிகவும் பாதிப்படைந்துள்ள நிலையில் அனைத்து மாநில அரசும் மத்திய அரசிடம் நிதி கேட்டு வருகிறது.

மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி பங்கை தராமல் மத்திய அரசு இழுத்தடித்து வரும் நிலையில் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சுயசார்பு பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். இதுவரை ஐந்து கட்டங்களாகத் சுயசார்பு பொருளாதாரத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மாநிலங்களை பிச்சைக்காரர்கள் போல் மத்திய அரசு நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார் தெலுங்கானா முதல்வரான சந்திரசேகர ராவ்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்

“மத்திய அரசு அறிவித்த சுயசார்பு பொருளாதாரத் திட்டம் உண்மையான மோசடித் திட்டம். வெறும் எண்களை மட்டும் கூறி மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் துரோகம் விளைவிக்கிறது.

மாநில அரசுகள் கடன் பெறுவதற்கு நகைப்புக்குரிய கட்டுப்பாடுகளைக் கூறி மத்திய அரசு தன்னுடைய மரியாதையைத் தானே குறைத்துக்கொள்கிறது.

சர்வதேச பத்திரிகைகள் எல்லாம் மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பைப் பார்த்துக் கிண்டல் செய்கின்றன.

நிதியமைச்சர் உண்மையாகவே GDPயை உயர்த்தத் திட்டமிடுகிறாரா அல்லது ரூ.20 லட்சம் கோடி எண்களை அடைவதற்காக அறிவிப்புகளை வெளியிடுகிறாரா என்று கேட்கிறார்கள்.

இக்கட்டான இந்த நேரத்தில் பொருளாதார நிதித்தொகுப்பு மாநிலங்களுக்கு மிகவும் அவசியமானது. ஆனால், மத்திய அரசின் மனப்போக்கு நிலப்பிரபுத்துவ கொள்கை போலவும், எதேச்சதிகார மனப்போக்கையுமே பிரதிபலிக்கிறது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுபோன்ற திட்டங்களை நாங்கள் கேட்கவில்லை.

கொகரோனா நோய்த்தொற்று பாதிப்பால் மாநில அரசுகளின் நிதி நிலைமை மிக மோசமாக இருக்கும் போது, மக்களுக்குத் தேவையான உதவிகளையும், திட்டங்களையும் செய்யவே நாங்கள் மத்திய அரசிடம் இருந்து நிதி கோருகிறோம்.

நாங்கள் உங்களிடம் பணம் கேட்டால், நீங்கள் எங்களைப் பிச்சைக்காரர்கள் போல் நடத்துவீர்களா? மத்திய அரசு என்ன செய்கிறது? எனக் கேட்கிறேன். இந்தியாவில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் முறை இதுதானா?

மாநிலங்கள் தங்கள் நிதிப்பொறுப்பு மற்றும் நிதிநிலை மேலாண்மையில் 2 சதவீதம் கூடுதலாகக் கடன் பெற மத்திய அரசு அனுமதித்துள்ளது.

அப்படியென்றால் தெலங்கானாவுக்கு ரூ.20 ஆயிரம் கோடி மட்டும் தான் கிடைக்கும். இந்தக் கடனை வாங்குவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நகைப்பாக உள்ளன. இந்தக் கடனை வாங்கினால் செலுத்துவது மாநிலங்கள்தானே!.

மத்திய அரசு அறிவித்தது பொருளாதார ஊக்குவிப்பு திட்டமா? .என்ன இது? இதைப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் என அழைக்க முடியாது.

கூட்டாட்சி முறையில் இதுபோன்ற கொள்கையைப் பின்பற்ற முடியாது. இப்படி நீங்கள் அறிவித்தால் மாநில அரசுகள் எதற்கு? அரசியலமைப்புச் சட்டப்படிதான் மாநில அரசுகள் இயங்குகின்றதே தவிர உங்களுக்குக் கீழ் இயங்கவில்லை.

கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்க்கும் விதமாக மத்திய அரசு செயல்படுவதும், மாநில அரசுகளைக் கட்டுப்படுத்த நினைப்பதும் வேதனையாக இருக்கிறது. பிரதமர் மோடி கூட்டாட்சி குறித்துப் பேசுகிறார். ஆனால், எல்லாம் போலித்தனமாகவும், வெறுமையாகவும் இருக்கிறது” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

தடுப்பூசி இல்லாமல் கொரோனாவை குணமாக்கும் மருந்து – உற்சாகத்தில் ஆய்வாளர்கள்

0

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் துவங்கிய கோரோனா தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரையில் உலகம் முழுவதும் 48 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், சுமார் 19 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா, இத்தாலி, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதிகபட்ச பாதிப்படைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே இதிலிருந்து முழுமையாக மீள முடியும் என்ற நிலையுள்ளதால் உலகின் அனைத்து முன்னணி நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தற்காலிகமாக தீவிரமாக கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு ரெம்டெசிவைர் எனும் மருந்தை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தடுப்பூசியே இல்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தயாரித்து வருவதாக சீனாவின் புகழ் பெற்ற பீகிங் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பீகிங் பல்கலைக் கழகத்தின் அதிநவீன கண்டுபிடிப்பு மையத்தின் இயக்குநர் சன்னி ஷீ “வைரஸ் தொற்று பாதித்த எலிக்கு நாங்கள் அதை செயலிழக்கச் செய்யும் ஆன்ட்டிபாடிக்களை கொடுத்தோம் 5 நாட்களுக்குப் பிறகு நோய்த்தொற்று பெரிய அளவில் குறைந்திருந்ததைக் கண்டோம், எனவே இந்த மருந்துக்கு சிகிச்சை சக்தி இருக்கிறது என்றே பொருள்.

மனித உடல் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாக்கும் ஆன்ட்டிபாடிக்களை கொரோனாவிலிருந்து மீண்ட 60 பேரிடமிருந்து எடுத்தோம் இதை வைத்து தான் எலிப்பரிசோதனை செய்தோம். இதில் பெரிய அளவில் கொரோனாவுக்கான சிகிச்சை இருப்பதாக உணர்கிறோம்

இத்தகைய ஆண்ட்டிபாடிக்காக இராப்பகலாக உழைத்து வருகிறோம். எங்களுடையது ஒற்றை செல் மரபணுவியலாகும், நோய் எதிர்ப்பாற்றலியலோ வைரலியலோ அல்ல. ஒற்றை செல் மரபணு அணுகுமுறை, நோய்த் தொற்றை செயலிழக்கச் செய்யும் ஆன்ட்டிபாடிகளை கண்டுபிடிக்க முடியும் என்பதைக் கண்டு நாங்கள் உண்மையில் உற்சாகமடைந்தோம். இந்த ஆண்டின் இறுதியில் இந்த மருந்து தயாராகி விடும்.” என கூறியுள்ளார்.

சீனா ஏற்கெனவே 5 தடுப்பூசிகளைக் கொண்டு மனித பரிசோதனையை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு நீட்டிப்பால் 10ம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடிப்படையாக விளங்கும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மதம் 27ம் தேதி முதல் 13ம் தேதி ஏப்ரல் மாதம் வரை நடத்தத் திட்டமிட்டிருந்தது தமிழக கல்வித துறை. அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு மாணவர்கள் இரவு, பகல் பாராமல் படித்து வந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.

12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நிறைவடைந்திருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக, 10ம் வகுப்பு பொது தேர்வை தள்ளி வைத்தது தமிழக அரசு. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளை உடனடியாக திறக்க முடியாத சூழ்நிலையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சியின்றி வெற்றி பெற்றதாக அறிவித்தது அரசு.

10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் குறித்த மாறுபட்ட செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. 10ம் வகுப்புக்கும் தேர்வு வைக்காமல் திருப்புதல் தேர்வு முடிவின் அடிப்படையில் தேர்வு முடிவுகளை அறிவிக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அடிப்படை கல்வித் தகுதியாக கருதப்படுவதால் நிச்சயம் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தேர்வு அட்டவணை ஊரடங்கு முடிந்த பிறகு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டு இருந்தார்.

வரும் ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் 4ம் கட்ட ஊரடங்கு வரும் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், 10ம் வகுப்பு பொது தேர்வை ஜூன் 15ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார்.

அதன் படி மாற்றியமைக்கப்பட அட்டவனை பின் வருமாறு:

ஜூன் 15 – தமிழ்
ஜூன் 17- ஆங்கிலம்
ஜூன் 19 – கணிதம்
ஜூன் 22 – அறிவியல்
ஜூன் 24 – சமூக அறிவியல்

ஆகிய தேதிகள் தேர்வுகள் நடைபெறும் என அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.