சளி மற்றும் இருமல் பாதிப்பு இருப்பவர்கள் “மிளகு குழம்பு” செய்து சாப்பிடுங்கள்!!
மிளகு ஒரு மசாலா வகையைச் சார்ந்தது.இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இந்த மிளகில் வைட்டமின் ஏ,சி,கே,கரோடின்கள்,இரும்புச்சத்து,மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்டவை அதிகம் நிறைந்து இருக்கிறது.இந்த மிளகு காரத் தன்மை கொண்ட பொருளாகும்.இந்த ஆரோக்கியம் நிறைந்த மிளகில் குழம்பு செய்து சாப்பிடுவதன் மூலம் சளி மற்றும் இருமல் பாதிப்பு உடனடியாக சரியாகி விடும்.
தேவையான பொருட்கள்:-
*மிளகு – 2 தேக்கரண்டி
*கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி
*பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி
*வெந்தயம் – 1 தேக்கரண்டி
*வர மிளகாய் – 5
*பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
*எண்ணெய் – 2 தேக்கரண்டி
*கடுகு – 3/4 தேக்கரண்டி
*சீரகம் – 1/2 தேக்கரண்டி
*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
*கஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
*கருவேப்பிலை – 4 கொத்து
*சின்ன வெங்காய – 2 கைப்பிடி அளவு
*தக்காளி – 2(நறுக்கியது )
*புளிக்கரைசல் – 1 கப்
*முந்திரி பருப்பு – 10
*கசகசா – 1/2 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1 தேக்கரண்டி வெந்தயம்,5 வர மிளகாய்,1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்,1/2 தேக்கரண்டி கடுகு,1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை,கருப்பு மிளகு 2 தேக்கரண்டி,2 கொத்து கறிவேப்பிலை மற்றும் 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.இறுதியாக சீரகம் சேர்த்து வறுத்து அடுப்பை அணைக்கவும்.வறுத்த பொருட்களை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் கடுகு,கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
பிறகு அதில் 1 கப் புளிக்கரைசல்,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1 தேக்கரண்டி கஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்கவிடவும்.
இதற்கு இடையே ஒரு பவுலில் 10 முந்திரி பருப்பு,1/2 தேக்கரண்டி கசகசாவை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கொள்ளவும்.பின்னர் இவை நன்கு ஊறி வந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.
இந்த விழுதை கொதிக்கும் குழம்பில் ஊற்றி கலந்து விடவும்.பின்னர் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை இதில் சேர்த்து கொள்ளவும்.குழம்பு சுண்டி எண்ணெய் பிரிந்து வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.