தமிழில் முழக்கங்கள் எழுந்ததன் காரணமாக 10 எம்.பி கள் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள தடை!

0
83
10 MPs barred from chanting slogans in Tamil
10 MPs barred from chanting slogans in Tamil

தமிழில் முழக்கங்கள் எழுந்ததன் காரணமாக 10 எம்.பி கள் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள தடை!

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதியில் இருந்து ஆரம்பமானது. இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் மற்றும் வேளாண் திட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. அதை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகள் தொடர்ந்து எழுப்பி வந்ததன் காரணமாக, இரு அவைகளும் முடங்கின.

பெகாசஸ் மற்றும் வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து எதிர்கட்சி தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார். நாடாளுமன்றத்தில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பெகாசஸ் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக ஒன்றிணைந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் ஒரு விவாதம் நடத்தவும், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவும் முடிவு செய்தனர்.

பெகாசஸ் ஊழல் தொடர்பாக அனைத்து எதிர்கட்சிகளும் மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுக்கும் என்று இன்றைய செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன. மாநிலங்களவையில் விவாதம் கோரி முதன்முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வேண்டும், வேண்டும், விவாதம் வேண்டும் என்று தமிழில் முழங்க  ஆரம்பித்தனர். எப்போதும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே முழக்கம் இடுவார்கள். அதுதான் வழக்கமும் கூட.

ஆனால் நடப்பு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவை கூட்டத்தில் சட்டத் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழில் இவ்வாறு முழக்கங்கள் இட்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள் மட்டுமின்றி மற்ற மாநிலங்களை சேர்ந்த எம்.பி.களும் கூட தமிழிலேயே வேண்டும், வேண்டும், விவாதம் வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

ஆனால் கடும் அமளிக்கு இடையேயும் மந்திரி ஸ்மிருதி இரானி சிறார் பாதுகாப்பு மற்றும் நீதிக்கான சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இதுகுறித்து முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் எம்பியுமான ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வழக்கமாக மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் கோஷங்களை எழுப்புவார்கள். ஆனால் இந்த முறை மிகவும் வித்தியாசமாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழ்மொழியில் முழக்கங்கள் இட்டதன் காரணம் தமிழ்மொழி இவர்களை எல்லாம் இணைத்துள்ளது என்றுதான் அர்த்தம்.

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட சுமார் 10 எம் பிக்களுக்கு கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், டீன் குரியகோஸ், ஹிபி ஈடன், எஸ்.ஜோஈமணி, ரவ்னீத் பிட்டு, குர்ஜீத் அஜ்லா, டி.என்.பிரதாபன், வி.வைதிலிங்கம், சப்தகிரி சங்கர், ஏ.எம். ஆரிப், தீபக் பைஜ் ஆகியோர் ஆவார்கள். பின்னர் மக்களவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.