அணியில் இவர்களுக்கு முக்கியத்துவம் ஏன்!! ரோஹித் சர்மா கொடுத்த அதிரடி விளக்கம்!!
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அது பற்றி கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கையின் கண்டியில் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகிய இருவரும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தனர். ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியில் ஆசிய கோப்பை தொடரில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த வீரர்களான திலக் வர்மா, சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா, ஆகிய 3 பேரும் நீக்கப்பட்டு மீதமுள்ள 15 வீரர்கள் உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அணியின் தேர்வு முடிந்து அறிவித்த பிறகு கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் பேசியதாவது,
கிரிக்கெட் வீரர்கள் தங்களது இடத்திற்காக அணியில் போராடுவது மோசமான விஷயம் அல்ல. சவால்கள் அதிகரிப்பதால் அணியின் தேர்வு மிகவும் கடினமாகிவிடுகிறது. ஆனால் யார்? யார்? பார்மில் உள்ளனர்! எதிரணி எது? போன்ற சூழலில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் யார் என அனைத்தையும் பார்க்க வேண்டும். இவ்வாறு நடக்கும் போதே நம் அணியில் விளையாடும் சிலரை தவறவிட்டு விடுகிறோம். இது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்று என்பதால் அணியின் நன்மைக்காக சில கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்க வேண்டியுள்ளது.
அணியை தேர்வு செய்யும் பொழுது நிறைய வீரர்கள் குறித்து ஆலோசனை செய்து பரிசீலித்தோம். இறுதியில் சிறந்த 15 வீரர்கள் கொண்ட மிகச் சிறந்த அணியை தேர்வு செய்துள்ளதாக நம்புகிறோம். சரியான அணி சேர்க்கை இதுதான். இது மகிழ்ச்சியும், திருப்தியும் அளிக்கிறது.
அணியில் ஆல் ரவுண்டராக வலம் வரும் ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கும் செய்கிறார். பந்து வீச்சிலும் கலக்குகிறார் அவர் ஒரு முழுமையான வீரர். இதற்கு சான்றாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவரது பேட்டிங்கை பார்த்து நாம் அசந்து இருப்போம். அதேபோல் பந்து வீச்சிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முத்திரை பதித்துள்ளார். எனவே இந்த உலகக் கோப்பை போட்டியில் அவரது பார்ம் மிகவும் முக்கியமானது.
தற்போது வரும் சூழ்நிலையில் பந்து வீச்சாளர்களும் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அணியில் ஏன் ஆல்ரவுண்டர் தேவை என்பது தெரிந்திருக்கும். இதற்கு சான்றாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தையே கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அந்த ஆட்டத்தில் 256 ரன்கள் எடுத்த நாம் பேட்டிங் தெரிந்த பந்து வீச்சாளர் இருந்திருந்தால் கூடுதலாக 15 ரன் சேர்த்திருக்கலாம்.
இந்த 15ரன்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடியது. எனவே பந்து வீச்சாளர்களும் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் குறித்து பலமுறை கூறியிருக்கிறேன். இதன் காரணமாகவே அணியின் சமநிலையை நினைவில் கொண்டு 4 ஆல்- ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் பட்டேல், , சர்துல் தாக்கூர், போன்றோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோலவே சில சமயங்களில் முக்கியமான சுழற் பந்து வீச்சாளர்கள் அல்லது வேகப்பந்து ,வீச்சாளர்கள் நிறைய ரன்களை விட்டுக் கொடுக்கும் பொழுது அவர்கள் தங்களது 10 ஓவர்களை முழுமையாக வீச முடியாத நிலை ஏற்படும். அதுபோன்ற சூழ்நிலையில் ஆல்ரவுண்டர்கள் கை கொடுப்பார்கள் என்பதால் அணியில் ஆல் ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.