படத்தலைப்பில் வீரப்பன் பெயரா? வீரப்பனின் குடும்பத்தினர் வேண்டுகோள்!
வீரப்பன் என்ற பெயரை அவ்வளவு சீக்கிரம் தமிழ் மக்கள் மறந்திருக்க முடியாது.சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தலைமறைவாக வாழ்ந்து சந்தனக் கடத்தல்,யானைத் தந்தங்கள் கடத்தல் போன்ற செயல்களில் பல வருடங்களாக ஈடுபட்டு வந்தார்.வனப் பகுதிகளில் பல வருடங்களாக வாழ்ந்து வந்த அவர் தமிழ்நாடு,கர்னாடகா,கேரளா ஆகிய அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார்.வனத்துறை அதிகாரிகள் இவரை கைது செய்யவே முடியவில்லை.
அதனால் தமிழக அரசின் சார்பாக சிறப்புக் காவல்படை ஒன்றை அமைத்து வீரப்பனை பிடிக்க திட்டம் தீட்டினர்.அந்த காவல்படைக்கு விஜயகுமார் தலைமை தாங்கினார்.இதனையடுத்து 2004ம் ஆண்டு சிறப்பு காவல்படையால் வீரப்பன் கொல்லப்பட்டார்.பல வருட போராட்டத்தால் வீரப்பன் கொல்லப்பட்டது தமிழக காவல் துறையின் முக்கிய சாதனைகளில் ஒன்று .இதனையடுத்து மக்கள் தொலைக்கட்சியில் இவருடைய வாழ்க்கை வரலாறு சந்தனக்காடு என்னும் பெயரில் கௌதமன் என்பவரால் இயக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.
இதனையடுத்து 2016ம் ஆண்டு கில்லிங் வீரப்பன் என்ற கன்னட திரைப்படம் வீரப்பனின் வாழ்க்கையையும் கொலையையும் உண்மைக்கதையாக சினிமாவில் எடுக்கப்பட்டது.2017ம் ஆண்டு இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபுவின் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படத்திற்கு வீரப்பனின் கஜானா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் யாசின் இயக்குகிறார்.
இந்த படத்தில் யோகிபாபு யூட்யூபர் ஆக நடிக்கிறார்.இந்த படத்திற்கும் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.இதைக் கேள்விப்பட்ட மறைந்த வீரப்பன் குடும்பத்தினர் யோகிபாபுவை தொடர்புகொண்டு இந்த படத்தின் தலைப்பை மாற்றுமாறும் வீரப்பன் பெயரை பயன்படுத்த வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதனால் படக்குழு படத்தின் பெயரை மாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளது.விரைவில் என்ன தலைப்பு என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.