87 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம்! டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி!!

0
31

87 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம்! டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி!!

 

வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.

 

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகின்றது. வங்கதேசம் மகளிர் அணி மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று டாக்காவில் நடைபெற்றது.

 

இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி வங்கதேச மகளிர் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தட்டு தடுமாறி பேட் செய்து வந்தது. இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது.

 

இந்திய மகளிர் அணியில் அதிகபட்சமாக  ஷபாலி வெர்மா 19 ரன்களும், அமன்ஜொத் கவுர் 14 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். வங்கதேச மகளிர் அணியில் பந்துவீச்சில் சுல்தானா கட்டுன் 3 விக்கெட்டுகளையும், ஃபஹிமா கட்டுன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச மகளிர் அணி களமிறங்கியது. இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்கதேச மகளிர் அணியின் வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இரண்டாவது டி20 போட்டியில் வெற்றிக்காக இறுதி வரை போராடிய வீராங்கனை நிகர் சுல்தானா 19வது ஓவரின் 5வது பந்தில் ஆட்டமிழந்தார். எனினும் வெற்றி வங்கதேச மகளிர் அணி அருகில் இருந்தது.

 

வங்கதேச மகளிர் அணி வெற்றி பெறுவதற்கு இறுதி ஓவரில் அதாவது கடைசி 6 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. ஷபாலி வெர்மா அவர்களின் அசத்தலான பந்துவீச்சால் கடைசி ஓவரில் 10 ரன்களை எடுக்க முடியாமல் மீதமுள்ள 4 விக்கெட்டுகளையும் வங்கதேச மகளிர் அணி கடைசி ஓவரில் இழந்தது. கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி இரண்டாவது டி20 போட்டியில் தோல்வி பெற்றது.

 

வங்கதேச மகளிர் அணியில் அதிகபட்சமாக நிகர் சுல்தானா 38 ரன்கள் சேர்த்தார். இந்திய மகளிர் அணியில் பந்துவீச்சில் ஷபாலி வெர்மா, தீப்தி ஷர்மா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். வீராங்கனை மிண்ணு மணி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

8 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது டி20 போட்டியில்  வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஜூலை 13ம் தேதி நடைபெறவுள்ளது. வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான.முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.