Home Blog Page 5664

கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்ட ஈரோடு மாவட்டம்

0

கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்ட ஈரோடு மாவட்டம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நிலையில் முதலில் சென்னை மற்றும் மதுரையில் ஒரு சில பாதிப்புகள் கண்டறியப்பட்டன. ஆனால் அதிக எண்ணிக்கையில் ஈரோடு மாவட்டத்தில் தான் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

மத பிரச்சாரத்திற்காக தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோட்டிற்கு வந்த மதபோதகர்கள் மூலமாக கொரோனா தோற்று ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர்களை கைது செய்து முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்ததாக இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் அடுத்தகட்ட தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் முழுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து 33,330 குடும்பங்களைச் சேர்ந்த 1,66,806 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் இவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று சிறிது சிறிதாக விடுவிக்கப்பட்டனர்

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டம் மாறியுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இறுதியாக பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 பேரில் 69 பேர் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 65 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது எஞ்சிய 4 பேரும் குணமடைந்தனர். இதுவரை ஈரோட்டில் கொரோனாவால் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தற்போது 7-வது இடத்தில் உள்ளது. தற்போது வரை கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் 2058 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 25 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பிரச்சனையில் ஆறுதலளிக்கும் தகவலை கூறிய மருத்துவர் ராமதாஸ்

0

கொரோனா பிரச்சனையில் ஆறுதலளிக்கும் தகவலை கூறிய மருத்துவர் ராமதாஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடும் அச்சத்தில் உள்ள தமிழக மக்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் தகவலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பகிர்ந்துள்ளார். அதாவது 20 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை என்றும்,மக்கள்
ஊரடங்கை மதித்தால் நடந்தால் விரைவில் வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் எட்டப்பட்டு வருவது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய தொற்றுகள் குறைந்து வரும் நிலையில், இதேநிலையை தக்கவைத்துக் கொள்வது தான் தமிழகத்தின் முதன்மைக் கடமையாகும்.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 52 புதிய நோய்த் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஏற்பட்ட புதிய தொற்றுகளில் 47 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது கவலையளிக்கும் விஷயம் தான் என்றாலும் கூட, அவர்களைத் தவிர ஒட்டுமொத்த தமிழகத்திலும் 5 பேர் மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிலும் கூட 4 பேர் மதுரையையும், ஒரு குழந்தை விழுப்புரத்தையும் சேர்ந்தவர்கள் எனும் நிலையில், மீதமுள்ள 35 மாவட்டங்களில் நேற்று புதிய தொற்று ஏற்படவில்லை என்பது உண்மையாகவே தமிழக மக்கள் அனைவருக்கும் நிம்மதியை அளித்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாகவே கட்டுக்குள் இருப்பதை புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன. தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரி கொரோனாவின் பிடியிலிருந்து கிட்டத்தட்ட விடுவிக்கப்பட்டு விட்டது என்று கூறும் அளவுக்கு அந்த மாவட்டத்தில் கடந்த 19 நாட்களாக புதிய தொற்றுகள் ஏற்படவில்லை. அதேபோல் வட எல்லையில் இராணிப்பேட்டை மாவட்டத்திலும், தெற்கு எல்லையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த 14 நாட்களாக புதிய நோய்த் தொற்றுகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் 13 நாட்களாகவும், கரூர், தேனி மாவட்டங்களில் 11 நாட்களாகவும், வேலூர் மாவட்டத்தில் 10 நாட்களாகவும் புதிய தொற்றுகள் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 8 நாட்களாகவும், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் 5 நாட்களாகவும், தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், தருமபுரி, திருப்பத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 4 நாட்களாகவும் கொரோனா வைரஸ் யாரையும் புதிதாக தாக்கவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக யாரையும் கொரோனா வைரஸ் தாக்கவில்லை. இவை தவிர கிருஷ்ணகிரி மாவட்டம் தொடக்கம் முதலே கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திகழ்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படாத ஒரே மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொருபுறம் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான நேரத்தில் குணமடைந்து வருகின்றனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள 1937 பேரில் இதுவரை 1101 பேர், அதாவது 57 விழுக்காட்டினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி 809 பேர் மருத்துவம் பெற்று வரும் நிலையில், அவர்களை விட அதிகமானவர்கள் குணமடைந்திருப்பது கொரோனா நோய் பரவலைத் தடுப்பதில் நாம் வெற்றிக்கோட்டை நெருங்குகிறோம் என்பதைக் காட்டுகிறது. தமிழக அரசின் வழிகாட்டுதல், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் கடுமையான உழைப்பு, காவல்துறையினர் மற்றும் துப்புரவு பணியாளர்களின் உதவி, இவர்களுக்கெல்லாம் மேலாக பொதுமக்களின் ஒத்துழைப்பு ஆகியவை இல்லாமல் இத்தகைய முன்னேற்றத்தை எட்டியிருக்க முடியாது. ஊரடங்கு ஆணையை தமிழக மக்கள் மதித்து நடந்ததற்கு கிடைத்த பரிசு தான் இதுவாகும்.

கொரோனா பரவல் தடுப்பில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம் என்றாலும் கூட, முழுமையான வெற்றியை அடைந்து விடவில்லை. அதற்கு இதே கட்டுப்பாட்டுடன் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். கடந்த சில வாரங்களில் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தை வைத்துப் பார்க்கும் போது, அடுத்த சில வாரங்களில் கொரோனா அச்சம் இல்லாத தமிழகத்தை உருவாக்கி விட முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதற்காக நாம் செய்ய வேண்டியது ஊடரங்கு ஆணை மற்றும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது ஆகியவற்றை நாம் எவ்வளவு கடுமையாக கடைபிடித்து வந்தோமோ, அதை விட மும்மடங்கு கூடுதலாக கடைபிடிப்பதன் மூலம் கொரோனாவை விரட்டியடிக்க முடியும்.

சென்னையைப் பொறுத்தவரை நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தாலும் கூட, அதை எண்ணி அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்தியாவின் மற்ற நகரங்களுடன் ஒப்பிடும் போது, அவற்றை விட மிக அதிகமாக சென்னையில் 10 லட்சம் பேருக்கு 3100 சோதனைகள் என்ற அளவில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனால் தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது. அடுத்து வரும் நாட்களில் இன்னும் கூடுதலான சோதனைகளை மேற்கொண்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதன் மூலம் சென்னையிலும் கொரோனா வைரசை வீழ்த்தி விட முடியும். ஆகவே, கொரோனாவை ஒழிப்பதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளித்தால் கொரோனா ஒழிப்பு போரில் வெற்றி விரைவில் சாத்தியமாகும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தனது விரலைக் கொண்டே தன்னுடைய கண்ணைக் குத்திக் கொள்வதா? திமுக தலைவர் கையிலெடுத்த அடுத்த பிரச்சனை

0

தனது விரலைக் கொண்டே தன்னுடைய கண்ணைக் குத்திக் கொள்வதா? திமுக தலைவர் கையிலெடுத்த அடுத்த பிரச்சனை

கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி, 15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டிக் குறைப்பு என்று அதிமுக அரசு, தன்னுடைய ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தின் மீது தாக்குதல் தொடுத்து, ஆணை வெளியிட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது; கண்டனத்திற்குரியது.

கரோனா நோய்த் தொற்றுப் பேரிடர் அறிவிக்கப்பட்டவுடன் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய அரசு ஊழியர்கள், கரோனா தடுப்புப் பணிகளையும், ‘மெய் வருத்தம் பாராது பசி நோக்காது கண் துஞ்சாது’, முழு ஈடுபாட்டுடன் ஆற்றி வருகிறார்கள்.

குறிப்பாக, காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சித் துறை, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை ஊழியர்கள் எனப் பெரும்பாலான முக்கிய அரசுத் துறைகளின் லட்சக்கணக்கான ஊழியர்கள் அனைவரும், மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்கள் பணியாற்றி, கரோனா நோய்த் தடுப்பிலும் சிகிச்சையிலும் முக்கியப் பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கரோனா நேரத்தில் நடைபெற்ற தேர்வு மையங்களில் எல்லாம் ஆசிரியர்கள் பணியாற்றியுள்ளனர். அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அவசியமான அனைத்துத் துறை அரசு ஊழியர்களும் ஒருங்கிணைந்து, நமது மக்களைக் காப்பாற்றிட, போர்க்கால உணர்வுடன் பணியாற்றி வரும் நேரத்தில் அதிமுக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை, அரசு ஊழியர்களின் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பெருமளவில் இழக்க வைத்து மனதளவில் சோர்வடையச் செய்யும் என்ற அடிப்படை உண்மையைக் கூட அரசு ஏனோ உணரவில்லை.

மத்திய பாஜக அரசு முடிவு எடுத்தவுடன், உடனே அதைப் பின்பற்றி, அதிமுக அரசும் இதுபோன்று அரசு ஊழியர்களின் வாழ்வாதார உரிமைகளை மனம் போன போக்கில் ரத்து செய்வதை, மக்கள் நலனில் அக்கறையுள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

‘நிதி மேலாண்மையில் நாங்கள் புலிகள்’ என்று விளம்பரம் செய்து வந்த அதிமுக அரசும், அதன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதுபோன்ற ஊழியர்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்திருப்பது, அதிமுக ஆட்சியின் நிதி மேலாண்மை படுகுழியில் தள்ளப்பட்டுவிட்டது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

ரூ.4.56 லட்சம் கோடி கடனில் தமிழகத்தை வீழ்த்திய கொடுமையான அதிமுக ஆட்சி தான், இப்படியொரு பின்னடைவான சூழலை கரோனா போரில் கள வீரர்களாக நிற்கும் காவல்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்களின் மீது திணித்து, அவர்கள் தலையில் கைவைத்திருக்கிறது என்பது மிகுந்த கவலையளிக்கிறது.

“ஏற்கெனவே ஈட்டிய விடுப்புக்குப் பதில் ஊதியம் வழங்குவதற்கு ஆணை பிறப்பித்திருந்தால் அதையும் ரத்து செய்யுங்கள்” என்று அமைச்சர் ஜெயக்குமாரின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை வெளியிட்டிருப்பது சிறிதும் ஈவு இரக்கமற்றது. கரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக, இப்படி உதாசீனப்படுத்துவது ஏற்புடையதாகாது.

அகவிலைப்படி ரத்து, ஈட்டிய விடுப்புக்குப் பதில் ஊதியம் பெறும் உரிமை ரத்து போன்ற அரசு ஊழியர்களின் பொருளாதார நிலைமையைப் பாதிக்கும். அவர்களுக்கு முற்றிலும் எதிரான அரசாணைகளை முதல்வர் பழனிசாமி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்குச் சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்கு, நிதி கமிஷன் பகிர்வு போன்ற பல்வேறு நிதிகளையும், கரோனா பேரிடர் நிவாரணத்திற்கான நிதியையும், தேவையான அரசியல் அழுத்தம் கொடுத்து, உரிமையுடன் தட்டிக் கேட்டு, உடனடியாகப் பெற வேண்டும். அதை விடுத்து, தனது விரலைக் கொண்டே தன்னுடைய கண்ணைக் குத்திக் கொள்வதைப் போல, அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது” என தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பிற்கான புதிய அறிகுறிகள்! அமெரிக்க ஆய்வு நிறுவனம் கண்டுபிடிப்பு

0

கொரோனா பாதிப்பிற்கான புதிய அறிகுறிகள்! அமெரிக்க ஆய்வு நிறுவனம் கண்டுபிடிப்பு

ஆரம்பத்தில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும்பாலான உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் இந்த வைரஸ் தொடர்பான ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ஆய்விலும் கொரோனா வைரஸ் பற்றி புதியதான பல தகவல்கள் வெளியாகின்றன. 
அந்த வகையில், தற்போது அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான புதிய அறிகுறிகள் சிலவற்றை கண்டறிந்து தெரிவித்துள்ளது.

வைரஸ் பரிசோதனை

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் இருப்பவர்களுக்கு லேசானது முதல் தீவிரமான அறிகுறிகள் தென்படுகின்றன. கொரோனா வைரஸ் தாக்கிய பின்னர் இந்த அறிகுறிகள் 2 முதல் 14 நாட்களுக்குப் பின்னர் வெளியில் தெரிய ஆரம்பிக்கும் என்று சிடிசி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி கண்டுபிடித்த அறிகுறிகளாவன.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி கண்டுபிடித்த புதிய அறிகுறிகள்:
1. காரணமேயில்லாமல் உடல் குளிர்வது போன்று உணர்தல் 2. காரணமேயில்லாமல் உடல் குளிர்ச்சியுடன் நடுங்க ஆரம்பித்தல் 3. கடுமையான வேலை செய்யாத நிலையிலும் உடலில் தசை வலி ஏற்படுதல் 4. திடீரென ஏற்படும் தலைவலி 5. சுவை மற்றும் வாசனை உணர்வு குறைவது.

தற்போது அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி வெளியிட்ட இந்த அறிகுறிகள் எதுவும், உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட பட்டியலில் இடம் பெறவில்லை. இதற்கு முன் உலக சுகாதார அமைப்பானது, காய்ச்சல், வறட்டு இருமல், உடல் சோர்வு, உடல் வலி, மூக்கடைப்பு, வயிற்றுப் போக்கு, தொண்டை வறட்சி உள்ளிட்டவற்றை கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஆகும் என்று குறிப்பிட்டிருந்தது.

பொதுவாக தற்போது வரை கொரோனா வைரஸ் இருந்தால், காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருக்குமென்று சிடிசி மற்றும் உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. 

அதே நேரத்தில் ஒருவருக்கு கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இந்த அறிகுறிகள் மட்டும் தான் வரும் என்று கூற முடியாது எனவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மருத்துவமனையை அணுகி இதுகுறித்து முறையான தெளிவு பெற வேண்டும் என்றும் சிடிசி விளக்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு தருமபுரி திமுக எம்பி தான் காரணமா? பாஜக பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு தருமபுரி திமுக எம்பி தான் காரணமா? பாஜக பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் சூழ்நிலையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் முறைகளில் முதன்மையான சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கை வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் தமிழகத்தில் திமுக மற்றும் மத்தியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கொண்டே வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் டெல்லியில் நடந்த முஸ்லிம் மத சம்பந்தமான தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் தான் என்று அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவியதற்கும் அவர்களே முதன்மையான காரணமாக கருதப்பட்டு அவர்களுடன் தொடர்புடைய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான சிகிச்சையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

இதனையடுத்து பெரும்பாலான முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியை நம்பியுள்ள திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை கண்டு கொள்ளாமலே கடந்து சென்றன. ஒரு நிலையில் தமிழக அரசு சார்பில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை அறிவிக்கும் ஒவ்வொரு முறையும் டெல்லி சென்று வந்தவர்கள் எண்ணிக்கை என தனியாக அறிவிப்பதை சுகாதார துறை நிர்வாகிகளும் கடைபிடித்து வந்தனர்.

இந்நிலையில் இதனை எதிர்த்து முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சரான அன்புமணி ராமதாஸ் டெல்லி சென்று வந்தவர்கள் என்று இனி தமிழக அரசு பிரித்து அறிவிக்க கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தார். அதைவிட்டு கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களை குணப்படுத்தும் பணியை மட்டுமே துரிதபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

Kalyana Raman BJP
Kalyana Raman BJP

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவ காரணமாக இருந்த இந்த டெல்லி முஸ்லிம் மத தப்லிக் மாநாட்டிற்கு சென்று வர திமுகவின் தருமபுரி எம்பி தான் உதவியதாக பாஜக ஆதரவாளர் கல்யாண ராமன் குற்றம் சாற்றியுள்ளார். மேலும் இதன் பின்னணியில் திமுக தலைமை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது.

தர்மபுரி எம் பி மூலமாகத்தான் தமிழக தப்லீக் ஜமாத் கும்பலுக்கான பயணம், தங்கும், உணவு ஏற்பாடுகளும் டெல்லியில் செய்யப்பட்டதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. உபிஸ் மொத்தத்தில் இந்த வித செலவீனங்களுக்காக 25 கோடிகள் ஒதுக்கியதாக ஆரம்பகட்ட தகவல்கள் வருகின்றன

https://twitter.com/BjpKalyaan/status/1254878756084178944

மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளை தொடர்ந்து எதிர்த்து வந்த திமுகவினருக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. பாஜக ஆதரவாளரான கல்யாண ராமன் ஏற்கனவே முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக திமுக எம்பியும் திராவிட ஆதரவு மற்றும் CAA போராட்டத்திற்கு ஆதரவு என்ற பெயரிலும் தெரிவித்து வந்த கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பி வந்தன. இந்நிலையில் திமுக எம்பி மீது இவர் சுமற்றிய இந்த குற்றசாட்டு எந்த அளவிற்கு உண்மையானது என்பது குறித்தும் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்து அதைப்பற்றி விவாதிக்க ஆரம்பித்து விட்டனர்.

30 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று 2 லட்சம் உயிர்களை கொன்றுள்ளது : சர்வதேச மற்றும் மாநில பட்டியல்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 30 லட்சத்து 64 ஆயிரத்து 225 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 9 லட்சத்து 22 ஆயிரத்து 387 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

30 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று 2 லட்சம் உயிர்களை கொன்றுள்ளது : சர்வதேச மற்றும் மாநில பட்டியல்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 28,432 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 886 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 6,443 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 8068/342
டெல்லி – 2,918/54
குஜராத் – 3,301/151
தமிழ்நாடு – 1,937/24
தெலுங்கானா – 1002/26
கேரளா – 469/04
ராஜஸ்தான் – 2,185/41
உத்தரபிரதேசம் – 1,868/31
ஆந்திர பிரதேசம் – 1,177/31
கர்நாடகா – 511/20
மத்திய பிரதேசம் – 2,168/106
ஜம்மு & காஷ்மீர் – 523/06
மேற்கு வங்கம் – 649/20
பஞ்சாப் – 313/18
ஹரியானா – 289/03
பீகார் – 277/02
அசாம் – 36/01
சண்டிகர் -28/0
உத்தர்கண்ட் – 50/0
லடாக் – 20/0
அந்தமான் & நிக்கோபார் -27/0
சத்தீஸ்கர் – 37/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 40/01
ஒடிசா – 108/01
பாண்டிச்சேரி – 07/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 82)/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 12/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1,937 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 24 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 1,101 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

30 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று 2 லட்சம் உயிர்களை கொன்றுள்ளது : சர்வதேச மற்றும் மாநில பட்டியல்!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து கொரோனா பாதிப்பு… எல்லையை அவசரமாக மூடிய அரசு..!! சரக்கு வாகனங்களுக்கு வழி கிடைக்குமா?

0

வேலூர் மாவட்டத்தில் தமிழக, ஆந்திர மாநில எல்லை சோதனை சாவடிகளான சைனகுண்டா, பொன்னை சோதனை சாவடிகளில் சாலையின் குறுக்கே தடுப்புச்சுவர்கள் எழுப்பி முழுமையாக நேற்று முதல் மூடப்பட்டன. 

வேலூர் மாவட்டத்தில் தமிழக- ஆந்திர எல்லையான பத்தலப்பல்லி, சைனகுண்டா, பரதராமி, காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு மற்றும் பொன்னை மாதாண்டகுப்பம் ஆகிய 6 எல்லை போக்குவரத்து சோதனை சாவடிகள் உள்ளன.அவற்றில் சைனகுண்டா, பொன்னை சோதனை சாவடிகள் நேற்று முதல் மறு உத்தரவு வரும் வரை முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று காலை இரு சோதனை சாவடிகளிலும் சாலையின் குறுக்கே தடுப்புச்சுவர்கள் எழுப்பப்பட்டன. இதன் மூலம் அந்த சோதனை சாவடிகள் வழியாக இருசக்கர வாகனம் உட்பட எந்த வாகனமும் நுழைய முடியாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மூடப்படும் சைனகுண்டா சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்கள் பரதராமி வழியாகவும், பொன்னை மாதாண்டகுப்பம் சோதனை சாவடி வழியே வரும் வாகனங்கள் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு சோதனை சாவடிகள் வழியாகவும் செல்ல அனுமதிக்கப்படும்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் உட்பட வெளிமாநிலங்களுக்கு அனுமதியுடன் சென்ற வாகனங்கள் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே திரும்பி வந்த 100 வாகன ஓட்டிகள் இன்று அரசு பென்ட்லன்ட் மருத்துவமனை அல்லது அலமேலுமங்காபுரம் கேஜிஎன் மகாலில் நடக்கும் மருத்துவ முகாமில்கொரோனா சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து அனுமதியுடன் திரும்பி வரும் வாகன ஓட்டிகள் பத்தல்லப்பல்லி, கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு சோதனை சாவடிகள் மற்றும் பூட்டுத்தாக்கு வழியாக வரும்போது சிறப்பு மருத்துவ முகாம்களில் கொரோனா சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

அத்துடன், முடிவுகள் வரும் வரை பள்ளிகள், மஹால்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களை சந்திக்க யாருக்கும் அனுமதியில்லை. சோதனை முடிவில் யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவர். தொற்று இல்லாதவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டாலும், வீட்டிலேயே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர். 

இதற்கு ஒத்துழைப்பு தராதவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இனி வேலூர் மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கோ, மாநிலங்களுக்கோ பொதுமக்கள் செல்வதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படாது. அவர்களின் விண்ணப்பங்களும் மறு உத்தரவு வரும் வரை ஏற்கப்படாது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த இந்தியா! இனிமேல் இறப்பு விகிதம் குறையும்

0

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த இந்தியா! இனிமேல் இறப்பு விகிதம் குறையும்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் இறப்பு விகிதங்களை குறைக்கும் வகையில் புதிய தடுப்பூசி ஒன்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 27 ஆயிரத்தை கடந்து விட்டது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 872 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த பாதிப்பிலிருந்து மக்களை காப்பற்ற சமூக விலகல் தான் முதன்மையான வழி என்று உணர்ந்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது.இதே வேளையில் இந்த வைரசை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் தொடர்ந்து மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தற்போது இந்த கொரோனாவைரஸ் பாதிப்பினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைக்க புதிய தடுப்பூசி ஒன்றை சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கண்டுபிடித்துள்ளது .

இது குறித்து சண்டிகர் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன  செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதாவது: அண்மையில் நடத்தப்பட்ட  சோதனையில், இந்த தடுப்பூசியானது ஐசியூவில் உள்ள கொரோனா நோயாளிகளின் இறப்பை குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் இறப்பு விகிதம் குறையும் என்று தெரிவித்துள்ளார்.

நாடக காதல் மூலம் இளம் பெண் மருத்துவரை சீரழித்த வாலிபர்! பேஸ்புக்கில் வெளியான வீடியோ

0

நாடக காதல் மூலம் இளம் பெண் மருத்துவரை சீரழித்த வாலிபர்! பேஸ்புக்கில் வெளியான வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாடக காதல் மூலமாக இளம் பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் காதலிப்பதாக கூறி பாலியல் உறவு வைத்ததோடு, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல கோழி வியாபாரியான தங்கபாண்டியன் என்பவரின் மகன் தான் காசி என்ற சுஜி. 26 வயதாகும் இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இவர் கடந்த பத்து ஆண்டுகளில் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக உள்ளூர் முதல் வட இந்தியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளம்பெண்களிடம் ஆரம்பத்தில் நண்பராக அறிமுகமாகி, பின்னர் ஆசையாக பேசி காதலிப்பதாக கூறி தன்னுடைய வகையில் விழ வைத்துள்ளார்.பின்னர் அவர்களை நம்ப வைத்து தான் விரும்பும் வகையில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொடர்பு வைத்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் இவருடன் பழகிய பெண்களுக்குத் தெரியாமலேயே அவர்களுடன் தனியாக இருப்பதை வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் படித்து கொண்டிருந்த போது அவரது வலையில் சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் விழுந்து, இருவரும் பல்வேறு இடங்களுக்கும் சென்று விருப்பப்படி ஊர் சுற்றி வந்துள்ளனர்.

இதனையடுத்து கல்லூரி படிப்பை முடித்த அவர் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல தன்னுடன் பழகிய அந்த பெண் மருத்துவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் காசி. இவரின் மிரட்டலுக்கு பயந்து ஆரம்பத்தில் பணம் கொடுக்க ஆரம்பித்த அந்த பெண் ஏறக்குறைய பல லட்சம் வரை அவருக்கு கொடுத்துள்ளார். ஒரு நிலைக்கு மேல் பணம் கொடுக்க முடியாது என்று அந்த பெண் மருத்துவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவர் அந்த பெண்ணுடன் இருந்த ஆபாச படம் மற்றும் வீடியோக்களை தன் நண்பர்களிடம் கொடுத்து சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலமாக பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனையடுத்து நிலைமையை சுதாரித்து கொண்ட அந்த பெண் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் 9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சுஜியின் செல்போன்,லேப்டாப் உள்ளிட்ட பல ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையின் போது இதேபோல இவர் ஏற்கனவே பல பெண்களிடம் ஒன்றாக இருந்த போது எடுத்த ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை சமயம் பார்த்து அவர்களிடம் காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

பின்னர் சம்பந்தபட்ட அந்தப் பெண்களின் மொபைல் எண்களை தன்னுடைய நண்பர்களுக்குக் கொடுத்து பேச வைத்து தன்னை அந்த பெண்களிடமிருந்து விடுவித்துக் கொள்வது இவரது வழக்கமாக இருந்துள்ளது. இதனையடுத்து இவர் யாரையெல்லாம் ஏமாற்றி பணம் பறித்துள்ளர் என்பது குறித்து காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊரடங்கால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரலாற்று சாதனை படைக்க தயாரான மருத்துவர் ராமதாஸ்

0

ஊரடங்கால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரலாற்று சாதனை படைக்க தயாரான மருத்துவர் ராமதாஸ்

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த மத்திய அரசு நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற கடைகள் மற்றும் தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதில் குறிப்பாக தமிழக அரசு நடத்தும் மதுக்கடைகளும் அடங்கும். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி மதுப்பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் மதுக்கடைகளை மூட தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் “மதுக்கடைகள் முடிந்த கதையாகட்டும்! மகிழ்ச்சி மட்டும் தொடர் கதையாகட்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மற்றும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப் படும் ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், ஊரடங்கால் பல நன்மைகளும் விளைந்துள்ளன. அவற்றில் முதன்மையானது மதுவை மக்கள் மறந்திருப்பது தான்.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 39 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதற்கு பிறகு இன்று வரையிலான 31 ஆண்டுகளில் மதுவிலக்கை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அப்போதெல்லாம், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், மதுவுக்கு அடிமையானவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவர்; கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று கூறியே மதுக்கடைகளை மூட ஆட்சியாளர்கள் மறுத்து வந்தனர். ஆனால், கடந்த ஒரு மாதமாக அப்படி எதுவுமே நடக்கவில்லை. இதன்மூலம் கடந்த ஆட்சிக் காலங்களில் கூறப்பட்டவை அனைத்தும் பொய்யான தகவல்கள்; மக்களை ஏமாற்றி மதுவை தடையின்றி விற்பனை செய்ய நடத்தப்பட்ட கபட நாடகம் என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.

ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டு இதுவரை 5 வாரங்களுக்கும் மேலாகி விட்ட நிலையில், மது கிடைக்காததால் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. மதுவுக்கு அடிமையாகி, அது இல்லாவிட்டால் வாழவே முடியாது என்று வர்ணிக்கப்பட்டவர்கள் கூட, இப்போது மதுவை மறந்து விட்டு புதிய மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் மதுவிலிருந்து மீள முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளானது உண்மை தான் என்றாலும் கூட, உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றின் மூலம் மீண்டு வந்த அவர்கள், இப்போது புதிய உற்சாகத்துடன் எந்த பணியையும் செய்ய முடிவதாக தெரிவித்துள்ளனர்.

இப்படி ஒரு நிலை ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான் இவ்வளவு காலமும் நான் காத்திருந்தேன். தமிழ்நாட்டு மக்களுக்கும் மது இல்லாத ஊரடங்கு காலம் புதிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மது அரக்கனின் ஆதிக்கத்தால் நடந்த குடும்ப வன்முறைகள் முடிவுக்கு வந்துள்ளன. மற்றொருபுறம் குடும்பத்தை மறந்து குடி, உடல்நலக்கேடு என சீரழிந்து கொண்டிருந்த பலர் ஊரடங்கின் பயனாக மதுவை மறந்து குடும்பத்தினருடனும், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்து வருகின்றனர். இந்த மகிழ்ச்சி நிரந்தரமாக நீடிக்க வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பமாகும். இதற்கு ஒரே தீர்வு ஊரடங்குக்காக மூடப்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டவையாகவே இருப்பது தான்.

மதுக்கடைகள் மூடப்படுவதால் அதிகபட்சமாக, மது ஆலைகளை நடத்தும் 10 நிறுவனங்கள் மட்டும் தான் பாதிக்கப்படும். அதேநேரத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டால் ஒன்றரை கோடி குடும்பங்கள் நிம்மதியாக வாழும். எத்தனை ஆயிரம் கோடியில் எத்தனை திட்டங்களை செயல்படுத்தினாலும் கிடைக்கும் நிம்மதியை விட, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால் மக்களுக்கு கிடைக்கும் நிம்மதி மிக, மிக அதிகமாகும்.

இதற்கெல்லாம் மேலாக மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்ற விழிப்புணர்வு வாசகங்களை மதுக்கடைகளிலும், மதுப்புட்டிகளிலும் எழுதி வைத்து விட்டு மதுவை விற்பனை செய்வது ஏற்கமுடியாத முரண்பாடு ஆகும். இதைக் களைய தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தமிழகத்தின் மதுஒழிப்பு வரலாற்றில் இப்போதைய முதலமைச்சரின் பெயரும் இடம் பெறும்.

தமிழகத்தின் மிகப்பெரிய வலிமை மனிதவளம் தான். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் இளைஞர்களும், பணி செய்யக்கூடிய வயதில் உள்ளவர்களும் அதிகம். ஆனால், அதே தமிழகத்தில் தான் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை அதிக எண்ணிக்கையில் பணிக்கு சேர்க்கும் அவலநிலையும் நிலவுகிறது. இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று தமிழக இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி பணி செய்ய முடியாமல் முடங்கிக் கிடந்தது ஆகும். மதுவை தற்போது மறந்துள்ள இளைஞர்கள், இனி நிச்சயமாக பணிக்கு செல்வார்கள். தமிழகம் கடந்த காலங்களில் மதுவால் இழந்த மனிதவளம் என்ற மிகப்பெரிய வரம் மீண்டும் கிடைக்கும். இது மதுவால் சீரழிந்த குடும்பங்களில் நிலவி வந்த வெறுக்கத்தக்க இறுக்கத்தையும், வறுமையையும் நிச்சயமாக போக்கும்.

தமிழ்நாட்டின் மனிதவளம் அதன் முழுத் திறனையும் வெளிப்படுத்தினால் தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு குறைந்தபட்சம் 20% உயரும். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டின்படி, 2020&21 ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு ரூ. 20 லட்சத்து, 91,896 கோடி ஆகும். மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, மனிதவளம் முழுமையாக பயன்படுத்தப்பட்டால், தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ. 4 லட்சத்து 18,379 கோடி அதிகரிக்கும். இதிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வருவாய், மது வணிகத்தால் கிடைக்கும் வருவாயை விட அதிகமாக இருக்கும். அதனால், மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால் தமிழக அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படாது. மாறாக ஒட்டுமொத்தமாக அரசுக்கு கிடைக்கும் வருவாய் கணிசமாக அதிகரிக்கும்.

அதுமட்டுமின்றி தமிழகத்தின் பொருளாதாரம் தழைக்கும்; வேலைவாய்ப்பு பெருகும்; வறுமை விலகும்; குடும்பங்களில் மகிழ்ச்சி தண்டவமாடும். இவை அனைத்தும் சாத்தியமாகும் வகையில், தமிழகத்தில் ஊரடங்கு ஆணை விலக்கிக் கொள்ளப்படும் நாளில் இருந்து, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பாமக சார்பாக தொடரப்பட்ட நீதிமன்ற வழக்கின் மூலமாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடிய நிலையில் தற்போதுள்ள ஊரடங்கு நேரத்தில் மருத்துவர் ராமதாஸ் இந்த பிரச்சனையை கையிலெடுத்திருப்பது நிச்சயம் நல்ல தீர்வை தரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதால் பாமகவின் பல்வேறு ஆலோசனைகள் கடந்த காலங்களில் அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்துவதற்கு ஏற்ப தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினால் வரலாற்றில் இருவரின் பெயர்களும் இடம்பெறும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.