வெளி மாநிலங்களில் இருந்து கொரோனா பாதிப்பு… எல்லையை அவசரமாக மூடிய அரசு..!! சரக்கு வாகனங்களுக்கு வழி கிடைக்குமா?

0
88

வேலூர் மாவட்டத்தில் தமிழக, ஆந்திர மாநில எல்லை சோதனை சாவடிகளான சைனகுண்டா, பொன்னை சோதனை சாவடிகளில் சாலையின் குறுக்கே தடுப்புச்சுவர்கள் எழுப்பி முழுமையாக நேற்று முதல் மூடப்பட்டன. 

வேலூர் மாவட்டத்தில் தமிழக- ஆந்திர எல்லையான பத்தலப்பல்லி, சைனகுண்டா, பரதராமி, காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு மற்றும் பொன்னை மாதாண்டகுப்பம் ஆகிய 6 எல்லை போக்குவரத்து சோதனை சாவடிகள் உள்ளன.அவற்றில் சைனகுண்டா, பொன்னை சோதனை சாவடிகள் நேற்று முதல் மறு உத்தரவு வரும் வரை முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று காலை இரு சோதனை சாவடிகளிலும் சாலையின் குறுக்கே தடுப்புச்சுவர்கள் எழுப்பப்பட்டன. இதன் மூலம் அந்த சோதனை சாவடிகள் வழியாக இருசக்கர வாகனம் உட்பட எந்த வாகனமும் நுழைய முடியாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மூடப்படும் சைனகுண்டா சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்கள் பரதராமி வழியாகவும், பொன்னை மாதாண்டகுப்பம் சோதனை சாவடி வழியே வரும் வாகனங்கள் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு சோதனை சாவடிகள் வழியாகவும் செல்ல அனுமதிக்கப்படும்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் உட்பட வெளிமாநிலங்களுக்கு அனுமதியுடன் சென்ற வாகனங்கள் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே திரும்பி வந்த 100 வாகன ஓட்டிகள் இன்று அரசு பென்ட்லன்ட் மருத்துவமனை அல்லது அலமேலுமங்காபுரம் கேஜிஎன் மகாலில் நடக்கும் மருத்துவ முகாமில்கொரோனா சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து அனுமதியுடன் திரும்பி வரும் வாகன ஓட்டிகள் பத்தல்லப்பல்லி, கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு சோதனை சாவடிகள் மற்றும் பூட்டுத்தாக்கு வழியாக வரும்போது சிறப்பு மருத்துவ முகாம்களில் கொரோனா சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

அத்துடன், முடிவுகள் வரும் வரை பள்ளிகள், மஹால்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களை சந்திக்க யாருக்கும் அனுமதியில்லை. சோதனை முடிவில் யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவர். தொற்று இல்லாதவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டாலும், வீட்டிலேயே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர். 

இதற்கு ஒத்துழைப்பு தராதவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இனி வேலூர் மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கோ, மாநிலங்களுக்கோ பொதுமக்கள் செல்வதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படாது. அவர்களின் விண்ணப்பங்களும் மறு உத்தரவு வரும் வரை ஏற்கப்படாது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K