44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி! தமிழக வீரர் பிரக்யானந்தா அசத்தலான வெற்றி!

0
117

மாமல்லபுரத்தில் 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இதில் இந்திய ஆண்கள் ஏ அணி பிரேசில் அணிக்கு எதிராக காய்களை நகர்த்தியது. இதில் ஹரி கிருஷ்ணா மற்றும் விதித் சந்தோஷ் ட்ராவை சந்தித்தபோதும் தமிழக வீரர் சசி கிரண் வெற்றி பெற்று தன்னுடைய அணிக்கு முன்னிலை ஏற்படுத்தி கொடுத்தார்.

அதோடு அர்ஜுன் தன்னுடைய எதிரணியை வீழ்த்தியதன் மூலமாக 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஏ அணி வெற்றியை ருசித்தது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்து இருக்கின்ற இந்திய ஆண்கள் பி பிரிவு அணியானது தன்னுடைய ஒன்பதாவது சுற்றில் அஜர்பைஜான் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் குகேஷ் மற்றும் நிகல் சரின் தங்களுடைய எதிரணிகளிடம் போராடி சமன் மட்டுமே செய்ய முடிந்தது ஆனால் சத்வாணி தோல்வியை தழுவி பின்னடைவை உண்டாக்கினார்.

ஆகவே 9வது சுற்றில் தோல்வியின் பிடியிலிருந்து தன்னுடைய அணியை காப்பாற்றுவதற்கு பிரக்ஞானந்தா வெற்றி பெறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டார். இதில் சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு நுட்பமாக காய்களை நகர்த்திய அவர் 66-வது நகரத்தில் அஜர்பைஜான் வீரர் வசிஃப்பை வீழ்த்தினார்.

ஆகவே இந்த போட்டியை 2-2 என்ற கணக்கில் இந்திய பி அணி சமன் செய்தது அதோடு பதக்கத்தின் வாய்ப்பையும் தக்க வைத்தது. இந்திய சி அணி பராகுவே அணியை சந்தித்தது.

இதில் தமிழகத்தைச் சார்ந்த சேதுராமன் கார்த்திகேயன் மற்றும் அபிமன்யு உள்ளிட்டோர் வெற்றி பெற்று தங்களுடைய அணிக்கு பலம் சேர்த்தனர். அதே சமயத்தில் சூரிய சேகர் தடுமாறிய போதும் இந்திய சி அணி 3-1 என பராகுவே அணியை வீழ்த்தியது.

மகளிர் அணியை பொறுத்தவரையில் 9வது சுற்றில் இந்திய ஏ அணி பலம் வாய்ந்த போலந்து அணிக்கு எதிராக காய்களை நகர்த்தியது. இந்த போட்டியில் கொனேறு ஹம்பி, ஹரிகா மற்றும் தான்யா உள்ளிட்டோர் தங்களுடைய எதிராளியிடம் சண்டையிடாமல் போட்டியை சமன் செய்தனர்.

இருந்தாலும் தமிழக வீராங்கனையும் பிரக்யானந்தாவின் சகோதரிமான வைஷாலி வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை உண்டானது. இதனை கருத்தில் கொண்டு அவர் வெகு நேரம் போராடினார்.

ஆனாலும் அவரை எதிர்கொண்ட போலந்து வீராங்கனை ஒலிவியா 80 வது நகர்த்தலில் வெற்றியை தட்டிச் சென்றார். இதன் மூலமாக இந்திய மகளிர் ஏ அணி தன்னுடைய முதல் தோல்வியை சந்தித்தது.